சனி, 2 ஜூன், 2018

நீட் எதிர்ப்பு அடம் பிடிக்கிறதா வேலூர் சி.எம்.சி? - நீட் எதிர்ப்பு பற்றி விளக்கம்

ramnath at cmccmccmc buildingநக்கீரன் - ராஜ்ப்ரியன் : 'நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்களை எங்கள் கல்லூரியில் சேர்க்கமாட்டோம்' என உச்சநீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி. கடந்த வாரம், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சி.எம்.சி.யின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பெருமைப்படுத்திய நிலையில், அதனை நோக்கி சர்ச்சைகளும் சுழல்கின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக சி.எம்.சி. போட்ட வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தமிழக நிர்வாகி திருப்பதி நாராயணன் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "நீட் தேர்வு முறையால் தங்களுடைய கல்லூரியில் படிப்பதற்கு தகுதியும் பொருத்தமும் உள்ள மாணவர்களை மட்டுமே சி.எம்.சி. தேர்வு செய்கிறது.
பொருத்தம் என்பது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. இந்த அடிப்படைக் கொள்கையை தகர்ப்பதால்தான் சி.எம்.சி. நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது. இதுநாள்வரை 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் 85 இடங்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆங்கிலமொழி வழியில் படித்தவர்களாகவுமே சி.எம்.சி. தேர்வு செய்திருக்கிறது. இதையெல்லாம் தமிழுக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை'' என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இதே தொனியில் பல்வேறு கருத்துகளை இந்துத்வா சார்பானவர்கள் வாட்ஸப் குழுக்களில் பரப்பிவந்தார்கள். இது தொடர்பாக சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் இருவர், 'பெயரை வெளியிட வேண்டாம்' என்ற நிபந்தனையோடு பேசினர்…

"நாங்கள் நீட்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லை... நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் எங்களுக்குத் தேவையான மாணவர்களை நாங்கள் தேர்வு செய்துகொள்கிறோம் என்றுதான் கேட்கிறோம். காரணம், இது முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் கல்லூரி. இங்கு படிக்க வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்கவேண்டும். குழுவாக இணைந்து செயல்படும் மனப்பக்குவம், தலைமைப் பண்பு இருக்கிறதா என்பதை பார்த்து சீட் வழங்குகிறோம். இங்கு படித்து தேறுகிறவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் -குறிப்பாக பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் சி.எம்.சி. இயக்கும் 150 சிறிய மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். இந்த விதியை நிறைவேற்றும் மாணவர்களுக்கே மேற்படிப்புக்கு சீட் கொடுக்கிறோம். இதை வேறு எந்தக் கல்லூரியும் கடைப்பிடிப்பதில்லை.
சி.எம்.சி. இருபாலர் கல்லூரியாக இருந்தாலும் குறைந்தது 51 சதவீதம் பெண்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பது விதி. பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம். இந்த விதிகளை 1947-ல் இருந்து கடைப்பிடித்து வருகிறோம். எங்களின் வழிமுறையை பார்த்து இந்திய மருத்துவக் கவுன்சிலே வியப்புத் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை தகர்க்கும்விதமாக நீட் வந்ததால்தான் எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். எனவேதான் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தோம். இன்னும் தீர்ப்பு வராத நிலையில், இந்த ஆண்டு விளம்பரம் செய்து விண்ணப்பங்களை பெற்றுள்ளோம்.

சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
கேரளா, தமிழகம் என எங்களிடம் எந்த பிரிவினையும் கிடையாது. சி.எம்.சி. நுழைவுத் தேர்வு மிகவும் கடினமானது. சி.எம்.சி. நுழைவுத்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கேரளாவில் திருச்சூர், பாலக்காடு உட்பட பல இடங்களில் பலரும் பயிற்சி மையங்கள் வைத்து நடத்துகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். தமிழகத்தில் யாரும் அப்படி பயிற்சி மையங்கள் நடத்துவதில்லை. தகுதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு சீட். கல்லூரியின் இயக்குநர் பிள்ளைகளுக்கே சீட் கிடைக்காமல் வேறு படிப்பு படிக்கிறார்கள்.
இதுவரை, சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் பெரும்பான்மை மதத்தினர் அதிகமாக படித்தனர். ஆனால் பா.ஜ.க. அரசு, "சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 85 சதவீதம் சிறுபான்மைப் பிரிவு பிள்ளைகள் படிக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டுவந்துள்ளது. "இல்லையென்றால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' எனக் கூறியுள்ளது. இந்த உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். நீட் தொடர்பான சட்டப் போராட்டத்தில் வெல்லும்போது உண்மை நிலை எல்லோருக்கும் புரியும்'' என்றார்கள்.

கருத்துகள் இல்லை: