திங்கள், 15 ஜனவரி, 2018

பாகிஸ்தானியர்களின் இந்திய சொத்துக்கள் வாரிசு உரிமை இனி கோரமுடியாது ... ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஏலம் !

தினமலர் : எதிரி சொத்து,விரைவில்,ஏலம்,ரூ.1 லட்சம் கோடி,'enemy' propertiesபுதுடில்லி : நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எதிரி சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.
;நாடு சுதந்திரம் அடைந்தபோதும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான போருக்கு பின்னும் இந்த நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தியாவிலிருந்து வெளியேறினர். இவர்கள் சீனா, பாக்., ஆகிய நாடுகளுக்கு குடிபெயந்தனர். இவர்கள் நம் நாட்டில் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதிரி சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.
;இந்த சொத்துக்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 1968-ல் எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துக்களுக்கு அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாத வகையில் 49 ஆண்டு பழமையான சட்டத்தில் திருத்தம் செய்து பார்லிமென்டில் 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் உள்ள 9,400க்கும் அதிகமான எதிரி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களை விற்பதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4,991 சொத்துக்களும், மேற்கு வங்கத்தில் 2,735 சொத்துக்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகள் விரைவில் துவக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சு நடத்தவுள்ளனர். பாகிஸ்தானில் இதுபோல் இந்தியர்களுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்கள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: