திங்கள், 28 மே, 2018

7 ஆண்டுகளுக்கு மேல் போராடி பெற்ற பாலம் திறந்து வைத்த கனிமொழி எம்பி.

போராடிப் பெற்ற பாலம்!
மின்னம்பலம் : திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் ஒரு பாலத்தைத் திறக்க வைக்க 7 ஆண்டுகளுக்கு மேல் போராடி இப்போது அந்தப் பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறார் கனிமொழி எம்பி.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் இருந்தவரிடம் மக்கள் முக்கியமான ஒரு பிரச்னையை தெரிவித்தனர்.
“கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாற்றின் குறுக்கே அபிவிருத்தீஸ்வரம், கமுகக்குடி இடையே பாலம் கட்டினால் பத்தூர் மேல்கரை, கப்பலூடையான், திருவரங்க நல்லூர், அக்காஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு பயனாக இருக்கும். இப்போது பாலம் இல்லாததால் 10 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது’’ என்று மனு கொடுத்தனர் மக்கள். இந்த பாலத்துக்காக பல ஆண்டுகள் போராடிவருவதையும் கருணாநிதியிடம் குறிப்பிட்டனர். அப்போது இந்த மனுவை தன்னுடன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த கனிமொழியிடம் கொடுத்துவிட்டார்.

கருணாநிதி திருவாரூரில் வென்ற நிலையில் கனிமொழி தனது எம்.பி.நிதியில் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கினார். ஆனால் ஆட்சியில் அதிமுக இருந்ததால் இந்த நிதியை செலவிடுவதில் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். அதன் பின் ஊர் மக்கள் திரண்டு, நிதி ஒதுக்கிய பாலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் கனிமொழியும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில்தான் பாலம் கட்டும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியது. அதன் விளைவாக ஏழு ஆண்டு போராட்டத்துக்குப் பின் நேற்று (மே 27) இந்த பாலத்தை திறந்து வைத்தார் கனிமொழி.
“தலைவர் கலைஞர் அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி பகுதியில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. ஆனால், இந்த பாலம் கட்ட நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகியும் பாலம் கட்டும் பணிகளை துவங்கமுடியாமல் இழுத்தடிக்கப்பட்டது. பல போராட்டங்கள், உண்ணாவிரதங்களைத் தொடர்ந்து ஒருவழியாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பாலம் கட்டி முடிக்கப்பட்டது’’ என்று இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார் கனிமொழி.

மகளிரணி ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று திருவாரூர் வந்த கனிமொழிக்கு நேற்று ஆழித் தேரோட்டம் என்ற தகவல் தெரிவிக்கப்பட, திருவாரூரில் மக்களோடு மக்களாக சென்று தேரின் கலை நுணுக்கங்களையும் கண்டு களித்தார்.

கருத்துகள் இல்லை: