சனி, 29 டிசம்பர், 2018

சென்னை கர்ப்பிணிக்கும் ஹெச்.ஐ.வி. ரத்தம்? மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

tamil.indianexpress.com : சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள்ளாக சென்னையிலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் கிளம்பியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதேபோன்ற ஒரு கொடூரம் சென்னையிலும் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னையை அடுத்த மாங்காடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒரு தம்பதியர் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்தப் பெண்மணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

முதலில் அவர், மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள், 2 யூனிட் ரத்தம் ஏற்றியதாக தெரிகிறது. தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே மாதம் தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
8-வது மாதம் மருத்துவ பரிசோதனை செய்த போது ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். 9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி குழந்தை பெற்றார்.
ஹெச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் ஹெச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்.
ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் இந்த புகாரை உறுதிப்படுத்தவில்லை. தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு தலைவர் செந்தில்ராஜிடம் கேட்டபோது, ‘கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் தவறான தகவல் என்று தெரிவித்தார்’ என்று கூறினார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகிகளும் இந்தத் தகவலை மறுத்திருக்கிறார்கள்.
உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது

கருத்துகள் இல்லை: