சனி, 29 செப்டம்பர், 2012

சேது கால்வாய்த் திட்டம் மேலும் தாமதிக்கக்கூடாது

கி.வீரமணி அறிக்கைL  2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த பிறகு, இராமன் பாலம் அங்கே இடிபடுகிறது என்று கூறி, மதவாத மூடநம்பிக்கையைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு உச்சநீதி மன்றத்தில் நிறுத்தச் சொல்லி வாதாடிய பார்ப்பனீயத்தின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.தனது கட்சியின் இரண்டு, மூன்று தேர்தல் அறிக்கைகளில், ஏன் விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு முடிக்கவில்லை என்று குற்றம் சுமத்திய அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா

சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகள் மீண்டும் துவக்கி நடத்திட தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுத்து, குரல் கொடுக்க முன் வருதல் அவசியம் தேவை தேவை என்று தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (27-9-2012) புதுடில்லியில் திருமதி சோனியா காந்தி அவர்களது தலைமையில் கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) யின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைப் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகளை மீண்டும் துவக்கி நடத்திட உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும், இது பற்றி விரைவில் மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.

இதை கட்சிக்கப்பாற்பட்ட அனைத்து மக்களும், தமிழ்நாட்டு வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டுள்ள கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்கும் என்பது உறுதி.
இதற்கு முன் சுமார் 2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த பிறகு, இராமன் பாலம் அங்கே இடிபடுகிறது என்று கூறி, மதவாத மூடநம்பிக்கையைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு உச்சநீதி மன்றத்தில் நிறுத்தச் சொல்லி வாதாடிய பார்ப்பனீயத்தின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.
தனது கட்சியின் இரண்டு, மூன்று தேர்தல் அறிக்கைகளில், ஏன் விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு முடிக்கவில்லை என்று குற்றம் சுமத்திய அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதற்கு நேர்மாறாக இராமன் பாலம் உடையும் எனவே, அது கூடாது என்றும் கூறியதை என்னவென்று சொல்வது? அதிலும் சுப்பிரமணிய சுவாமி ஒருபுறம், இவர் இன்னொரு புறம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதன் விளைவாக உச்சநீதிமன்றம் ஒரு நிபுணர் ஆய்வுக் குழுவிடம் வேறு வழித்தடங்களில் திருப்ப வாய்ப்பு உள்ளதா என்று ஆராயும்படி கேட்டது. அந்த நிபுணர் பச்சோரி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஆராய்ந்து ஆறாம் வழித்தடம்தான் - தற்போது ஆடம்ஸ் பாறைகள் உள்ள - (கற்பனையான இராமன் பாலம் பகுதி) பகுதிதான் உகந்தது. வேறு தடங்களில் மாற்றினால் வேறு சிக்கல் வரும். பணிகள் எளிதில் முடியாது என்று திட்ட வட்டமாகவே கூறிவிட்டது.
இனியும் காத்திராமல், தென் மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பினையும் பொருளாதார வளர்ச்சியையும் தரும் சேது கால்வாய்த் திட்டத்தை முடிக்கும் பணியை - உச்ச நீதிமன்றத்தினை உடனே அணுகி, வழக்கை முடித்து செயல்பாட்டைத் துவக்கிட வேண்டியது அவசரமும் - அவசியமும் ஆகும்!
எனவே உண்மையான தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க முன்வருதல் தேவை!  தேவை !!
தமிழர்களின் 150 ஆண்டு கால கோரிக்கையும் தேவையுமான இத்திட்டம் - மக்கள் வரிப்பணம் ரூ.2000 கோடி செலவு செய்யப்பட்டும் முழுமையடையாமல் இருப்பது வேதனைக்குரியது என்பதாலும் அதன் மூலம் கிடைக்கும் பயன் மிகவும் முக்கியம்.
இலங்கைக்கு உதவிடும் வகையில் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் நடவடிக்கை அமைகிறதோ என்ற அய்யத்தையும் எவரும், எளிதில் புறக்கணித்துவிடமுடியாது!
எனவே விரைந்த செயல் தேவை!

கருத்துகள் இல்லை: