திங்கள், 28 மே, 2018

ஆடிப்போன மத்திய மாநில அரசுகள் ... கண்கெட்ட பின் சூரிய வணக்கமா? நடந்தது என்ன?

டிஜிட்டல் திண்ணை: முதல்வரின் கோபம்!
மின்னம்பலம்:  “கொலைப் பட்டியல் தயாரித்த இன்ஸ்பெக்டர் என்ற தலைப்பில் கடந்த 26ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் எழுதியிருந்த தகவல்களின் ஒரு பகுதியை ரீவைண்ட் செய்துவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.
‘துப்பாக்கிச் சூடு நடந்த கலெக்டர் அலுவலகம், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருகிறது. காவல் நிலையத்திலிருந்து விசாரணையைத் தொடங்கினோம். இங்கே இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் ஹரிஹரன் பத்து வருடங்களாக இதே பணியில் இருக்கிறார். காவல் துறையின் எல்லா விதிகளையும் மீறி இங்கே பத்து வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். சிலசமயம் டிரான்ஸ்பர் போடுவது போல் போடுவார்கள். ஆனால் இரு நாட்களில் மீண்டும் இங்கேயே டூட்டியில் சேர்ந்துவிடுவார் ஹரிஹரன். அவ்வளவு செல்வாக்கோடு இருக்கிறார். இந்த செல்வாக்குக்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் இருக்கும் பரஸ்பர அண்டர்ஸ்டேண்டிங்தான் என்று சொல்லுகிறார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் போராட்டக்கார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் என்பது லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அத்துப்படியான விஷயம். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கடந்த சில மாதங்களில் தீவிரம் அடைந்ததிலிருந்து யார் யார் அதைக் கையிலெடுத்தார்கள், யார் யார் ஒருங்கிணைத்தார்கள் என்ற பட்டியல் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்குக் கிடைக்க அந்த பட்டியலை அவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பட்டியலை வைத்துக்கொண்டுதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் கொடுத்த லிஸ்டில் இருந்தவர்கள்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள். - இதுதான் அன்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லப்பட்ட தகவல்.
இன்று மதியம், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளி வந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில், ‘தனித் துணை தாசில்தார் சேகர் என்பவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு இட்டதாகவும், அந்த உத்தரவை சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கு கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தனித் துணை தாசில்தார் துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ஹரிஹரனிடம் வழங்க... அவர்தான் துப்பாக்கிச் சூட்டை நடத்திய அதிகாரி என்பதுபோல இருக்கிறது முதல் தகவல் அறிக்கை. அதாவது, சுடுவதற்கான உத்தரவு ஹரிஹரன் மூலமாகவே காவல் துறைக்குப் போயிருக்கிறது. யாரைச் சுடுவது என்பதை ஹரிதான் முடிவு செய்ததாகச் சொல்கிறார்கள்.
முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் விஷயத்தை அப்படியே சொல்கிறேன்.
“தனித் துணை வட்டாட்சியர் சேகர் ஆகிய நான் அளிக்கும் வாக்குமூலம். ‘தூத்துக்குடி நகரம், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சில மாதங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திக் கடந்த 22ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும், அதனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் எனவும் முடிவு செய்து கிராம மக்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தகவல் எனக்குக் கிடைத்தது.
அதன் பிறகுதான், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் தடையையும் மீறி, இந்தக் கிராம மக்கள் மட்டுமின்றி மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் தடுப்புகளையும் மீறி வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டே கலெக்டர் ஆபீஸ் நோக்கி முன்னேறி வந்துகொண்டே இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடாத கலெக்டர் ஆபீஸையும் ஆபீஸுக்குள் இருப்பவர்களையும் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்று கோஷம் போட்டனர். கலெக்டர் அலுவலகத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசியபடியே நுழைய முயன்றனர். கலெக்டர் ஆபீஸில் அப்போது ஊழியர்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தனித் துணை தாசில்தார் என்ற முறையில் என் அதிகாரத்துக்கு உட்பட்டு, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லியும் ஒலிபெருக்கியில் அறிவித்தும், கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைக்க உத்தரவிட்டேன். ஆனால், கூட்டம் கலையவில்லை.
கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்தப்படும் என அறிவித்தேன். அப்போதும் கூட்டம் கலையவில்லை. மாறாக, கலெக்டர் அலுவலகத்துக்குள் இருந்த வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிக் கற்கள் பறக்க ஆரம்பித்தன. இனியும் பொறுமையாக இருந்தால், கலெக்டர் ஆபீஸ் தீக்கரையாகிவிடும் என்ற சூழ்நிலை உருவானது. அங்கே இருப்பவர்களையும், கலெக்டர் ஆபீஸையும் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அதனால், கலவரம் செய்பவர்களைத் துப்பாக்கியை உபயோகித்துக் கலைக்க உத்தரவைப் பிறப்பித்தேன். காவல் துறை துப்பாக்கியைப் பிரயோகிக்க ஆரம்பித்தனர். இதில் 4 பேர் உயிர் இழந்ததாகத் தெரியவந்திருக்கிறது. பலர் காயம் பட்டிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இது பற்றிக் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...’
தனித் துணை தாசில்தார் சேகர் அளித்த புகாரின் பேரில் 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஹரிஹரன்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும், ஹரிஹரனுக்கும் இருக்கும் தொடர்பை முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியது மின்னம்பலம்தான்! இப்போதுதான் அதை எல்லோரும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்” என்று முடிந்த மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து ஃபேஸ்புக், “முதல்வர் அலுவலகத்தில் இப்போது மிகவும் பதற்றமாக இருக்கிறார்கள். தேவையில்லாமல் முதல்வர் மீது பழி போடப்படுகிறது என்று அவர்கள் புலம்புகிறார்கள். அன்று காலை 11 மணியளவில் நிலைமை பதற்றமானதை ஒட்டி தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையினர் காவல் துறை மேலிடத்தை அணுக, காவல் துறை மேலிடமோ தலைமைச் செயலாளரை அணுகியிருக்கிறது. அதன் பின் தலைமைச் செயலாளர் டெல்லியைத் தொடர்புகொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியதாகவும் அதன் பின்னர் உள் துறை அமைச்சக உத்தரவின் பேரிலேயே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகத்திலுள்ளவர்கள் வருத்தத்தோடு பேசிவருகிறார்கள். ராஜ்நாத் சிங் உத்தரவின் பேரில்தான் துப்பாக்கிச் சூடு நடந்ததென்றும் ஆனால், அதற்குத் தமிழக முதல்வர் பலிகடா ஆக்கப்படுகிறார் என்பதும் அவர்களது வருத்தம்.’ - இதுவும் டிஜிட்டல் திண்ணையில் கடந்த 25ஆம் தேதி சொல்லப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம்?” என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டது.
பதிலை கமெண்ட்டில் போட்டது வாட்ஸ் அப். “இதுவும் உண்மைதான். துப்பாக்கிச் சூட்டுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவு போனது முதல்வருக்குத் தெரியாது என்றே சொல்கிறார்கள். துப்பாக்கிச் சூடு நடந்த பிறகே அந்தத் தகவல் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. அதில் ரொம்பவே அப்செட்டில் இருந்த முதல்வர், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மத்திய அரசைக் கேட்காமலேயே எடுத்ததாகச் சொல்கிறார்கள். ‘அவங்க அங்கே உட்கார்ந்துட்டு சொல்லிட்டாங்க. இவங்களும் சுட்டுட்டாங்க. இப்போ எல்லாப் பழியும் என் மேலதானே வந்து விழுந்திருக்கு. ஸ்டெர்லைட்டை மூடச் சொல்லி உத்தரவு போடுறேன். யார் வந்து கேட்குறாங்கன்னு பார்க்கிறேன்...’ என்று கோபத்துடன் பேசிவிட்டுத்தான் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட முதல்வர் முடிவெடுத்தார் என்றும் சொல்கிறார்கள்!”

கருத்துகள் இல்லை: