மின்னம்பலம்: ஆர்.அபிலாஷ் :தமிழ்த் தேசியம்: தனித்தமிழ் இயக்கத்திலிருந்து ‘நாம் தமிழர்’ வரை – ஒரு பார்வை
நண்பர் ஒருவருடன் ‘நாம் தமிழர்’ கட்சியின் அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் இக்கேள்வி எழுந்தது: இவர்களின் தமிழ்த் தேசியத்துக்கும் திராவிடக் கட்சிகளின் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன வித்தியாசம்? வித்தியாசம் உண்டா இல்லை, இரண்டும் ஒன்றா?
தமிழ்த் தேசியம் என்பது திராவிடர் கழகத்துடன் தொடங்குவதாகக் கருதக் கூடாது என்று அவரிடம் கூறினேன்.
தமிழ்த் தேசியத்தின் தொடக்கமும் மாற்றங்களும்
பெரியாரும் அவருக்கு முன்பு நீதிக் கட்சியினரும் ஒரு திராவிட தேசியத்தை முன்வைத்தனர். டி.எம்.நாயர், தியாகராய செட்டியார், நடேச முதலியார் போன்ற நிறுவனர்களின் நோக்கம் தமிழ் மொழி சார்ந்த தேசியம் அல்ல – பிராமண எதிர்ப்பும் பிராமணர் அல்லாதோரின் ஒருங்கிணைப்புமே அவர்களின் பிரதான நோக்கம். இந்தியா முழுக்க இந்த பிராமண எதிர்ப்பைக் கொண்டுசெல்ல அவர்கள் நினைத்தனர். பிராமண ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்தனர். அதே காரணத்துக்காக அன்னி பெசன்டையும், பிராமணியத்தை ஆதரிக்கிறார் என காந்தியையும் எதிர்த்தனர். இதற்கெல்லாம் உச்சமாக இந்திய தேச விடுதலைப் போராட்டத்தையே எதிர்த்தனர்.
ஆனால், பெரியார் திராவிடர் கழகத்தை ஆரம்பித்த பின்னரும் மொழிவாரியான தேசியமாக இது இருக்கவில்லை. ஒரு காரணம் இக்கட்சியில் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடியர் எனத் தென்னிந்திய மொழியினர் பலரும் இருந்தனர். இன்னொரு காரணம், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களாக மக்கள் பிரிவதற்கு முன்னரே நீதிக் கட்சி தோன்றிவிட்டது. அவர்களின் கருத்தியல் ஒருங்கிணைந்த (திராவிட) தென்னிந்தியருக்கானதாக இருந்தது. இதனால் மிதமிஞ்சிய தமிழ்ப் பற்றை பெரியார் விமர்சனம் செய்தார். ஆனால், அண்ணாவின் வரவுடன் அரசியலில் தமிழ்த் தேசியத்தின் கொடி உயரப் பறக்கத் தொடங்கியது.
அசலான தமிழ்த் தேசியம் ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோருடனும் இவர்களை அடுத்து 19ஆம் நூற்றாண்டில் சோமசுந்தர நாயகர், மறைமலை அடிகளாருடனும் தொடங்குகிறது. இதைச் சமயம் சார்ந்த தமிழ்த் தேசியம் என்கிறார்கள். போப் சைவ சமயத்தைத் தமிழரின் சமய அடையாளமாய் முன்வைக்கிறார். இத்துடன் ஆரிய மதம் × தமிழர் மதம் எனும் இருமை வேர்கொள்கிறது. தமிழ்ச் சமூகத்தில் உள்ள சாதியச் சீர்கேடு மற்றும் மதமாற்றச் செயல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் சோமசுந்தர நாயகர் மற்றும் மறைமலை அடிகளார் சைவ சமய தேசியத்தைக் கட்டமைக்கிறார்கள். இவ்விருவரும் சைவ வெள்ளாளர்கள் அல்லர் (நாயகர் வன்னியர்; அடிகளார் சோழியர் வெள்ளாளர்). ஆக சைவ உணவுப் பழக்கமும் சைவ சமய நம்பிக்கையும் கொண்ட எந்தச் சூத்திரரும் சைவ வெள்ளாளர் ஆகலாம் என்னும் நிலைப்பாட்டை இவர்கள் எடுத்தனர். பிராமணர்களுக்கு எதிராக மத்திய சாதிகளைத் திரட்டி தேசியம் ஒன்றை நிறுவும் பணியை இவர்கள் செய்தனர்.
ஆத்திக - நாத்திகத் தமிழ்த் தேசியங்கள்
நீதிக் கட்சியினருடன் இவர்களுக்கு மத துவேஷ விஷயத்தில் மோதல் வருகிறது. சைவ சித்தாந்த நிறுவனர்கள் நாட்டார் மதங்களை, நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளாகப் பழித்துச் சாடினர். ஆனால் பெரியாரோ சைவ மதத் தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையே எள்ளி நகையாடினார். இரு தரப்பினரிடையிலான மோதலில் நீதிக் கட்சியினரையே வென்று நீடித்தனர். தமிழகம் நாத்திகத் தமிழ்த் தேசியம் நோக்கி நடை போட்டது.
பிராமணர்களை எதிர்ப்பது, சூத்திரர்களின் அரசியல் களத்தைத் தயாரித்து அவர்களை ஒன்றிணைப்பது, அடித்தட்டினரின் சமய நம்பிக்கைகளைச் சாடுவது (கல் எப்படிடா கடவுள் ஆகும் மூடனே!) ஆகிய பொதுவான சரடுகள் திராவிடர் கழகம், அதன் தொடர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வருகையுடன் தொடர்ந்தன. குறிப்பாக இந்தப் பெயர்வுடன் வெள்ளாள சாதியினரிடமிருந்து பிற மத்திய சாதியினரின் கைக்குத் தமிழ்த் தேசியம் சென்றது.
எல்லா தேசியங்களும் ஒரு சமூகத்தின் நிலைமாற்ற வேளையில் உச்சம் கொள்பவை. தமிழகம் எனும் உணர்வு காலனிய ஆதிக்கக் காலத்தில் வேர்கொண்டு, பிரிட்டிஷார் தம் பிடியைத் தளர்த்தி இந்தியாவை விட்டு அகலும் சந்தர்ப்பத்தில் உச்சம் பெறுவதை கவனிக்கலாம். இந்தியச் சமூகத்தைப் பொறுத்தமட்டில், இதே வேளையில் வடக்கே இந்திய தேசியம் மத தேசியமாக இந்து மகாசபையினர், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளின் வழி உருக்கொள்கிறது (காந்தியை ஒரு அராஜகவாதி என நான் நம்புவதால் அவரை தேசியச் சட்டகத்துள் வைக்கத் தயங்குகிறேன்).
தொண்ணூறுகளில் இந்தியா பொருளாதார ரீதியில் வலுப்பெற்று, உலகமயமாதலின் துணை கொண்டு உலக அரங்கில் தலைதூக்கியது. அப்போது இந்து தேசியம் மேலெழுகிறது. ராமர் கோயில் இயக்கம், இந்துத்துவ அரசியல் ஆகியவை இக்காலகட்டத்தில் பெரும்பான்மை இந்து மக்களிடையே ஆதரவு பெறுகின்றன.
ஆக, தேசியத்துக்கும் நகர உருவாக்கத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது. நகரங்களை மையமாகக் கொண்டு ஒரு தேசம் வளர்ந்தெழ நான் × மற்றமை எனும் இருமை உக்கிரம் கொள்கிறது. இந்து மக்களும் இஸ்லாமியரும் எதிரெதிர் துருவங்கள் எனப் போலியான சித்திரம் இங்கு வலுவாக நிறுவப்பட்டது வெறுமனே மத வெறுப்பின் அடிப்படையில் அல்ல. பொருளாதார ரீதியாக வலுப்பெற்ற மத்திய வர்க்கத்துக்குத் தம்மிடையேயான வித்தியாசங்களைக் களைந்து ஒன்றாகத் தம்மை உணர ஒரு பொது எதிரி தேவைப்பட்டது. அந்த எதிரியாக அப்பாவி இஸ்லாமியர் அப்போது கட்டமைக்கப்பட்டனர் (இந்தியாவைக் கிராமப் பொருளாதாரம் நோக்கி நகர்த்த முனைந்த காந்தி இஸ்லாமியரை மற்றமையாகக் கருதவில்லை; அதை ஏற்கவில்லை.)
பண்பாட்டுப் பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும்
தமிழகம் இன்று விவசாயத்தைக் கைவிட்டு, கிராம வாழ்வை உதறி நகரமயமாக்கலை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. இணையம் போன்றொரு வெளியில் படித்த மேல்தட்டினர் ஒன்றுதிரள்கிறார்கள். தொண்ணூறுகளில் இந்தியா முழுக்க நிகழ்ந்தது போல, தமிழகத்தில் இன்று – ஒரு சிறிய அளவிலேனும் – மற்றமையை உருவாக்கி, வெறுப்பரசியலின் கொடியின் கீழ் மத்திய வர்க்கத்தினர் உருத்திரளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓர் உதாரணம் தருகிறேன்.
ஸ்டெர்லைட் படுகொலைகளின் பின்னால் நிச்சயமாக பாஜகவினரின் கரம் உள்ளது. நீட் பிரச்சினையிலும் அப்படியே. ஆனால், தமிழக மக்கள் இப்பிரச்சினைகளின்போது ஒரு பெரும்திரளாய் ஒருங்கிணையவில்லை; போராடவில்லை. ஆனால், அவர்கள் ஜல்லிக்கட்டு எனும் கலாச்சார பிரச்சினை ஒன்றின்போது – மத்திய அரசால் தமிழன் ஒடுக்கப்படுகிறான் எனும் கோஷத்தால் கிளர்ந்தெழுந்து – சுலபத்தில் இணைந்து போராடினர். இப்படி போராடியவரில் கணிசமானோர் ஜல்லிக்கட்டு காளையையே நேரில் கண்டிராத நகர் வாழ் தமிழர்.
இப்படி (பண்பாட்டு அளவில், இந்து தேசிய அரசியலில் நிகழ்வது போலவே) ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சியின்போது ஒரு மற்றமையை உருவாக்கி மக்களைச் சுலபத்தில் திரட்ட முடிந்தது. ஆனால். சமூக அரசியல் பிரச்சினைகளின்போது இந்த மற்றமை செயல்படுவதில்லை. சீமானின் தேசிய அரசியலும் இந்த ஒற்றைத் திசையில் பயணிக்கிறது.
மதமும் மொழியும்
இன்று சீமானும் அவரது தம்பிகளும் அன்று இந்துத்துவர் செய்ததையே செய்கிறார்கள். மறைமலையடிகளார், பெரியார், அண்ணாவைப் போல் சீமானுக்குச் சமூகத் சீர்திருத்த நோக்கமோ கருத்தியல் பின்புலமோ மக்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் தேவையோ இல்லை.
இந்தியா என்பது மதவாத தேசம் அல்ல. இங்குள்ள இந்துக்களுக்கு மத நம்பிக்கை இருந்தாலும் மத அடையாளம் என்பது அடிப்படையில் அவர்கள் இயல்பாகத் திரள்வதில்லை. அதே போல் தமிழக மக்களுக்கும் தமிழ்ப் பற்று உண்டெனிலும் பிற மொழியினர் மீது வெறுப்பு இல்லை. சொல்லப்போனால் தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டவரே அசல் தமிழர் என நிறுவி, அம்மக்களை மட்டுமே கொண்டு தேசியத்தை உருவமைத்து அவர்களின் ஆதரவில் மட்டும் ஒருவர் இங்கு ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை. அன்று போல் இன்றும் இங்கு பல மொழியினர் இணைந்து வாழ்கிறார்கள். ஒரு தெலுங்கரோ, மலையாளியோ தமிழ் அடையாளத்தின் கீழ் திரள இன்றும் தயங்குவதில்லை. வீட்டில் தமிழற்ற ஒரு மொழியும் வெளியே தமிழும் பேசுபவரை “வந்தேறி” எனத் தமிழர்கள் கருதுவதில்லை. தமிழுணர்வு கொண்டோரை – அவர்களின் தாய்மொழி எதுவெனினும் - அள்ளி அரவணைப்பதே நமது பண்பு, நமது மரபு. அவர்களைத் தள்ளிவிடுவதோ ஒதுக்கி நிறுத்துவதோ அல்ல.
ஒரே படகின் இரு துடுப்புகள்
சீமானின் அரசியலோ குறுகிய பார்வை கொண்ட வெறுப்பரசியல். மற்றமையைத் தொடர்ந்து கட்டமைப்பதும், “உன் மொழியைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவரைத் துரத்து” என மக்களைத் தூண்டிவிடுவதுமான இனவாத அரசியல். “வந்தேறி”களைத் துரத்திய பின் என்ன செய்வது என அவருக்குத் தெரியாது. ஒரு கூட்டத்தில் பேசுகையில் சீமான் கன்னடர் தமிழரைக் கர்நாடகாவில் தாக்கினால், நீ போய் கன்னடியரைத் தாக்கு என்கிறார். அதனால் தீர்வு வருமா என ஒரு நிருபர் சீமானிடம் கேட்டிட, சீமான் மேலும் கொந்தளித்துக் குமுறுகிறாரே ஒழிய அவரிடம் அதற்குப் பதில் இல்லை. “அதோ போகிறானே அவன் நம் எதிரி, அவனைக் கொல்” என்பதைத் தாண்டி அவரிடம் எந்த சமூகச் சீர்திருத்தக் கொள்கையும் இல்லை. மற்றமையை உருவாக்கி, உணர்ச்சிகளைத் தூண்டி மக்களைத் திரட்டுவதே அவரது கட்சியின் ஒரே கொள்கை (உமா பாரதி, ஹெச்.ராஜா போல).
இதையே தொண்ணூறுகளிலிருந்து இந்துத்துவர்களும் வெற்றிகரமாகச் செய்துவந்திருக்கிறார்கள். இந்துத்துவர்களுக்கும் சமூக, பொருளாதார ரீதியில் எந்த ஆக்கபூர்வ கொள்கைகளும் இல்லை. ஊழலற்ற, செயல்திறன் மிக்க நிர்வாகம் தருவோம் என்பார்கள். எப்படி என வினவினால் அவர்களிடம் விடை இல்லை. எப்படி மக்களைப் பிரிப்பது என்பதை ஒழித்து, எப்படி நடைமுறைப் பயனற்ற புராண புராதன நம்பிக்கைகளை மீட்டுருவாக்குவது என்பதைக் கடந்து, எப்படி மக்களை முன்னேற்றுவது என்பது பற்றி இந்துத்துவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. அவர்களுக்கு மண் குடத்தைப் போட்டு உடைக்கத் தெரியும். ஆனால் புதிதாய் ஒன்றை வனையத் தெரியாது. இதனால்தான் சீமானும் ஹெச்.ராஜாவும் கைகுலுக்கி இணைந்து பணியாற்றும் காலம் விரைவில் வரும் என நான் நம்புகிறேன். இருவரும் ஒரே படகின் இரு துடுப்புகள்.
நாம் தமிழர் கட்சியுடையது வெறும் மற்றமையைக் கட்டமைக்கும் வெறுப்பரசியல். பிராமணரல்லாதவர் – பிராமணர் என்னும் இருமை தமிழ்த் தேசியத்தின் தொடக்கக் காலத்திலேயே இருந்தாலும், அதைக் கடந்து சமூக சீர்திருத்தம், முன்னேற்றம், பண்பாட்டு மேம்பாடு, சமூக நீதி, இன வேறுபாடு களைந்த தமிழ் அடையாளம், சமத்துவம் எனப் பல்வேறு லட்சியங்கள் சீமானுக்கு முன்பான தமிழ்த் தேசியத்தைப் பரந்துபட்ட, மனிதநேய அடிப்படையிலான சிந்தனை அமைப்பாக விரிவடையச் செய்தது. ஆனால், லட்சியங்கள் மடிந்துவிட்ட இன்றைய பாலைவன அரசியல் வெளியில் “அதோ வந்தேறி, தமிழரின் எதிரி, அவனை அடிடா, அதுதான் தமிழ் வீரம்” எனச் சொல்லாயுதங்கள் எறியும் ஆபத்தான மேம்போக்கான மலினமான ஒன்றாய் தமிழ்த் தேசியம் நலிந்திருக்கிறது.
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் வரும் குடியிருந்த கோயில் போன்ற படங்களில் ஒரு எம்ஜிஆர் கொடூரமான வன்முறையான ஆளாகவும் மற்றொருவர் கிட்டார் இசைத்துப் பாடி ஆடும் மென்மையானவராகவும் தோன்றுவார். இப்போதைய சூழலில் அச்சுறுத்தும் எம்ஜிஆராக பாஜகவும், ஆபத்தற்ற எம்ஜிஆராக சீமானும் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாஜகவால் தமிழகத்தில் நேரடியாகக் காலூன்ற முடியாமல் போகலாம். ஆனால், அவர்களின் இரட்டைச் சகோதரரான சீமான் தமிழகம் எனும் நாயகியின் பின்னால் நடந்து டூயட் பாடவும், நாயகியின் கடைக்கண் பார்வையை அவ்வப்போது பெறவும் வாய்ப்புள்ளது.
தமிழகம் ஏமாந்துவிடக் கூடாது!
(கட்டுரையாளர் அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள:abilashchandran70@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக