சனி, 29 செப்டம்பர், 2012

அரசியல் கட்சிகளால் ஆயுதம் ஏந்தும் கல்லூரி மாணவர்கள்

சென்னை கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் செய்திகள், சமீபகாலமாக அதிகளவில் வெளியாகின்றன. இந்த வன்முறைக்கு பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்ப தாக, "மோதல்' மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பம் எங்கே?
பெரும்பாலான மோதல்களுக்கு, "பஸ் ரூட்' பிரச்னையே தொடக்கப் புள்ளியாக உள்ளது. குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள், பேருந்தில் "கானா' பாடி செல்வது வழக்கம்.அப்போது, மற்றகல்லூரி மாணவர்களை தரம் தாழ்த்தி, தங்கள் கல்லூரியின் புகழை பாடுவர். இதனால், அந்த பேருந்தில் இருக்கும் மற்ற கல்லூரி மாணவர்களுடன் கை கலப்பு ஏற்படுகிறது.அதே போல, ஒரே பேருந்தில், வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் செல்லும் போது, குறிப்பிட்ட கல்லூரி மாணவியரை கிண்டல் செய்யும் போது, மோதல் ஏற்படுகிறது.
மாணவர் போர்வையில்...:


குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும்கல்லூரி மாணவர்கள்; தங்கள் கல்லூரியிலும், மற்ற கல்லூரிகளிலும், தங்கள் "பஸ் ரூட்டின்' பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக, நண்பர்களையும், அந்தந்த பகுதியில் வசிக்கும் அரசியல் சார்புடையவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்கின்றனர்.இதனால், இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் இடையே பிரச்னை வரும் போது, அந்தந்த மாணவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள் போர்வையில், ஆயுதங்களோடு மோதலில் ஈடுபடுகின்றனர். மோதல் முற்றும் போது, கல்லூரி மாணவர்களையும் ஆயுதம் எடுக்க அவர்களே ஊக்கம் கொடுக்கின்றனர்.

அரசியல் கனி:

எந்த பேருந்து வழித்தடத்தில், அதிக மாணவர்கள் பயணிக்கின்றனரோ, அவர்களே கல்லூரிதேர்தலில், வேட்பாளர்களை நிறுத்துவர்.தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு, வெகுஜன அரசியல் கட்சிகளில், பொறுப்பும், நிதியும் வழங்கப்படுவதால், கல்லூரி தேர்தல், பொதுத்தேர்தலுக்கு இணையான வகையில் நடக்கிறது.மாணவர் தேர்தல் நடப்ப தற்கு நான்கு மாதங்களுக்கு முன், அரசியல்கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆள் மற்றும் பண பலத்தை வழங்கி, ஒட்டுமொத்த தேர்தல் செலவையும் ஏற்றுக் கொள்கின்றன. அரசியல் கட்சிகளின் பின்புலம் இருப்பதால், ஏற்கனவே, "வானளாவிய' சுதந்திரம் பெற்ற மாணவர்கள், எதையும் துணிந்து செய்யும் தைரியத்திற்கு வந்து விடுகின்றனர்.

"இதெல்லாம் சாதாரணம்':


மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, மாநில கல்லூரி மாணவர் கூறியதாவது:
ஒரு ஏரியாவுக்கும், அடுத்த ஏரியாவுக்கும் பிரச்னை வருகிற போது, எப்படி ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார்களோ, அது போலவே, நாங்களும் சண்டை போடுகிறோம்.கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் சண்டை போடுவது எப்போதும் நடக்கும். சமீபகாலமாக, ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுவதால், பொதுமக்கள் புதிதாக பார்க்கின்றனர். மற்றபடி இதெல்லாம் சாதாரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவர் கூறுகையில், ""எங்கள் "பஸ் ரூட்' மாணவர் பாதிக்கப்பட்டால், அது ரூட்டில் வரும் அனைத்து மாணவர்களின் மானப் பிரச்னை. அதனால், ஆயுதங்களுடன் மோதுகிறோம். போலீசார் எங்களை கைது செய்தாலும், பெரும்பாலும், எதிர்காலம் கருதி, வழக்கு பதிவு செய்வதில்லை. அதனால் தைரியமாக, மோதலில் ஈடுபடுவோம்,'' என்றார்

கிடப்பில்...:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வகைவன்முறை அதிகரித்து வந்ததை அடுத்து, அப்போதய சென்னை போலீஸ் கமிஷனர், அனைத்து கல்லூரி களின் முதல்வர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கேட்டனர்.முதல்வர்களும் கண்ணீர் வடித்தபடி, மாணவர்களின் லீலைகளை எடுத்துக் கூறினர். உடனே, அன்றைய கமிஷனர், "பஸ் டே"யால் பல பிரச்னைகள் வருவதை கருதி, "பஸ் டே'க்கு தடை விதித்தார்.அதன் பிறகு, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். சிறிது நாள் தொடர்ந்த நடவடிக்கை, பின்னர்அப்படியே கிடப்பில் போடப்பட்டது.மாணவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்திருந்தால், இப்படி சாலையில் மோத மாட்டார்கள் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

"சினிமா, பெற்றோர் தான் காரணம்':


வன்முறை கலாசாரம் குறித்து, உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா கூறியதாவது:
மாணவர்களின் இந்த நிலைக்கு சினிமாவே காரணம். எதையும் பசுமரத்தாணி போல் உள்வாங்கும் பருவத்தில் இருப்பதால், சினிமா முன்வைப்பதை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். கல்லூரி மாணவர் என்றால், திமிராக திரிய வேண்டும்; கட்டாயம் காதலி இருக்க வேண்டும்; எதற்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும் என, சினிமா காட்டுகிறது. திரையில் பார்ப்பதை மாணவர்கள், யதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளுக்கு நாள், கல்லூரி மாணவர்கள் பற்றிய கவலை, பெற்றோர்களிடம் குறைந்து வருகிறது. இந்த இரண்டும்மாறினால், மாணவர்களிடம் மாற்றம் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: