மதுரை: கூடங்குளம் கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய
வழக்கில், "தடியடி நடத்தியதாக கூறுவது தவறு; உதயகுமார் வன்முறையை
தூண்டுகிறார்,' என திருநெல்வேலி எஸ்.பி., மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு
தாக்கல் செய்தார்.
மனித உரிமைக்கான மக்கள் ஒன்றிய நிர்வாகி மார்க்ஸ், "கூடங்குளம் அணுமின்
நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது, போலீசார் தடியடி
நடத்தினர். மாவட்ட நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,'
என மனு தாக்கல் செய்தார். வக்கீல் வாஞ்சிநாதன், "காயமடைந்தவர்களுக்கு
நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி விசாரிக்க உத்தரவிட
வேண்டும்,' என மற்றொரு மனு தாக்கல் செய்தார். மனுக்கள் நீதிபதிகள்
கே.சுகுணா, ஆர்.மாலா கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தனதிருநெல்வேலி எஸ்.பி., விஜயேந்திர பிதாரி பதில் மனு: போராட்டக்காரர்கள்,
தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை எதிர்ப்பவர்கள் மீது,
வன்முறையை ஏவுகின்றனர். அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின், சகாயம்,
பெப்பின்ராஜை கொலை செய்ய முயன்றனர். கூடங்குளத்தில் மக்களுக்கு பாதுகாப்பு
அளிக்கவே, தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர
தினத்தன்று, போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடி ஏற்றினர். உதயகுமார்
வன்முறையை தூண்டி, மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்துகிறார். இதனால்,
அப்பகுதி மக்கள் அச்ச உணர்வில் உள்ளனர். உதயகுமார் குற்ற நடவடிக்கையில்
ஈடுபடுகிறார். அவர் மீது கூடங்குளம், பழவூர் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டும்,
அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மக்களுக்கு தடையின்றி, அத்தியாவசிய பொருட்கள்
வினியோகிக்கப்படுகிறது. ஆக.,13 ல் போலீஸ் அதிகாரி அலுவலகத்தில் மனு
கொடுக்க, 200 குழந்தைகளை போராட்டக்காரர்கள் அழைத்துச்சென்றனர். குழந்தைகளை
தவறாக பயன்படுத்துகின்றனர். செப்., 9ல் பெண்கள், குழந்தைகளை கேடயமாக
நிறுத்தி, 144 தடை உத்தரவை மீறினர். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அமைதியாக கலைந்துசெல்லுமாறு கூறினோம். எங்கள் மீது, கற்களை வீசி தாக்கினர்.அணுமின் நிலையத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில், 5000 பேர் முன்னேறினர். நாங்கள் சமாதானம் செய்தும் பலனில்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் பலர் காயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீசினோம். போராட்டக்காரர்கள், கடற்கரை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு பெண் எஸ்.ஐ.,யை கடத்தினர். இரண்டு பஸ்களை சிறைப்பிடித்தனர். டாஸ்மாக் கடையிலிருந்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்றனர். டீசல் பங்க்கை சேதப்படுத்தினர். கடல் நீருக்குள் நின்று, பல மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மயக்கமடைந்த சகாயம், பின் இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது மூளையில் ரத்தம் உறைந்ததால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு, கடலோர காவல்படை காரணம் என கூறுவது தவறு. வீடுகள், வாகனங்கள், குடிநீர் குழாய் இணைப்புகளை போலீசார் சேதப்படுத்தவில்லை. தடியடி நடத்தியதாக கூறுவது தவறு.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் வக்கீல்கள் ரஜினி, பிரபுராஜதுரை ஆஜராகினர். விசாரணையை அக்.,3 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக