திங்கள், 28 மே, 2018

அமித் ஷாவின் அத்தனை மோசடிகளையும் முறியடித்த எதிர்கட்சிகள் .. கர்நாடக


Savukku : சாத்தியமற்றதை அமித் ஷா செய்துள்ளார். ஆளுக்கொரு
திசைநோக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒன்றுபடுத்தியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவியேற்பு விழாவில் அவர்களனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை, என்ன செய்தாவது எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறும் தந்திரம்,  எதிர்க்கட்சிகளை துண்டு துண்டாக உடைத்து வெற்றி பெரும் உத்தி ஆகியவை  தற்சமயம் தோல்வியுற்றுள்ளது என்பதை உறுதியாகியுள்ளது.
”இந்த ஒற்றுமை நீடிக்கும். மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இனி வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் இதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங். அக்கட்சியின் மத்தியப் பிரதேச  தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக அவர் அறிவிக்கப்பட்டள்ளார். ஆனால், மாயாவதியுடனும் அவரது பகுஜன் சமாஜ் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அவர் கருத்து கூற மறுக்கிறார்.
எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களுருவில் நடைபெற்றது. அங்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, இரவு உணவின்போது காங்கிரஸுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மூன்று மணிநேர சந்திப்பு நடத்தினார். (அஷோக் கெலாட்டும் அப்போது இருந்தார்) மமதா பானர்ஜி கல்கத்தாவிலிருந்து கொண்டு வந்திருந்த மிட்டாயைக் கொண்டு பேச்சுவார்த்தைகளில் சுவையூட்டினார். இந்த மெகா கூட்டணி சரியான திசை நோக்கி நகர்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்தது. பொது இடத்தில் சோனியா காந்தியை நெருக்கமாக ஆரத் தழுவியபோது எப்போதையும் விட இப்போது அதிகமாக மாயாவதி புன்னகை செய்தார். இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் அவருடைய புதிய ஹெவி வெய்ட் பங்காளியான அகிலேஷ் யாதவ் மேடையில் மமதா பானர்ஜியின் கால்களைத் தொட்டார். இதுவரை தில்லி காங்கிரஸுக்கு தீண்டத்தகாதவராக இருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.
ஆகையால், இந்த பரபரப்பான செயல்பாடு எல்லாம் எதைக் குறிப்பிடுகிறது ? இதில் எதை பெரியதாக எடுத்துக் கொள்வது என்றால், மோடி மற்றும் பாஜகவை கட்டுப்படுத்த , காங்கிரஸ் இப்போது இந்த மெகா கூட்டணிகளில் இளைய பங்காளியாக விளையாட தயாராக உள்ளது என்பதே.
”ஊடகங்களின் பகுப்பாய்வு மேலோட்டமாக உள்ளது,” என்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு நாங்கள் வேண்டுமென்றேதான் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால், ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளும் மோடிக்கு சென்றிருக்கும். மகாராஷ்டிராவில் வரவிருக்கும் பால்கர்  தொகுதி இடைத் தேர்தலுக்காக நாங்கள் சிவசேனா கட்சியுடன் பேசிக்கொண்டிருப்பது போலவே, மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவுடன் தேர்தலுக்கு முன்னர் பேசிக்கொண்டிருந்தது. கூட்டணியை பகிரங்கமாக   பேசினால் அது மோடிக்குதான் உதவியாக இருக்கும். இதை நாங்கள் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் உணர்ந்தோம். நாங்கள் முன்பு போல, நாங்கள்தான் பெரிய கட்சி என்ற நினைப்பில் இருந்திருந்தால், குமாரசாமியை ஐந்து மணிநேரத்தில் சென்றடைந்து அவருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்திருப்போமா ?. மோடியையும் அமித் ஷாவையும் எதிர்க்க, நமக்கு முழுமையான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தேவை என்பதை இரு காந்திகளும் (சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி) உணர்ந்துள்ளனர்.
ஆனால், மமதா பானர்ஜி மற்றும் இடதுசாரிகள் ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கும மாநிலங்களில் அவர்களின் போட்டி நலன்கள் எப்படி இணைந்து பணிபுரியும்? கூட்டணிக்குள் உருவாகும் நெருப்பை அணைக்கும் பணி சோனியா காந்தி மற்றும் சரத்பவார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் ஒரு மிகவும் தளர்வான கூட்டமைப்பு வெளிப்படலாம் என நேற்றைய நிழ்வில் கலந்து கொண்ட பல அரசியல்கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ”பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கிறது, இடதுசாரிகள் அல்ல என்பது மமதா பானர்ஜிக்கு தெரியும். மேற்கு வங்கத்தில் அமித் ஷாவின் நடவடிக்கைகளால் அவர் (மமதா) மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து மமதாவை வேரோடு பிடுங்கி எறிவதாக அமித் ஷா கூறியுள்ளார்,” என்கிறார் ஒரு மூத்த தலைவர்.
பதிவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்த ஒதிஷா முதலமைச்சர் நவீன் பட்நாய்க்குடன் சரத்பவார் நல்லுறவு வைத்திருக்கிறார். சரத்பவார் இப்போது அவருடன் தொடர்பு கொள்வார். மோடியுடன் ஒரு மறைமுகமான புரிந்துணர்வு முயற்சியை மேற்கொள்ள சரத்பவார், முன்னர், தனது திறமைகளைப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளின் இணைப்புத் திட்டத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.  பால்கர் தொகுதி தொடர்பாக, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஆகிய இருவரும் ஒன்றாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டிருக்கின்றனர். தினந்தோறும் மோடியை தாக்கிவரும் தாக்கரே இப்போது 20 வயதான பாஜக-சிவசேனா கூட்டணியை உடைக்க தயாராக இருக்கிறார். இது மகாராஷ்டிரா அரசியலில் சுவாரசியமான தாக்கங்களை ஏற்படுத்தும். 80 எம்.பிக்களை அனுப்பும் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய குழுவாக 46 எம்.பி-க்களை மக்களவைக்கு (லோக் சபாவுக்கு) மகாராஷ்டிரா அனுப்புகிறது.
புதிய மாபெரும் கூட்டணியின் சூத்திரதாரியாக (strategist) செயல்படுவதால் சோனியா காந்தி தனது அறிவிக்கப்பட்ட ஓய்வை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார். எனவே ராகுல் காந்தி மற்ற கட்சிகளுக்கு மட்டுமல்ல தனது தாயாருக்கும் இரண்டாவது நிலையில் செயல்பட வேண்டும்  காங்கிரஸ் கட்சியை உங்களது பங்காளியாக தேர்ந்தெடுங்கள், பாஜகவை அல்ல என தேவெ கௌடாவை சோனியா காந்திதான் அழைத்தார். மிகவும் வளைந்து கொடுக்க காங்கிரஸைப் போல கற்றுக் கொண்ட மாயாவதியை அவர்தான் கையாள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் மாயாவதி  கூட்டணி அமைத்தார். அவரது கட்சி ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. காங்கிரசுடன் செல்ல தேவெ கௌடா மற்றும் குமாரசாமி ஆகியோருக்கு அவர் அழுத்தம் கொடுத்தார்.
மத்தியப் பிரதேச செயல்திட்டத்திற்காக, மாயாதி விரைவில் டெல்லி வந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அனேகமாக சந்திக்கக்கூடும்.
அடுத்த வாரம், சமாஜ்வாடி கட்சியுடன்  புதிதாக உருவான மாயாவதியின் புரிதல் கைரானா இடைத் தேர்தலில் பரிசோதிக்கப்படும். அங்கே எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளன.
கர்நாடகாவில் பாஜகவால் சேகரிக்கப்பட்ட 104 தொகுதிகளும் ஒரு “வெற்றியாக“ மாறாததால், இடைத் தேர்தலுக்காக அனைத்து உபாயங்களையும் அமித் ஷா கையாள்கிறார். அவரது புகழ் மற்றும் அவரது பிரமிக்கத்தக்க சாதனைகள் சோதனையை சந்தித்துள்ளன. கோரக்பூரைப் போலவே, கைரானாவும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
ஸ்வாதி சதுர்வேதி
நன்றி என்டிடிவி

கருத்துகள் இல்லை: