புதன், 30 மே, 2018

உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்! ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல?

கேபிள் சங்கர்  :சிறப்புக் கட்டுரை: உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்!சமீபத்தில் இயக்குநர் நண்பருக்குப் போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்காகப் பாடல் ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாக நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங் ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக் குறைவாக இருந்தது.
இயக்குநர் நண்பர்களை அழைத்து, “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டுவந்திருக்கீங்க?” என்றதுதான் தாமதம். ஆளாளுக்கு ‘ஓ’வென அழாத குறைதான்.
“சார்… ஒரு பாட்டு நல்லா வரணும்னா சிச்சுவேஷனுக்கு ஏத்தபடி ரெண்டு அல்லது மூணு நாள் ஷூட் பண்ணணும். இவங்க கொடுக்குற காசுக்கு ஒருநாள் ஷூட் பண்ணவே முடியாது. இதுல எப்படி குவாலிட்டியும் கொடுக்குறது?”
“ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல பண்றது இல்லையா?”
“நூறு படம் பட்ஜெட்டுல பண்ணா ஒண்ணு தேறுறதே கஷ்டம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியும்” என்றார்.

இந்தப் பாடல்களுக்கான பட்ஜெட் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய்தானாம். அதையும் ஷூட்டிங் நடத்தி முடிப்பதற்குள் வாங்குவதற்குப் படாத பாடுபட வேண்டுமாம். ஆனால், அந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனல் ஒதுக்கும் தொகை இரண்டு மடங்குக்கு மேல் என்கிறார்கள். அப்படியானால் ஒதுக்கட்டப்பட்ட தொகை ஏன் இவர்களுக்கு முழுசாகக் கிடைக்கவில்லை? அங்கேதான் மீடியேட்டர்களின் ‘கை’ இருக்கிறது.

தொலைக்காட்சியில் ஆரம்பித்து இன்றைய வெப் சீரிஸ் வரை நன்றாகச் சம்பாதிப்பவர்கள் மீடியேட்டர்கள்தான். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான தமிழ்ப் படம் ஒன்றின் இயக்குநரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் தமிழ்ப் படம் எப்படி நெட்ஃப்ளிக்ஸில் தேர்வானது என்று விரிவாகச் சொன்னார். உலகின் முக்கியத் திரைப்பட விழாவான பூஷண் விழாவில் தேர்வான பின் அவர்களேதான் வந்தார்கள். நல்ல தொகைக்குத்தான் படத்தை வாங்கினார்கள். நெட்ஃப்ளிக்ஸுக்கான அக்ரிமெண்டுக்கும் இவர்கள் கையில் கிடைத்த தொகைக்கும் 33% வித்தியாசம் இருக்கும் என்றார். அந்தப் படத்தை இவர்களிடமிருந்து வாங்கி நெட்ஃப்ளிக்ஸுக்குத் தந்த வகையில் அந்த மீடியேட்டருக்கு 33 சதவிகிதம் லாபம்.
சுயாதீனத் திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கான முன்னெடுப்பு, பணம் திரட்டல் எனப் பல பிரச்சினைகளுக்கு நடுவேதான் நல்ல திரைப்படங்கள் வெளியாகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் இம்மாதிரியான படங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. இந்த ஊடகங்கள்தான் இவர்களின் இலக்கு. ஆனாலும் இந்நிறுவனங்கள் இவர்களை நேரிடையாய் அணுக முடிவதேயில்லை. ஏற்கெனவே பழம் தின்று கொட்டைபோட்ட நிறுவனங்கள், ஃபைனான்சியர்கள் போன்றோர்தான் இங்கேயும் கோலோச்சுகிறார்கள். இவர்கள் அடிமாட்டு விலைக்குப் படைப்புகளை வாங்கி, மொத்தமாக நான்கைந்து படங்களை அங்கே அனுப்பி லாபம் பார்க்கிறார்கள்.
நான்கைந்து படங்களுக்கு முன்பணம் செலவு செய்கிறார்கள் அல்லவா, அதற்கு லாபம் வேண்டாமா என்று நீங்கள் கேட்கலாம். வாங்குகின்ற நிறுவனம் இவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்குகிறார்கள். அப்படியிருக்க அதை நேரிடையாக நிறுவனமே வாங்கும்போது படைப்பாளிக்கு நல்ல லாபம் வரும். அப்படிக் கிடைக்கும்போது ஒரு படைப்பாளி தனது அடுத்த முயற்சியில் மேலும் முனைப்புடன் ஈடுபடுவார். இந்த மீடியேட்டர்களால் படைப்பாளிக்கு வரும் லாபமும் குறைவு. எனவே, அடுத்த முயற்சிக்குள் இறங்குவதில் தயக்கம் உருவாகிவிடும்.
வேறொரு நண்பர் இந்தியில் எடுக்கப்படும் வெப் சீரீஸில் நடித்துவிட்டு வந்தார். சிறிய கேரக்டர்தான். இருந்தாலும் நல்ல மரியாதை, பட்ஜெட், கவனிப்பு எனச் சிறப்பாக எடுக்கிறார்கள். அவுட்புட்டைப் பார்க்கும்போது சினிமாவை வெப் சீரிஸ் தூக்கிச் சாப்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார்.
உண்மைதான். வடநாட்டில் எடுக்கப்படும் சீரிஸ்கள் ஓரளவுக்கு நல்ல தரத்துடன் இருக்கின்றன. அதே சேனல்களில் வெளியான தமிழ் வெப் சீரீஸ்களின் தகுதியும் தரமும் படு மோசம். விசாரித்ததில் இந்தியில் கொடுக்கும் அதே அளவுக்குத்தான் இங்கேயும் முதலில் பட்ஜெட் அளித்திருக்கிறார்கள். கொடுத்தது பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கும் நிறுவனத்துக்கு. பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்ட அந்த நிறுவனம், பொதிகை தொலைக்காட்சித் தொடருக்கு ஆகும் செலவில் ஒரு மோசமான மேக்கிங்கில் வெப் சீரீஸ் எடுத்திருக்கிறது. பின் எப்படி விளங்கும்?

அந்தத் தயாரிப்பு நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு இருக்கும் பிரச்சினை, இங்கே தமிழ்நாட்டில் நல்ல உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கச் சரியான ஆட்களை நேரிடையாய் நியமிக்க / அமர்த்த முடியவில்லை. எனவே மீடியேட்டர்களை நாடுகிறார்கள். இங்கே பிரபலமாக இருந்து தற்போது நொந்து நூடூல்ஸ் ஆன நிறுவனங்கள் பழைய ஹோதாவில் மீடியேட்டர்களாய் உருவெடுத்து நாட்டாமை செய்கிறார்கள். தங்கள் தொடர்புகளை மட்டுமே மூலதனமாக வைத்துப் பணத்தைச் சுருட்டுகிறார்கள். விளைவு, தரமற்ற படைப்புகள்.
இங்கே நல்ல திறமையான கலைஞர்கள், நியாயமான சம்பளத்துக்கு வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். மீடியாவில் சாதிக்க வேண்டுமென்ற வெறியோடு அலைகிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, கசக்கிப் பிழிந்து ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்து, அதை நல்ல விலைக்கு விற்று பெரும் லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த மீடியேட்டர்கள்.
பரவலான தொடர்பும் துறையில் அனுபவமும் கொண்டவர்கள் மீடியேட்டர்களாகச் செயல்படுவதில் தவறு இல்லை. முதலீட்டாளர்களைக் கண்டுபிடித்துத் தொடர்புகொள்வது எல்லாப் படைப்பாளிகளுக்கும் சாத்தியம் இல்லை என்னும் நிலையில் மீடியேட்டர்களால் பலன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்த மீடியேட்டர்கள் ஒரு படைப்புக்கென முதலீட்டாளர்களால் ஒதுக்கப்படும் தொகையில் நியாயமான லாபத்தைத் தங்களது பங்காக வைத்துக்கொண்டு படைப்புக்கான தொகையைத் தர வேண்டும். இளைஞர்கள், ஆர்வலர்களின் உழைப்பை உறிஞ்சாமல் செலவு செய்தால் நல்ல தரமான நிகழ்ச்சிகள் கிடைக்கும். அதை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையும் சிறக்கும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். மின்னம்பலம் பதிப்பகம் சார்பாக இவருடைய ‘கனவைத் துரத்தல்’ நூல் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com)

கருத்துகள் இல்லை: