புதன், 17 ஜனவரி, 2018

வைரமுத்து மன்னிப்பு கேட்க ஸ்டாலின் உதவி வேண்டுமாம் .. பார்ப்பனர்கள் படையெடுப்பு

மின்னம்பலம் :ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவுசெய்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், இந்த விவகாரம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வைணவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. எனவே ஆண்டாள் விவகாரம் இப்போது அரசியலையும் உலுக்கிவருகிறது.
தமிழை ஆண்டாள் என்ற பொருளில் கவிஞர் வைரமுத்து பேசப் போய், ஆண்டாள் பற்றிச் சர்ச்சையான கருத்தை முன்வைக்க, அதற்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் எந்த விதமான ஏற்பாடும் இல்லாமல், நேற்று (ஜனவரி 15) மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இந்து ஆன்மிகத் தலைவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் வைரமுத்துவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கராமானுஜ ஜீயர், வைணவ அறிஞர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன், வைணவச் செயற்பாட்டாளர் திருக்கோட்டியூர் மாதவன் உள்ளிட்ட ஏராளமான வைணவப் பெரியவர்களும், பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மணவாள ராமானுஜ ஜீயர் பேசுகையில், “நம் அனைவருக்கும் தாயாராகவும், தந்தையாராகவும் இருப்பவர்கள் ஆண்டாளும் ரங்கமன்னாரும். வைரமுத்து நம் தாயைப் பழித்துவிட்டார். அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லியும் இதுவரை அவர் கேட்கவில்லை. நாளை மாலைக்குள் (இன்று ஜனவரி 16 மாலை) வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால், நான் சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்’’ என்று அறிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள் மூலம் வைரமுத்துவுக்கு இந்தத் தகவல் போயும்கூட இதுவரை அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டாள் விவகாரத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துச் சென்றுள்ளார் வைணவ செயற்பாட்டாளரான திருக்கோட்டியூர் மாதவன். ஸ்டாலினுக்கு நன்கு அறிமுகமான திருக்கோட்டியூர் மாதவன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று வைரமுத்துவை மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தும்படி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து நாம் திருக்கோட்டியூர் மாதவனிடம் உரையாடினோம்.
ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசிய விவகாரத்தில் ஸ்டாலின் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
மத்தியஸ்தம் இல்லை. வைணவர்களுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன அடிதடியா நடந்தது, மத்தியஸ்தம் செய்வதற்கு? வைரமுத்து பழித்தது எங்கள் தாயாரை. அவர் முழுமுதல் குற்றவாளி. அவரை எங்களிடத்திலே மன்னிப்பு கேட்கச் சொல்லி யாரும் கேட்கவில்லை. வா, எம் தாயார் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அது விஷயமாக ஸ்டாலினிடம் பேசியிருக்கிறேன்.
ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த விவகாரத்திலே இந்து சமூகம் ஒன்று திரண்டு போராடுகிறது. ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் என்று வரும்போது இதன் ஒட்டுமொத்த பாதிப்பும் ஸ்டாலினுக்குதான், திமுகவுக்குதான். இந்த விவகாரத்தில் கி.வீரமணி வைரமுத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார். இதனால் இந்துக்கள் மனதில் வெறுப்பு அதிகமாகிறது. இதன் பலனைத் தேர்தல் நேரத்தில் திக அனுபவிக்காது, திமுக மட்டும்தான் அனுபவிக்கும்.
வைரமுத்து தனக்குப் பின்னால் திமுக இருக்கும் என்ற தைரியத்தில்தான் இதுபோலப் பேசுகிறார், மன்னிப்பும் கேட்காமல் இருக்கிறார். ஆனால் அவர் பின்னால் எந்த திமுக காரனும் இல்லை. இந்நிலையில் ஸ்டாலின் வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதையடுத்து நான் ஸ்டாலினிடம் பேசினேன். ‘என்ன சார், நீங்களே இப்படி அறிக்கை விட்ருக்கேள்? உங்க கட்சியில 90 சதத்துக்கும் மேல இந்துக்கள்தானே?’ என்று கேட்டேன். ‘அவர்தான் மன்னிப்பு கேட்டாரே சாமீ’ என்று ஸ்டாலின் சொன்னார். நானோ, ‘இதனால் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றுதான் சொன்னாரே தவிர, மன்னிப்பு கேட்பதாக அவர் சொல்லவில்லை. இவர் வருந்துவது ஒன்றும் பெரிய விஷமில்லை. உலகத்தையே வருத்தப்பட வச்சுட்டார். நீங்க சொன்னால் அவர் கேட்பார். அவரை நீங்க மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும்’ என்று சொன்னேன்.
அதற்கு ஸ்டாலின், ‘பொங்கலுக்காக கட்சியினர் வாழ்த்து வாங்க வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னிக்கு கூட்டமா இருக்கு. இதப் பத்தி நாம பேசலாம்’ என்று சொல்லியிருக்கிறார். நான் மட்டும் இதுபற்றி ஸ்டாலினிடம் சென்று பேசுவது சரியாக இருக்காது என்பதால் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனரான ஜெகத்ரட்சகனையும் என்னுடன் அழைத்திருக்கிறேன். நாளை சென்று பேச இருக்கிறோம்.
வைரமுத்து ஒருவேளை திருவில்லிபுத்தூர் வருவதாக இருந்தால் அவருக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் உண்டாகும் என்று சிலர் சொல்கிறார்களே?
இந்தக் கேள்வியே தவறானது. நாங்கள் மிகவும் சாந்தமாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். சாத்வீகமான வார்த்தைகளையே பயன்படுத்துகிறோம். வைரமுத்து தன் தவறை உணர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருவதாக இருந்தால், அவருக்கு முழுமையான பாதுகாப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் வழங்குவார்கள். இன்னும் சொல்லப் போனால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வைரமுத்து வந்தால், அவருக்கு மாலையிட்டு வரவேற்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்’’ என்று முடித்தார் திருக்கோட்டியூர் மாதவன்.
நமக்கு நாமே பயணத்தின்போது ஸ்டாலின் திருக்கோட்டியூர் சென்று, ராமானுஜர் அனைத்து மக்களுக்கும் திருமந்திரத்தை உபதேசித்த கோபுரத்தின் மீது ஏறிப் பார்த்தார். அப்போது ஸ்டாலினுடன் சென்றவர் திருக்கோட்டியூர் மாதவன். எனவே மாதவனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விவகாரத்தில் வைரமுத்துவுடன் ஸ்டாலின் பேசுவாரா என்பதைப பொறுத்து இந்தப் பிரச்சினையின் அடுத்த கட்டம் இருக்கும்!
-ஆரா

கருத்துகள் இல்லை: