புதன், 26 செப்டம்பர், 2012

இந்தி விஷயத்தில் வேண்டாம் வீம்பு!

மொழிப்போர் / அத்தியாயம் 8
இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மெல்ல மெல்லப் பொங்கியெழுந்த சமயத்தில் அண்டைப் பகுதியான ஐதராபாத்தில் போர்ச்சூழல் உருவானது. சமஸ்தான இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டிவந்த சமயத்தில் ஐதராபாத் சமஸ்தானம் முரண்டு பிடித்தது. விளைவு, ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர் படைகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.
ஐதராபாத்தில் உள்ள கலவரச் சூழல் வேறு. இங்கே இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வேறு.  இரண்டும் ஒன்றாகி, மிகப்பெரிய கலவரங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வேகத்தைச் சற்றே குறைத்துக்கொள்வது என்று போராட்டக்குழு முடிவெடுத்தது. 16 செப்டெம்பர் 1948 அன்று போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் பெரியார். இது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை சோர்வடையச் செய்தது. அவர்களைத் தேற்றும் பொறுப்பை அண்ணா கையில் எடுத்துக்கொண்டார்.
‘போராட்டம் தீவிரமாகவும் வெற்றியை நோக்கியும் சென்று கொண்டிருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வரும்வரைக்கும் நம்முடைய நேரடி நடவடிக்கைகளை நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறார் பெரியார்.’ என்றார். அதன் அர்த்தம், ஹைதராபாத் யுத்தம் முடிந்ததும் மொழிப்போர் மீண்டும் தொடங்கும் என்பதுதான்.

ஹைதரபாத் நிஜாம் சரண் அடைந்து, யுத்தம் முடிவுக்கு வந்தபிறகும்கூட இந்தி விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. இதனால் அதிருப்தியடைந்தார் பெரியார். ‘மீண்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கும். அப்போது அரசாங்கம் அதனை ஒடுக்கமுயலும். தடியடிகள், துப்பாக்கிச்சூடு எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் எங்கள் அழைப்பு வந்ததும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியே வாருங்கள். படிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அல்லது சிறையிலேயே பள்ளி நடத்தலாம். ஆசிரியர்களையும் உடன் அழைத்துவாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக 23 அக்டோபர் 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழக மாநாடு கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினார் அண்ணா.
‘மறியல் தொடங்குவதற்கு முன்னரே நமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னோம். நாடாளும் சர்க்கார் அவற்றைக் கேட்க மறுத்தது. காரணங்கள் பல காட்டினோம். காதுகொடுக்க மறுத்தது. கட்டாயமாக்க வேண்டாம் என்று நாம் கெஞ்சினோம். அவர்கள் மிஞ்சினார்கள். புலவர்களைக் கொண்டு புத்திகூறச் செய்தோம்; புன்மையாளர்கள் மதித்தனர் இல்லை. கலை நிபுணர் கல்யாண சுந்தரனாரும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரும் இந்தியால் தமிழ் கெடும் என்று கூறிவிட்டபின்னர் முதன்மந்திரி ஓமந்தூர் ரெட்டியாரும் அமைச்சர் அவினாசியாரும், ‘கெடாது, கெடாது’ என்று எவ்வளவுதான் கூறினாலும் பொதுமக்களால் இவர்கள் வார்த்தையில் எப்படி நம்பிக்கை கொள்ளமுடியும்? வாதாடிப் பார்த்தோம். பயனில்லை. மறியலைக் கொஞ்சம் நிறுத்தியும் பார்த்தோம். புத்தி வரவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் போரும் நின்றுவிட்டது. எனவே, அறப்போர் மீண்டும் தொடங்க வேண்டியதுதான். தொடங்கும் நாளை தலைவர் அறிவிப்பார்’
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மீண்டும் நவம்பர் முதல் தேதி முதல் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கட்டாய இந்திக்கு எதிராக மறியல் நடத்துங்கள்; அரசு தடைவிதித்தால் அதையும்மீறி மறியல் செய்யுங்கள்; கைது செய்து வழக்கு தொடர்ந்தால் ஜாமீனில் வெளியே வராதீர்கள்; எதிர்வழக்கு ஆடாதீர்கள்; அபராதம் விதித்தால் செலுத்தாதீர்கள் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் போராட்டக்காரர்களுக்குத் தரப்பட்டன.
30 அக்டோபர் 1948 அன்று சென்னை ஜிம்கானா திடலில் திரு.வி.கலியாண சுந்தரனார் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியாளர்களே, ஆணவத்தால் அழியாதீர். நாட்டு மக்களின் மனதை நன்கு அறிந்து நான் கூறுகிறேன். இந்தி விஷயத்தில் வீம்பு வேண்டாம். வீண் பிடிவாதம் வேண்டாம். கட்டாயத்தை விட்டுவிடுங்கள். கபடம் வேண்டாம். கர்வம் வேண்டாம். பெரியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். இன்றிரவே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அறப்போர் தொடங்குவதற்குள் நாளைய தினமே ஒரு உத்தரவை வெளியிடுங்கள், கட்டாய இந்தியைக் கைவிட்டுவிட்டோம் என்று. அறவழி நாடுகள். அன்பு மார்க்கம் தேடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
அறிவித்தபடியே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுக்கத் தொடங்கியது. பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கும்பகோணம், தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர், திருவாரூர், நன்னிலம், கொடவாசல், பேரளம், கல்லக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்தது அரசு. என்றாலும், தடையை மீறிப் பொதுக்கூட்டங்களும் மறியல்களும் நடந்தன. அவற்றைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. தடியடிப் பிரயோகம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார், கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், கே.ஏ. மணியம்மை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ப்பட்டு, சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. இவர்களில் என்.வி. நடராசனைக் கைதுசெய்த காவலர்கள், அவருடைய உடலில் இருந்து ரத்தம் வரும்வரைக்கும் தாக்கியதோடு, அவருக்குக் கைவிலங்கு போட்டபடியே வீதியில் அழைத்துச்சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன கதி ஏற்படும் என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோருக்குப் புரியவைக்க காவலர்கள் பயன்படுத்திய உத்தி அது.
சென்னை மாகாணத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்தி மொழி குறித்து தேசிய அளவிலான விவாதம் எழுந்தது. குறிப்பாக, சுதந்தர இந்தியாவின் ஆட்சி மொழி எது என்பது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் எழுந்தன. இந்திய அரசியல் நிர்ணய சபை 4 நவம்பர் 1948 அன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் மொழிப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய எல்.கே. மெய்திரா என்ற உறுப்பினர், ‘நம்முடைய நாடாளுமன்றத்தில் இந்தி மொழியில் பேசாவிட்டால் சுதந்தரம் என்பது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடும்’ என்றார். அவருடைய கருத்துக்கு வேறுசில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்தக் கருத்தை தென்னகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏற்கவில்லை.
‘தென்னக மக்கள் சார்பாக ஒரு எச்சரிகையைத் தெரிவிக்க விரும்புகிறேன். தென்னாட்டில் ஏற்கெனவே பிரிவினை கேட்கும் சக்திகள் (திராவிடர் கழகம்) உள்ளன. அவற்றின் பலத்தை நாம் முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சிசெய்யவேண்டும். உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதற்குப் பதிலாக இந்தி ஏகாதிபத்தியம் என்ற சவுக்கடியைக் கொடுக்கிறார்கள்’ என்றார் டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
மொழி விவகாரத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் என்று இரண்டு கூறுகளாகப் பிரிந்துநின்று விவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கூர்மையடைவதற்குப் பதிலாக கடுமையடைந்தது. அப்போது பேசிய பிரதமர் நேரு, ‘அவசரம் காட்டினால் நமது நோக்கங்கள் நிறைவேறாது. சிறுபான்மையினர் மீது அவர்கள் விரும்பாத ஒன்றை பெரும்பான்மை கொண்டு திணிக்க முற்பட்டால், இந்த அவையோ அல்லது நாடோ எதை அடைய விரும்புகிறதோ அதற்கு வெற்றி கிடைக்காது’ என்றார்.
மொழி விவகாரத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. சுதந்தர இந்தியாவின் அரசியல் சட்டம் இந்தியில் நிறைவேற்றப்பட்டதாக இருக்கவேண்டும் என்றார் ராஜேந்திர பிரசாத். ஆனால் அரசியல் சட்டம் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். இந்தி மொழியாக்கத்தை அங்கீகரித்தால் ஒவ்வொரு
இந்தி சொல்லுக்கும் பொருள் கொள்வது தொடர்பாக அவையில் காரசாரமான விவாதங்கள் ஏற்படும். ஒருமித்த கருத்து ஏற்படாது. நேரம் விரயமாகும் என்றார் பிரதமர் நேரு.
இந்தியா, ஆங்கிலமா என்பது தொடர்பாக ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையே கடிதப் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இருவருமே தத்தமது நிலையில் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து 8 ஆகஸ்டு 1949 அன்று இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை மீண்டும் கூடியது. அதில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
முக்கியமாக, முதல் பத்து ஆண்டுகளுக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்ற யோசனை சொல்லப்பட்டது. ஆனால் ஆங்கில ஆதரவாளர்களோ, ‘அல்லது’ என்ற பதத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தை அப்புறப்படுத்தப்பார்க்கிறீர்கள் என்று குற்றம்சாட்டினர். மேலும், முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். இந்தியைத் திணிக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விரும்பினால் ஆங்கிலத்துடன் இந்தியையும் முதல் பதினைந்து ஆண்டுகாலத்துக்கு ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்றனர்.
வாதப் பிரதிவாதங்கள் நீடித்துக்கொண்டே சென்றதையடுத்து, மத்திய ஆட்சிமொழி தொடர்பாகப் பொது உடன்பாடு காண்பதற்கு குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இது அரசின் சார்பாக மைக்கப்பட்ட குழு அல்ல; காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆலோசனை கூறுவதற்காக, அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு!


கருத்துகள் இல்லை: