புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்கள் தனது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம், பலனை பெற்றுக் கொள்ளவும், அதை பாதுகாப்பதற்காகத்தான் காப்புரிமை சட்டங்கள் இருக்கின்றன, அவை சரியானவை என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், ஒரு தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை செம்மைப்படுத்துவதன் மூலம் தான் உருவாகிறது, உருவாக முடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஒரு தொழில்நுட்பம் புதிதாக உருவாகி சந்தைக்கு வரும் போது அது காப்புரிமை சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் பலரும் அதை பயன்படுத்துவதும், செம்மைப்படுத்துவதும், பரிணாம வளர்ச்சியடைவதும் தடை செய்யப்படுகிறது.
உலகில் மனிதனின் முதல் கண்டுபிடிப்புகளான நெருப்பும், சக்கரமும் தான் அனைத்து விஞ்ஞான வளர்சிக்கும், மனித சமூக வளர்சிக்கும் அடித்தளம். நெருப்பும், சக்கரமும் கண்டுபிடிக்கப்படவில்லையெனில் இன்றைய பல கண்டுபிடிப்புகளும், நவீன உலகமும் கூட இல்லை. தனது கண்டுபிடிப்பு என்று புதிய தொழில்நுட்பத்தை மூடிவைத்துக்கொள்ளும் இந்த முதலாளித்துவ நிறுவனங்கள், நெருப்பு, சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கு ராயல்டி கொடுப்பதாக இருந்தால் முழு மனித சமூகத்திற்கும் பல பில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கண்டுபிடிப்பு, காப்புரிமையின் மூலம் மூடிவைக்கப்பட்டிருக்குமேயானால், அதை பயன்படுத்தி அதிலிருந்து புதியதாக ஒன்றையும் தன்னால் கண்டுபிடித்திருக்க முடியாது என்பது வெட்க்ககேடான உண்மை. வளர்ச்சி பெற்றிருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் தான் மட்டுமே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற லாபவெறியால் எதையும் சமூகத்திற்கு அளிக்காமல் “காப்புரிமை” என்ற பெயரில் தடையிட்டும் திரையிட்டும் மறைத்து வைக்கிறது முதலாளித்துவம்.
தொழில்நுட்பமும், அதன் பயன்பாடும் சமூகத்திற்கு பொதுவாக்கப்படும் போது அது அளப்பரிய சாதனைகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே சோசலிச ரஷ்யாவிலும், சோசலிச சீனாவிலும், நிருபிக்கப்பட்டுள்ளது. தற்கால சமூகத்திலும், லினெக்ஸ் இயங்குதள அமைப்பு (LINUX Operating Sytem-OS) திறந்த மென்பொருளாகவும் (Open Source), காப்புரிமை கட்டுப்பாடுகளற்ற திறந்த உரிமமுள்ளதாகவும் (Open Licence) இருக்கிறது.
இவ்வாறு கட்டுப்பாடுகளற்று இருப்பதால், சமூகத்தில் எவரும் அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், அந்த மென்பொருளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் எவரும் பங்களிக்கலாம். இதன் மூலம் இன்று லினெக்ஸ்-இல் பல அளப்பறிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, பீடுநடை போடுகிறது. சமூகரீதியிலான உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, சமூகரீதியிலான பயன்பாடு என்பதற்கு லினெக்ஸ் சிறந்த உதாரணமாகும்.
முதலாளித்துவ சமூகத்தில் சொத்துடமை சார்ந்த உற்பத்தி உறவுகள் பெரும்பான்மை மக்களான உற்பத்திசக்திகளுக்கு பொருத்தமில்லாமல் இருப்பதுடன் உற்பத்திசக்திகளின் வளர்ச்சியை தடை செய்யும் விலங்காகவும் மாறிவிடுகின்றன என்றார் மார்க்ஸ். அந்த விலங்கை உடைத்தெறியாத வரை சமூகத்தின் பயன்பாட்டிற்கான சமூக நலனுக்கான தொழில்நுட்பம் வளராது, சமூகமும் அடுத்த கட்டத்திற்கு நகராது.
படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக