வியாழன், 18 ஜனவரி, 2018

பொன்ராஜ் : கமல் கலாம் பெயரைப் பயன்படுத்துவதற்கு கலாம் பெயரில் கட்சி நடத்தும் ...

டிஜிட்டல் திண்ணை: கலாம் பெயரைப் பயன்படுத்துவதா?மின்னம்பலம் :கமலுக்கு எதிராக பொன்ராஜ்!
மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ் இது.
“பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதாபுரத்தில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார் கமல். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரொம்பவே சுறுசுறுப்பான கமல், சுற்றுப்பயண நாளை குறித்திருக்கிறார். அப்துல் கலாம் மண்ணில் இருந்து தொடங்குவதுதான் கமலின் திட்டம். அப்துல் கலாம் இளைஞர்களின் கனவு நாயகனாக இன்னும் இருப்பவர். அவர் மண்னில் இருந்து ஆரம்பித்தால் இளைஞர்களின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்பது கமலின் திட்டம்.

அப்துல் கலாம் பெயரில் ஏற்கெனவே கட்சி தொடங்கியவர் பொன்ராஜ். அப்துல் கலாம் பெயரில் தொடங்கிய கட்சி ஆட்சியை பிடிக்கும்.. நான் முதல்வர் ஆவேன் என பொன்ராஜ் சொல்லி வருகிறார். இது பற்றியும் கமலிடம் சொல்லி இருக்கிறார்கள். கமல் தரப்பில் இருந்து சிலர் பொன்ராஜை சந்தித்துப் பேசினார்களாம். ‘நீங்க என்ன நோக்கத்துக்காக கட்சி ஆரம்பித்து நடத்திட்டு இருக்கீங்களோ அதே நோக்கத்துக்காகத்தான் கமல் கட்சி ஆரம்பிக்கப் போறாரு. நாம எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்படலாம் என்பது அவரது விருப்பம். நீங்க உங்க கட்சியை எங்களோடு இணைச்சிடுங்க. அப்துல் கலாம் ஐயாவின் வழிகாட்டலுடன் நாம எல்லோரும் இணைந்து பயணிக்கலாம். ஐயாவை முன்னிறுத்திதான் கமலின் அரசியல் இருக்கும். உங்ககிட்ட சார் பேச சொன்னாரு. நீங்க சம்மதித்தால் அவரே உங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்காரு...’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதைக் கேட்ட பொன்ராஜ், ‘நீங்க சொல்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு. கலாம் ஐயாவின் பாதையில் எல்லோரும் வருவது சந்தோஷம்தான். நாங்க கட்சி ஆரம்பிச்சு வருஷக் கணக்குல ஆயிடுச்சு. இங்கே ஏராளமான உறுப்பினர்கள் இருக்காங்க. நிர்வாகிகள் இருக்காங்க. எல்லா மாவட்டங்களிலும் எங்க ஆட்கள் இருக்காங்க. அப்துல் கலாம் ஐயா பெயரில் தொடர்ந்து நாங்க பல உதவிகள் செஞ்சுட்டு இருக்கோம். அதனால கமல் வர விருப்பம் இருந்தால் வந்து எங்களோடு இணைய சொல்லுங்கள். நாம எல்லோரும் சேர்ந்து செயல்படலாம். அவரோட இயக்கத்தில் எங்களால் சேர முடியாது. அவரை எங்க இயகத்தில் சேர சொல்லுங்க. நாளை நாம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வரும் போது, கமலுக்கு நிச்சயமாக அமைச்சர் பதவி கொடுக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இப்போ உங்க லாபத்துக்காக கலாம் ஐயாவை பயன்படுத்த வேண்டாம்னு நான் சொன்னதாக அவருகிட்ட சொல்லுங்க..’ என்று சொல்லிவிட்டாராம்.
இந்த தகவலும் உடனே கமலுக்குப் போயிருக்கிறது. ‘அவங்க இல்லைன்னா என்ன.. நம்மால் செய்ய முடியாதா? கலாம் என்ன அவருக்கு மட்டும்தான் சொந்தமா? இதுக்காவே நாம கலாம் இடத்தில் இருந்துதான் நம் பணியை தொடங்குறோம். அவருகிட்ட இருக்கிற கூட்டத்தையும் நம்ம பக்கம் இழுக்கிறோம்.’ என்று டென்ஷனாக சொன்னதாக சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் ராமநாதபுரத்தில் கமல் தனது கட்சி பணியை தொடங்கும் போது, பொன்ராஜ் தரப்பில் இருந்து அவரது ஆதரவாளர்கள் கமலுக்கு எதிராக களத்தில் நிற்கவும் தயாராகி விட்டார்களாம்’’ என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: