டெல்லி: ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து
திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியதால் அமைச்சரவை மாற்றத்தில் இடம்
கிடைக்குமா? என்று கூட்டணிக் கட்சிகள் ஆவலுடன் உள்ளன. குறிப்பாக திரிணாமுல்
காங்கிரஸ் வசம் இருந்த ரயில்வே துறையை திமுக கோருவதாக டெல்லி தகவல்கள்
தெரிவிக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸின் முகுல் ராய் உட்பட 6
அமைச்சர்கள் அண்மையில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரயில்வே துறையானது
நெடுஞ்சாலை துறை அமைச்சர் சி.பி.ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக
கொடுக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஊழல் புகாரில் சிக்கியதால் மத்திய அமைச்சர் வீரப்த்ர சிங்க் தமது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் உடல்நலக் குறைவால் காலமானார். இவர்கள் வகித்து வந்த துறைகள் காங்கிரஸ் கட்சியின் வயலார் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அரசில் 3 கேபினட் அமைச்சர்களையும் 4 இணை அமைச்சர்களையும் திமுக பெற்றிருந்தது. அக்கட்சியைச் சேர்ந்த ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் அடுத்தடுத்து மத்திய அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்தனர். ஆனால் தங்கள் கட்சியில் வேறு யாரையும் அமைச்சர்களாக நியமிக்கும்படி திமுக தலைமை கேட்கவில்லை. இதனால் கேபினட் அமைச்சராக மு.க. அழகிரி மட்டுமே இருந்து வருகிறார். தற்போது திரிணாமுல் விலகியிருக்கும் நிலையில் திமுக அமைச்சர் பதவிகளைக் கோரக் கூடும் எனத் தெரிகிறது. டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், ஹெலன் டேவிட்சன், வசந்தி ஸ்டான்லி ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்கின்றன அறிவாலயம் வட்டாரங்கள். திமுகவைப் போல தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூடுதல் அமைச்ச்ர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. குறிப்பாக ரயில்வே துறையை திமுக கோருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ராகுல்காந்தியோ தமிழக காங்கிரஸை சேர்ந்த மேலும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக