சனி, 29 செப்டம்பர், 2012

அமைச்சர்கள் யாரும் பெருச்சாளிகள் பட்டியலில் இடம்பெற இல்லை!

Viruvirup
தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விரிக்கப்பட்ட வலையில் 41 பூனைகள், 15 எலிகள் சிக்கின. “எலிகளை பிடிக்க மேற்கொண்ட நடவடிக்கையில் எலிகளைவிட அதிக எண்ணிக்கையில் பூனைகள் சிக்கியது இந்த அரசின் சாதனை” என தமிழக சுகாரத்துறை அமைச்சரின் அறிக்கை திங்கட்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நர்சிங் மாணவிகள் தங்கும் விடுதியில் எலிகளை ஒழிக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அரசு வைத்தியசாலையில் இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் எலிகளை ஒழிக்க, சிட்டி பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் என்ற நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மாதத்திற்கு ரூ.26,460 என்ற வீதம் ஓர் ஆண்டுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.
ஒரு மருத்துவமனையில் எலிகளை ஒழிக்க, வருடத்துக்கு ரூ.3 லட்சத்தைவிட அதிக தொகை! இந்த ரூ 3 லட்சத்தில், நிறுவனத்துக்கு எவ்வளவு, அமைச்சருக்கு எவ்வளவு, எலிக்கு எவ்வளவு என்ற கணக்கு சரியாக வேலை செய்யவில்லை போலும். 4 நாட்கள் நடைபெற்ற எலி ஒழிப்பு ஆபரேஷனில், 10 எலிகள் மட்டுமே இறந்தன!
அதையடுத்து, புதிய திட்டம் வகுக்கப்பட்டது.
எந்த அமைச்சருக்கு இந்த ஐடியா தோன்றியதோ, மருந்துக்கு மசியாத எலிகளை மடக்கிப் பிடிக்கும் திட்டத்தில், நரிக்குறவர்களும், இருளர்களும் இறக்கி விடப்பட்டனர்.
எலி, பூனை, மற்றும் குரங்கு பிடிக்கும் பணிக்காக 4 நரிக்குறவர்களையும், பாம்பு பிடிக்கும் பணிக்காக 2 இருளர்களையும் நியமித்தது தமிழக அரசு. சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காண்டாமிருக நடமாட்டம் கிடையாது என்பதால், அவற்றை பிடிக்க யாரும் நியமிக்கப்படவில்லை.
தமிழக அரசு ஊதியத் திட்டப்படி, எலி, பூனை, குரங்குகளை பிடிப்பவர்களுக்கு ரூ80 வழங்கப்படுகிறது. பாம்புகளை பிடிப்பவர்களுக்கு தினமும் ரூ300 ஊதியம் வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வலைகளை விரித்து 6 பூனைகளை நரிக்குறவர்கள் பிடித்தனர். அன்று இரவில் மட்டும் 20 பூனைகளை மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து நரிக்குறவர்கள் பிடித்தனர். நேற்று மட்டும் 15 பூனைகள் பிடிப்பட்டன.
பூனைகளை பிடிக்கும் போது குறுக்கே ஓடிய 10 பெருச்சாளி உட்பட 15 எலிகளையும் உயிருடன் நரிக்குறவர்கள் பிடித்தனர். இது நடந்து கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் யாரும் குறுக்கே வரவில்லை என்பதால், 10 பெருச்சாளி எண்ணிக்கையில் அவர்கள் உள்ளடக்கப்படவில்லை.
நேற்று இருளர்கள் வராததால், பாம்புகள் பிடிக்கும் பணி நடைபெறவில்லை. இன்றிரவு பாம்புகள் அகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: