திங்கள், 24 டிசம்பர், 2018

திருச்சியில் பட்டைய கிளப்பிய ...கருச்சட்டை பேரணி ...தமிழின உரிமை மீட்பு மாநாடு!

மின்னம்பலம் -/prakashprk18"  :   தந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி (டிசம்பர் 24) திருச்சியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக டிசம்பர் 23ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமான கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான சமூக செயற்பாட்டாளர்களும், அறிஞர்களும், தமிழ் மொழி ஆர்வலர்களும், பல்லாயிரக்கணக்கான பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தொண்டர்களும் கலந்துகொண்ட இந்த மாநாடு குறித்தும், அதில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் ஆற்றிய முக்கிய உரைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஜாதிகளும், மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது; பெண்களை அடிமைப்படுத்துகிறது, எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார். 45 ஆண்டுகளுக்கு முன்பு (1973) இதே நாளில்தான் (டிசம்பர் 24) பெரியார் இந்த உலகை விட்டு மறைந்தார். பெரியார் நினைவுநாளில் அவரை நினைவுகூரும் விதமாக திருச்சியில் 180க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இந்த மாநாடு மற்றும் பேரணி நடத்தப்பட்டுள்ளது.


சிறப்புத் தொகுப்பு: திருச்சி தமிழின உரிமை மீட்பு மாநாடு!மாலை 3.45 மணிக்கு உறையூர் சாலையில் உள்ள கோகினூர் தியேட்டர் அருகிலிருந்து கருஞ்சட்டைப் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கானோர் கருப்பு நிற சட்டை அணிந்து இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணி நடைபெற்றபோது ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு மற்றும் பெரியாரின் சாதனைகள் குறித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிலம்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்டவையும் இந்தப் பேரணியில் நிகழ்த்தப்பட்டன.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்த இந்த பேரணி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நிறைவுபெற்றது.

இதையடுத்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கி.வீரமணி, கொளத்தூர் மணி, கு.ராமகிருட்டிணன், சுப.வீரபாண்டியன், மார்க்சியப் பெரியாரிய அம்பேத்கரிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஆனைமுத்து, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், திரைப்பட இயக்குநர்கள் கோபி நயினார், கரு.பழனியப்பன், ஆய்வாளர் தொ.பரமசிவன், பொருளாதார அறிஞரும், மின்னம்பலம் ஆலோசனை குழு உறுப்பினருமான ஜெ.ஜெயரஞ்சன், டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், முன்னாள் நீதிபதி அரி.பரந்தாமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்றினர். மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்த மாநாட்டில் 3 சுயமரியாதைத் திருமணங்களும் நடைபெற்றன.
மாநாட்டு நிகழ்வின் முன்னதாக நோக்கவுரையாற்றிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகள், கல்வி உரிமைகள், பண்பாட்டு உரிமைகள், மொழி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழ் இனம் அடிமைப்பட்டு கிடக்கிற இனம் என்ற எண்ணத்தில்தான் நம் உரிமைகளை எல்லாம் மறுக்கிறார்கள். அவற்றையெல்லாம் மீட்கும் ஒரு முயற்சியாகத்தான் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்” என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றி பேசுகையில், “தமிழ்நாட்டை காவிமயமாக்கிவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்தவர்களின் எண்ணத்தை ஆழக் குழி தோண்டிப் புதைக்கின்ற மாநாடுதான் இந்த தமிழின உரிமை மீட்பு மாநாடு. பெரியார் சிலையை உடைப்போம், பெரியாரை அவமானப்படுத்துவோம், பெரியார் சிலையின் மீது செருப்பு வீசுவோம் என்றெல்லாம் பேசி சும்மா இருந்தவர்களைக் கிளப்பிவிட்டு இப்போது புயலை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் எல்லோரையும் ஒரே மேடையில் சேர்த்த நண்பர்களே அடிக்கடி அப்படி அறைகூவல் விடுங்கள், அதுபோலவே செய்யுங்கள். அதுதான் எங்களை இன்னும் இறுக்கமாக்கும். இதுபோன்று எல்லோரும் மீண்டும் இணைந்து இராவணனுக்கு விழா எடுப்போம்” என்றார்.
பெரியார் மறைந்து 45 ஆண்டுகளில் இதுவரையில் பெரியார் இயக்கத் தலைவர்கள் இதுபோன்று ஒரே மேடையில் திரண்டதில்லை எனவும், அனைவரையும் ஒன்று சேர்ந்த இந்தப் பெருமையில் இந்து அமைப்புகளுக்குத்தான் பெரும்பங்கு உண்டு எனவும் கூறிய முன்னாள் நீதிபதி அரி.பரந்தாமன் பேசுகையில், “இந்த மேடையில் 3 சீர்திருத்த திருமணங்கள் நடந்தது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற சீர்திருத்த திருமணம் நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை. இங்கு 1925ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற திருமணங்கள் நடக்கிறது. 1968ஆம் ஆண்டில் அண்ணாவின் ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அதேபோல தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் இருக்கிறார்கள். இதில் 65 முதல் 70 பேர் வரை வழக்கமாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் நீதிபதிகளாக இருக்கின்றனர். இதுபோல வேறெந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது. இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “தமிழர்களே உங்களுக்காக நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றார் பெரியார். இப்போது நாமும் தமிழர்களுக்காக பலிகடா ஆகத் தயாராகிவிட்டோம் என்பதைப் பெரியார் நினைவுநாளில், இந்த மாநாட்டில் உறுதிமொழியாக ஏற்க வேண்டும். இப்படியொரு சிறப்பான நிகழ்வை ஒருங்கிணைத்த பொழிலன், திருமுருகன் காந்தி, அரங்க குணசேகரன் ஆகியோருக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார். “பிரெஞ்சு நாட்டில் அண்மையில் மஞ்சள் சட்டை புரட்சி நடந்தது. அந்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக இந்தப் புரட்சி நடந்தது. அதேபோல இங்கு கருப்புச் சட்டை அணி இப்போது உருவாகியிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிற 7 தமிழர்களை விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தி, சிறை நிரப்பும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. விரைவில் இதேபோன்ற மற்றொரு நிகழ்ச்சியை கோயம்புத்துரில் ஆசிரியர் வீரமணி அவர்களின் தலைமையில் நடத்துவோம்” என்றார் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன்.
இந்த மாநாடு பல்வேறு காரணங்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக முக்கியமான சவால்களையும் விடும் மாநாடாக இது அமைந்திருக்கிறது என்று கூறிய திரைப்பட இயக்குநர் கோபி நயினார், அதுகுறித்துப் பேசுகையில், ”இந்த மாநாட்டில் ஜாதி மறுத்து, சடங்கு மறுத்து 3 சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தது. நாட்டின் மிகப்பெரிய அக்கறைவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு பேசும் பாஜகவினரின் மேடைகளிலோ, ஆர்.எஸ்.எஸ். மேடைகளிலோ இதுபோன்ற ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்குமா” என்று கேள்வியெழுப்பினார். பெரியார் இன்றும் இளைஞர்களுக்கு நாயகனாக இருக்கிறார் என்று கூறிய கரு பழனியப்பன் பேசுகையில், “பெரியார் இறந்து 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இங்கு வந்திருப்பவர்களின் சராசரி வயது 25ஆகத்தான் இருக்கும். பெரியார் மக்கள் மன்றத்தில் பேசிய பேச்சுக்களுக்காக எப்போதும் நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்டதே கிடையாது. ஆமாம் பேசினேன், செய்தேன் என்று ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றவர் பெரியார். நான் எழுதவில்லை என் அட்மின்தான் எழுதினார் என்று அவர் ஒருநாளும் சொன்னது கிடையாது. நான்தான் எழுதினேன் என்று சொல்லும் துணிச்சல் கொண்டவர். அதனால்தான் பெரியாரை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதனால்தான் இன்றைக்கு வருகிற 20 வயது இளைஞர்களுக்கும் பெரியார் ஹீரோவாக இருக்கிறார்” என்றார்.

பொருளாதார அறிஞரும், மின்னம்பலம் ஆலோசனை குழு உறுப்பினருமான ஜெ.ஜெயரஞ்சன் பேசுகையில், “பாசிச எதிர்ப்புக்காகத்தான் இந்த மாநாட்டை கூட்டிருக்கிறார்கள். முதல் உலகப் போர் முடிந்த பிறகு சில ஐரோப்பிய நாடுகளில் நாட்டுப்பற்று, இனப்பற்று ஆகியவற்றை தட்டியெழுப்பினார்கள். இறுதியில் அது சர்வாதிகாரத்தில் போய் முடிந்தது. அதையேதான் இங்கு மதம் என்ற பெயரால் நடத்த முயல்கின்றார்கள். பொருளாதாரக் கொள்கையிலும் மாபெரும் மக்கள் விரோதத் திட்டங்களைத்தான் ஒன்றிய ஆட்சியாளர்கள் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.
இந்தத் தமிழின உரிமை மீட்பு மாநாடு மற்றும் கருஞ்சட்டைப் பேரணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவரான தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மின்னம்பலத்திடம் பேசுகையில், “தேர்தல் அரசியல் கட்சிகளின் வழியாக கிடைக்காத ஒரு உரிமை எழுச்சி பெரியார் கொள்கையை முன்னெடுப்பதன் வழியாக தமிழ்ச் சமுதாயத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் நேற்று திருச்சியில் கூடியிருந்தனர். இந்த ஒற்றுமை மிகப்பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது” என்றார்.
மேலும், “மிகவும் கட்டுக்கோப்பான நிலையில் மாநாடும், பேரணியும் நடந்தது. குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் 10,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டிலும் பேரணியிலும் கலந்துகொண்டனர். எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து விவாதித்து இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படும். திருக்குறள் மாநாடு, ஜாதி ஒழிப்பு இயக்கங்கள், மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்களை மேற்கொள்வது பற்றிய திட்டமும் வைத்துள்ளோம்” என்றார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை இதேபோன்று கூட்டமைப்பாக எடுப்பதற்கும் திட்டமிருப்பதாக பொழிலன் நம்மிடம் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும், ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும், கீழடி ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ராஜிவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், கஜா புயலுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டிருக்கிற ரூ.15,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் நிறைவில், பெரியார் மீது வைக்கப்படுகின்ற அவதூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பெரியார் முன்னணி என்ற யூடியூப் தொலைக்காட்சி ஒன்றும் தொடங்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னணி, மே17, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழக மக்கள் புரட்சிக் கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தன.

கருத்துகள் இல்லை: