வெள்ளி, 1 ஜூன், 2018

7 திமுக எம்.எல்.ஏ க்கள் மீது ஸ்டாலின் சந்தேகம்!

டிஜிட்டல் திண்ணை: 7 திமுக எம்.எல்.ஏ க்கள் மீது ஸ்டாலின் சந்தேகம்! மின்னம்பலம்:  “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 30ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி, திருச்சி, சேலம், மாவட்டங்களிலும் மாதிரி சட்டமன்றக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். சென்னையைத் தொடர்ந்து ஏன் உடனடியாக மற்ற மாவட்டங்களிலும் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
’மே 31-ம் தேதி, திமுக சட்டமன்ற கழகக் கொறடா சக்கரபாணியின் வாட்ஸ்-அப்,லிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில் சட்டமன்ற ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ள ஊழல் அதிமுக அரசின் முகமூடியை தோலுரித்துக் காட்ட மாதிரி சட்ட மன்றக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜ நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் 5ஆம் தேதியும், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஜூன் 8ஆம் தேதியும், சேலம் இரும்பாலை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் 12ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. அதில் தவறாமல் எம்.எல்.ஏ,கள் கலந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் திருவாரூரில் ஜூன் முதல் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் வந்தே ஆக வேண்டும் எனவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அழைப்பும் போயிருக்கிறது. அதற்கு காரணம், எம்.எல்.ஏக்கள் மீது திடீரென ஸ்டாலினுக்கு வந்திருக்கும் சந்தேகமே என்கிறார்கள். அது என்ன சந்தேகம் என்பதையும் விசாரித்தோம்.
‘எங்கள் செயல் தலைவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் ஜால்ரா போடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல் தலைவர் சந்தேகப் படுகிறார். அதேநேரம் அவர் சந்தேகத்துக்கு நியாயமான சில காரணங்களும் உண்டு. சட்ட மன்ற கூட்டம் நடைபெறும்போது திமுக எம்.எல்.ஏ க்கள் பலர் அமைச்சர்களைச் சந்தித்து காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள் என்று ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்துள்ளது. சபாநாயகர் அறைக்குச் சென்று பேசுவதற்கு அனுமதி கேட்பதுபோல் அமைச்சர்களை சந்திக்கிறார்கள் என்பதும் ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ள தகவல். அதுமட்டுமல்ல ஹாலிலும் சட்டமன்ற வளாகத்திலும் ஆளும் கட்சி விஐபிகளுடன் திமுக எம்.எல்.ஏ க்கள் சந்திப்பு நடைபெற்றுவருவதைப் பல நேரங்களில் ஸ்டாலினே நேரடியாகப் பார்த்துள்ளார். சில எம்.எல்.ஏ க்கள் கைப்பேசியில் படம் எடுத்துபோய் போட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.
இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் திமுக எம்.எல்.ஏ க்கள் 7 பேர் ஆளும்கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் மூலமாக மேலும் சில திமுக எம்.எல்.ஏ க்கள் அரசுத் தரப்போடு நெருங்கிவருவதாகவும் இந்த கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் ஸ்டாலினுக்கு தகவல் சென்றிருக்கிறது. அதனால்தான், மே 30ஆம் தேதி மாதிரி சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும் யாரும் சென்னையில் இருக்கவேண்டாம் அனைவரும் தொகுதிக்குப் புறப்படுங்கள் என்று அனுப்பி வைத்தார். சட்டமன்றம் பக்கம் திமுக எம்.எல்.ஏ க்கள் போகாத அளவுக்குத் திட்டமிட்டு அலைய வைக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.
இதுகுறித்து சில திமுக எம்.எல்.ஏ க்களிடம் பேசியபோது, ‘எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் பணத்துக்கு என்ன செய்வார்கள் வருமானம் இல்லாத நிலையில் வாராவாரம் செலவு வைக்கிறார், அரசு உயர்த்திய எம்.எல்.ஏ. சம்பளத்தையும் வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருலட்சத்து ஐந்தாயிரம் வாங்கினால், திமுக எம்.எல்.ஏ.க்கள் 50 ஆயிரம்தான் வாங்குகிறோம். இந்த நிலையில் லெட்டர் பேடு கட்சிபோல் தலைமைச் செயலகத்தில் ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டம் செய்வதும் முதல்வரைச் சந்தித்து மனுகொடுப்பதுமாக இருப்பதை கட்சியில் உள்ளவர்கள் யாரும் ரசிக்கவில்லை’ என்கிறார்கள்.
மேலும் கருணாநிதி தலைமைச் செயலகம் வந்தால் முதல்வராக வருவார். அதேபோல் ஜெயலலிதாவும் சரி, தேவை இல்லாமல் தலைமைச் செயலகம் வரமாட்டார்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்கள் எண்ணிக்கை பலமாகவிருந்தும் வெளியில் போய் மாதிரி சட்டமன்றம் நடத்துவது இயலாமையைக் காட்டுகிறது. இவ்வளவு பேர் இருப்பதற்குச் சட்டமன்றத்துக்குள் போராடி சட்டமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கலாம் அவர்கள் கொண்டுவரும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று நொந்து நூலாகி கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள். அவர்கள் மீது நம்பிக்கையில்லாமல்தான் சென்னை பக்கம் விடாமல் மாதிரி சட்டமன்றம் என்ற பெயரில் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ க்களை சுற்றவிடுகிறார் செயல் தலைவர்’ என்று சொன்னார்கள் முழு விபரங்களையும் அறிந்தவர்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: