புதன், 26 செப்டம்பர், 2012

பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனாவுக்கும் காதலா?

டெல்லி: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் மற்றும் அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் காதல் என்று வங்கதேச பத்திரிக்கை வெளியிட்ட செய்தியால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஹீனா ரப்பானி கர். இவருக்கு வயது 34 ஆகிறது. கல்யாணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி- பெனாசிர் பூட்டோ தம்பதியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவால் பூட்டோ. இவருக்கு 24 வயதாகிறது.
இந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாக வங்கதேச பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திதான் இப்போது பாகிஸ்தானை கலங்கடித்து வருகிறதாம்.

ஹீனா பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரோஸ் குல்சார் என்ற பெரும் பணக்கார தொழில் அதிபரை மணந்து அன்னயா மற்றும் தினா ஆகிய 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான(நவம்பரில் அவருக்கு 35 வயது பிறக்கிறது) பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இருவரும் பாகி்ஸ்தானை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகவும் முடிவு செய்துள்ளனராம். இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.
ஆனால் இப்படித் திருமணம் செய்தால் உனது அரசியல் எதிர்காலம் பாழாகி விடும், கட்சியும் போண்டியாகி விடும் என்று சர்தாரி எச்சரித்தாராம். ஆனால் பிலாவல் கேட்பதாக இல்லையாம்.
இந்த காதல் விவகாரம் நீண்ட காலமாக ஓடுகிறதாம். மேலும் அதிபர் மாளிகையில் பிலாவலும், ஹீனாவும் படுக்கையில் இருந்ததை சர்தாரியே நேரில் பார்த்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஹீனாவின் கவனத்தை திசைதிருப்ப சர்தாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரோஸின் தொழிலுக்கு இடையூறு செய்தும் பலனில்லாமல் போனதாம். காரணம், பிரோஸை விவாகரத்து செய்ய ஹீனா ரெடியாகி விட்டதால்.
அதேசமயம், தன்னுடைய காதலியை மணக்க பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பிலாவல் மிரட்டியுள்ளாராம்.
ஹீனா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகப் போவதாக பிலாவல் தன் தந்தையிடம் கூறியுள்ளார். அதிலும் ஹீனா விவகாரத்து பெற்ற பிறகு குழந்தைகள் தனது கணவனுடன் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளாராம்.
இவ்வாறு அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: