நேற்று மாலை மட்டக்களப்பு மாநகர சபை மேயரின் வாசஸ்தலத்தில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் தான் தாக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகமுமான ஆர்.பிரபாகரன் புகாரிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்மிரர் இணையத்தளத்திடம் ஆர்.பிரபாகரன் கூறுகையில்,"புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் உள்ள கடைத்தொகுதியில் தனக்கு 5 கடைகளும் உணவு விடுதி மற்றும் சிற்றுண்டிசாலையும் வழங்கும்படி மேயர் சிவகீதா பிரபாகரனிடம் கோரியிருந்தார்.
இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை சிவனேசதுரை சந்திரகாந்தன் தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல்விடுத்தார்.
இதனையடுத்து எனக்கு எதுவும் நேர்ந்தால் முதலமைச்சர் சந்திரகாந்தன் தான் பெறுப்புக் கூற வேண்டும் என மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
பஸ் நிலைய கடை வழங்குவது தொடர்பான விசேட கூட்டம் நேற்று மாலை மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தனது அடியாட்களுடன் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தன்னை தாக்கியதுடன் கழுத்திலிருந்த 4 1/2 பவுண் தங்கச் சங்கிலியையும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்தார்.
அவருடன் வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினார்களான பிரசாந்தன், பிரதீப் மாஸ்டர் மற்றும் முதலமைச்சரின் ஆலோசகர் செல்வேந்திரன் ஆகியோர் உடபட 25 பேர் கொண்ட கும்பல் என்னை தாக்கியது.
தற்போது நான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு உட்காயங்கள் உள்ளன.
எனக்கு முதலமைச்சர் தாக்கியமை தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாரிடமும் மட்டக்களப்பு பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்" என்றார் ஆர்.பிரபாகரன்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடியை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,
"மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட நான்கு ஐந்து பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டவர்கள் சிறு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்" என்றார்.
தாக்கிய மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் தனக்கு தெரியாது எனவும் இச்சம்பவத்தில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்புபட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பல தடவை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தனை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,இச்சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பில்லை. நேற்று மாலை மட்டக்களப்பு மேயரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு முதலமைச்சருடன் நானும் சென்றிருந்தேன்.
அங்கு வைத்து முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனோ அல்லது அவரது குழுவினரோ எந்தவொரு மாநகர சபை உறுப்பினரையும் தாக்கவில்லை. எனினும் அங்கிருந்த சிலர் முதல்மைச்சர் என்று கூட மரியாதை செலுத்தாமல் அவதூறான வார்த்தைகளால் ஏசினார்கள்.
இது தொடர்பில் நாங்கள் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்" என்றார் அவர்.
மாநகர சபை உறுப்பினர் என்னை தாக்க முற்பட்டார்: முதலமைச்சர் வாக்குமூலம்
தனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே நான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றதாகவும் மாநகர சபை உறுப்பினர் ஆர்.பிரபாகரன் தன்னை தாக்க முற்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று சனிக்கிழமை வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
"மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிட கடைத்தொகுதி தொடர்பான கூட்டமொன்று நேற்று காலை நடைபெறுவதாகவும் அதில் தன்னையும் கலந்து கொள்ளுமாறும் எனக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.
ஆனால் காலையில் வேறு முக்கிய நிகழ்வு இருந்ததால் மாலையில் அக்கூட்டத்தை நடாத்துமாறு கூறினேன்.
அதன்படி நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு, எனக்கு விடுக்கப்பட்ட அழபைப்பின் பேரில் நான் சென்றேன்.
அக்கூட்டத்தில் எனது ஆதரவான மாநகர சபை உறுப்பினாகளுக்கும் இன்னும் சில மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் சிறியளவிலான கைகலப்பும் கலவரமும் ஏற்பட்டது.
அப்போது மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத் தாக்க முற்பட்டார். அதன் போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டனர். அத்துடன் நான் வெளியேறி விட்டேன்" என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
- தமிழ்மிரர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக