செவ்வாய், 25 டிசம்பர், 2018

விருது நகர்.. கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி

tamil.thehindu.com: இ.மணிகண்டன்: கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடை பெற்ற விருதுநகரில் உள்ள மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம்.
விருதுநகர் அருகே சாத்தூரில் கர்ப்பிணி ஒருவருக்கு எச்ஐவியால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணியும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின்  மனைவி 2-வது முறையாக கர்ப்பமடைந்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை, இம்மாதத் தொடக்கத்தில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், இதனால் ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் தொழிலாளியின் மனைவிக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தெரியவர, தொழிலாளியின் மனைவியை அழைத்து மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்ஐவி உள்ளது உறுதி செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
5 மணி நேரம் விசாரணை
இதையடுத்து விருதுநகரில் உள்ள மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று சுமார் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. எச்ஐவி பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட ரத்தம், எவ்வாறு பரிசோதனை செய்யப்படாமல் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது என்பது குறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன்  விசாரணை நடத்தினார்.
அப்போது, சாத்தூரைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரத்த வங்கி நிர்வாகி, ஆய்வக தொழில்நுட்பநர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவப் பணிகள் துணை இயக்குநர்கள் பழனியப்பன் (விருதுநகர்), ராம்கணேஷ் (சிவகாசி) ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.
‘இதுபோன்று நடக்க வாய்ப்பு உண்டு’
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தகவல்
‘விசாரணை நடந்து வரும் நிலையில், இப்போதைக்கு விரிவாகக் கூற முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு முன் ரத்தவகை சேருகிறதா என இருமுறை பரிசோதனை செய்யப்படும். அப்போது எதிர்வினை ஏற்பட்டால் ரத்தம் ஏற்றப்பட மாட்டாது. இதுவரை சிலரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ரத்தம் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்குக் காரணம் மனிதத் தவறுகளாகக்கூட இருக்கலாம் அல்லது பரிசோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளாலும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். முழு விசாரணை நடத்திய பின்னரே தவறு எங்கு நடந்துள்ளது என்பது தெரியவரும். கர்ப்பிணிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மறுக்க முடியாது. அவருக்கு  உரிய நியாயம் கிடைக்க அரசுக்குப் பரிந்துரைப்போம்’ என்று மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: