திங்கள், 24 டிசம்பர், 2018

தனி நபர் தகவல்கள் விற்பனை .. விலை . 3,500 ரூபாய்!

உங்கள் தகவலின் மதிப்பு 3,500 ரூபாய்!மின்னம்பலம் - சிவா: இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மனிதனின் தகவல்களைத் திருடி 3,500 ரூபாய்க்கு விற்பதாக ‘கேஸ்பர்ஸ்கை லேப்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இணைய பாதுகாப்புக்கான சாஃப்ட்வேர்களை உருவாக்கும் கேஸ்பர்ஸ்கை நிறுவனம், இணையத்தில் நடைபெறும் தீவிரவாத, திருட்டு செயல்களைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இணையம் எத்தனை ஆபத்தானது என்று மக்களுக்கு உணர்த்தி, அவர்களுக்குள் ஒரு பயத்தை உருவாக்குவதன் மூலம் தங்களது படைப்புகளைச் சந்தைப்படுத்தும் முயற்சியும் இதில் இருக்கிறது. ஆனாலும், இதுபோன்ற இணைய பாதுகாப்பு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் பணத்தைவிட, இணையதள ‘டிஜிட்டல் திருடர்கள்’ செய்யும் கோளாறுகளால் இழக்கும் பணம் அதிகம் என்பதால், இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

டிஜிட்டல் திருட்டின் மூலம் ஒரு தனி மனிதனின் பெயர், பாலினம், கிரெடிட்/டெபிட் கார்டு எண்கள், சமூக வலைதளக் கணக்கின் பாஸ்வேர்டுகள் ஆகியவற்றை எடுக்கும் டிஜிட்டல் திருடர்கள், அவற்றைத் தீவிரவாதிகள் முதற்கொண்டு அரசியல் தேர்தல்களுக்கு பரப்புரை செய்யும் அரசியல்வாதிகளின் இணையதள அணியினர் வரையிலும் பணத்துக்காக விற்க முடியும். அப்படி ஒரு மனிதனின் தகவல்களைச் சந்தைப்படுத்தும்போது அதற்கு நிர்ணயிக்கும் விலை 50 டாலர்கள். இந்திய மதிப்பில் 3,500 ரூபாய்.
சமூக வலைதளங்களில் கிடைக்கும் விளையாட்டு அப்ளிகேஷன்களுக்கு தங்கள் அக்கவுண்டின் தகவல்களைக் கொடுப்பது, கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தி 18+ இணையதளங்களில் சந்தா வாங்குவது எனப் பல விதங்களில் ஒரு மனிதனின் தகவல்களைத் திருடுகின்றனர். இவ்வளவு ஏன், சமீபத்தில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற இணையதளங்களின் சந்தா தகவல்களைக்கூட திருடி வெளியிடுகின்றனர்.
மேற்கண்ட வழிகளில் தகவல்களை இழக்காமல் இருக்க கேஸ்பர்ஸ்கை போன்ற நிறுவனங்களைச் சார்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்பகத்தன்மை மிகுந்த இணையதளங்களில் மட்டுமே தகவல்களைப் பயன்படுத்துவதும், குறுக்கு வழியில் திருட்டுத் தகவல்களைப் பயன்படுத்தாமல் இருந்தாலே போதுமானது. பெரும்பாலும் ஒரே பாஸ்வேர்டினை பல கணக்குகளுக்குப் பயன்படுத்தாமல் இருந்தால் டிஜிட்டல் திருடர்களிடமிருந்து தப்பித்துவிடலாம்.
திருடனிடம் சாவி கொடுப்பதெல்லாம் அந்தக் காலம்; திருடனுக்குக் கை கொடுத்தாலே, உங்களது கைரேகையை எடுத்துக்கொண்டு ஸ்மார்ட் போனையும் தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை: