செவ்வாய், 25 டிசம்பர், 2018

CM குமாரசாமி:: என் கட்சிக்காரரை கொன்றவரை சுட்டுத் தள்ளுங்கள்.. காமெராவில் சிக்கினார் .


Karnataka CM HD Kumaraswamy caught on cam telling someone on the phone 'He(murdered JDS leader Prakash) was a good man, I don't know why did they murder him. Kill them (assailants) mercilessly in a shootout, no problem. (24.12.18)
BBC : தமது கட்சிக்காரர் ஒருவரை கொலை செய்த நபர்களை இரக்கமின்றி சுட்டுத்தள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய காட்சி, கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களிலும் வைரலாகப் பரவியது. இது சர்ச்சையானதை அடுத்து குமாரசாமி தமது பேச்சு குறித்து விளக்கம் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
தன் தடாலடிப் பேச்சுகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் குமாரசாமியின் இந்த சமீபத்திய பேச்சின் பின்னணி என்ன?
கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் வட்டத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹொன்னலகிரி பிரகாஷ் (48) சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமான இவர் மாண்டியா மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெறக் காரணமாக இருந்தவர் என்று கூறப்பட்டது.

இவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. பரபரப்பான பெங்களூரூ - மைசூரூ நெடுஞ்சாலையில் பல மணி நேரம் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து புறப்படும் முன்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் செல்பேசியில் உரையாடிய முதல்வர் குமாரசாமி "அவர் நல்ல மனிதர். இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் இதைக் கையாளப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இது உங்கள் பொறுப்பு. இரக்கமில்லாமல் அவர்களைக் கொல்லுங்கள். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்குக் கவலையும் இல்லை" என்று பேசியுள்ளா். இந்தப் பின்னணியில் மத்தூர் வட்டத்தில் இரண்டு- மூன்று கொலைகள் நடந்துள்ளன என்றும், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் முதல்வர் குமாரசாமி கூறியதும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் கேட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையானபிறகு இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட குமாரசாமி, "அது போலீஸ் அதிகாரியிடம் இருந்து தகவல்களைக் கோரியபோது வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான எதிர்வினை. அது உத்தரவெல்லாம் இல்லை" என்று தெரிவித்தார்.
குமாரசாமியின் பேச்சு பொறுப்பற்றது என்றும், அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார். இது குறித்து மாநில பாஜக-வும் ட்வீட் செய்தது.
விவசாயிகள் இறந்தபோதோ, அரசு ஊழியர்கள் கொல்லப்பட்டபோதோ, பெருமளவு ஊழல் நிகழ்ந்தபோதோ, வளர்ச்சித் திட்டங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கோ, தலித்துகள் அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டபோதோ எதிர்வினையாற்றாத, எதிர்வினையாற்ற முன்வராத குமாரசாமி தமது கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டபோது மட்டும் உடனே குற்றவாளிகளை சுட்டுத்தள்ளவேண்டும் என்கிறார் என்று அந்த ட்வீட் விமர்சித்தது. இந்த ட்வீட் ஓரளவு மிகைப்படுத்தப்பட்டது என்றபோதும், தடாலடியாகப் பேசி சர்ச்சையில் சிக்குவது குமாரசாமிக்குப் புதியதில்லை. கடந்த மாதம் சட்டமன்றம் கூடும் பெலகாவியில் உள்ள சுவர்ண சௌதா வளாகத்தின் வாயிற்கதவுகளை உடைத்துத் திறக்க விவசாயிகள் முயன்றபோது, அது பற்றிப் பேசிய குமாரசாமி "அவர்களை விவசாயிகள் என்றா அழைக்கிறீர்கள்? என் பொறுமைக்கும் எல்லை உண்டு. எனது அரசு விவசாயிகளுக்காக உள்ளது. இவர்களை விவசாயிகள் என்பது விவசாயிகளுக்கு அவமானம்" என்று பேசினார்.re>கடந்த நான்கு ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் கரும்பு பாக்கிப் பணத்தைத் தரவில்லை என்று ஒரு பெண் விவசாயி புகார் செய்ததைக் குறிப்பிட்டுப் பேசிய குமாரசாமி "தாயீ, நான் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் முதல்வரானேன். நான்காண்டுகளாக நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த நான்காண்டுகளும் எங்கே தூங்கிக்கொண்டிருந்தீர்கள்?" என்றார்.
ஜூலை மாதம் நடந்த மதச்சார்பற்ற ஜனதா தள மாநாட்டில் பேசிய குமாரசாமி தங்கள் சகோதரன் முதல்வரானது கட்சித் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், கூட்டணி ஆட்சியின் விஷத்தை அருந்திய சிவனாகத் தாம் இருப்பதாகவும் அவர் பேசினார். re>காங்கிரஸ் இல்லாத இந்தியாவைப் படைக்கப்போவதாக பாஜக அடிக்கடி கூறுவதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, அவரது கட்சிக்கு வெறும் 37 எம்.எல்.ஏ.க்களே இருந்தபோதும் காங்கிரஸ் கட்சி குமாரசாமிக்கு முதல்வர் பதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிய குமாரசாமி, "என்னுடையது சுதந்திரமான அரசாங்கம் அல்ல. மக்களைத் தவிர வேறெவரது அழுத்தத்தையும் ஏற்கக்கூடாது என்பதற்காக, மக்களிடம் எனக்கு வாக்களிக்கும்படி கோரினேன். ஆனால், இப்போது காங்கிரஸ் தயவில் இருக்கிறேன். மாநிலத்தின் 6.5 கோடி மக்களின் நேரடி அழுத்தத்தில் நான் இல்லை" என்ற பொருளில் பேசினார்.
இந்த அறிக்கை சர்ச்சையானதும், அதற்கு அவர் விளக்கம் அளித்தார். "இன்று எனக்கு மக்களின் ஆசி இல்லாவிட்டாலும், ராகுல்காந்தி என்ற புண்ணியாத்மா என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்" என்று அவர் கூறினார்.
பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் கடன் தள்ளுபடி கோரிய விவசாயிகள் குறித்து அவர் பேசியது: "கொப்பல் விவசாயிகள் முழு கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோருகிறார்கள். வாக்களிக்கும்போது மட்டும் ஏன் இவர்கள் குமாரசாமிக்கு வாக்களிப்பதில்லை என்று கேட்க விரும்புகிறேன். ஜாதி, பணம் பார்க்காமல் வாக்களித்திருந்தால் உங்களுக்கு முழு கடன் தள்ளுபடி கோரும் உரிமை இருந்திருக்கும்" என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: