புதன், 26 செப்டம்பர், 2012

மின் தடைக்கு எதிராக மக்கள் கொதிப்பு..ஜெ. அவசர ஆலோசனை

 Jaya Convenes Cabinet Meeting On Power Cut
சென்னை: தமிழகம் முழுவதும் மின் தடை விவகாரம் மக்களை கொந்தளிக்க வைத்து வரும் நிலையில், பொன்னேரியில் மின்வாரிய அலுவலகத்தை தாக்கி அதிகாரிகளைய சரமாரியாக அடித்து மக்கள் தங்களது கொதிப்பைக் காட்டியுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதில் மின்தடை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. கூடுதல் மின்சாரத்தைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அப்போது முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை மின்தடை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. தொழில்துறை முற்றிலும் முடங்கிப் போய் வி்ட்டது. சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் நினைத்த நேரத்தில் ஒரு சட்னியைக் கூட அரைக்க முடியவில்லை. மின்விசிறிகளை சரிவர பயன்படுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மின்தடையாக உள்ளது. 10 மணி நேரம், 14 மணி நேரம், 16 மணி நேரம் என்று மாநிலத்தை கூறு போட்டு குலைத்துக் கொண்டிருக்கிறது மின்தடையின் கோரம்.
மக்கள் பெரும் தவிப்புடனும், கோபத்துடனும், கொந்தளிப்புடனும் உள்ளனர்.
மின்தடையைப் போக்குவதை விட்டு விட்டு ஏசி போடாதீர்கள், விளக்குகளைப் போடாதீர்கள், இன்டக்ஷன் ஸ்டவ்வை பயன்படுத்தாதீர்கள் என்று மக்களுக்கு் தேவையில்லாமல் அறிவுரை கூறி மின்வாரிய அதிகாரிகளும் மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த கோபத்தின் எதிரொலிதான் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு தாக்கி சூறையாடிய சம்பவம்.
இந்த சம்பவம் தமிழக அரசை அதிர வைத்துள்ளது. இதேபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பரவி விடலாமோ என்ற அச்சமும் அரசுக்கு எழுந்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் முற்பகல் 11 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
அதில் மின்தடை விவகாரம்தான் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. தற்போது சென்னையை மட்டும் மின்தடையிலிருந்து ஓரளவு விட்டு வைத்துள்ளனர். இங்கு ஒரு மணி நேரம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக மின்தடை அமலாகி வருகிறது. இந்த நேரத்தைக் கூட்டுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே விட்டிருந்தது போல தொழில் நிறுவனங்களுக்கு மின் விடுமுறை அறிவிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது

கருத்துகள் இல்லை: