சனி, 29 டிசம்பர், 2018

கும்பகோணத்தில் கைத்தறி கண்காட்சி .. முழு விடியோ ..


மின்னம்பலம் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையுடன் இணைந்து ஒன்றிய கைத்தறி ஜவுளி அமைச்சகம் இந்தக் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை ஒருங்கிணைத்துள்ளது. ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களிருந்து இக்கண்காட்சிக்குக் கைத்தறி ஆடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையை கைத்தறிப் பிரிவின் மாநிலச் செயலாளர் கே.ஜே.லெனின் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு உள்ளிட்டோர் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 15 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சி மற்றும் விற்பனை ஜனவரி 11ஆம் தேதி நிறைவடைகிறது. 40 அரங்கங்கள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் துண்டுகள், அசல் பட்டுச் சேலைகள், பருத்தி சேலைகள், போர்வைகள் போன்ற துணி வகைகளுக்கு 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டு ரகங்களுக்குக் கூடுதலாக சங்கங்களின் சார்பில் 10 விழுக்காடு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இக்கண்காட்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: