செவ்வாய், 16 ஜனவரி, 2018

எங்கப்பா சாவு குறித்து கேட்காதீர்கள்! - நீதிபதி லோயா மகனுக்கு மிரட்டல்

நக்கீரன் :அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணத்தில் முன்னர் சந்தேகம் இருப்பதாக கூறிய அவருடைய மகனும் குடும்பத்தினரும் இப்போது சந்தேகம் இல்லை என்று மறுத்துள்ளனர். மேலும் தனது தந்தையின் மரணம் குறித்து தன்னிடமோ, தனது குடும்பத்தினரிடமோ கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுள்ளார். சொராபுதன் ஷேக் என்பவர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாக்பூரில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தனது சகாவின் மகள் திருமணத்திற்கு சென்ற இடத்தில் அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக லோயாவின் தந்தையும் தாயும் கூறியிருந்தனர். லோயா மரணம் குறித்து மீண்டும் இப்போது சர்ச்சை உருவாகி இருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நீதிபதிகள் புகார் கூறியிருக்கும் நிலையில் அமித் ஷா மீதான வழக்கில் அவரை விடுதலை செய்ய மறுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தனக்கு எதிரான சர்ச்சைகளை அடக்குவதற்கு லோயாவின் மகனையும் அவருடைய குடும்பத்தினரையும் அமித் ஷா தரப்பில் மிரட்டியிருப்பதாக தெரிகிறது. இதையடுத்தே அவர் தனது தந்தையின் மரணம் தொடர்பாக சந்தேகம் இல்லை என்று கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார். பாஜகவினருக்கு இதையெல்லாம் சொல்லியா தர வேண்டும்? -ஆதனூர் சோழன்

கருத்துகள் இல்லை: