புதன், 17 ஜனவரி, 2018

ரஜினிக்கு 17 வீத வாக்குகள் கிடைக்கும் .. நம்புறோம் சாமி

தினமலர் :புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாடுடே-கார்வி 2016-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாடுடே-கார்வி இணைந்து 77 தொகுதிகளில் நடத்திய கருத்து கணிப்பில் கிடைத்த தகவலின்படி: தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு 16 சதவீத ஓட்டு கிடைக்கும் எனவும், 33 தொகுதிகளை பிடிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும் ரஜினி முதல்வராக வேண்டும் என 17 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் ரஜினி அரசியலில் தோல்வி அடைவார் என்றும் 53 சதவீதம் பேர் வெற்றி பெறுவார் என்றும் , ரஜினி-கமல் இணைய வேண்டும் என 29 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


ரஜினி யாருடன் கூட்டு ? ரஜினி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு , யாருடனும் சேர வேண்டாம் என 28 % பேரும், திமுகவுடன் சேரலாம் என 21 % பேரும், பா.ஜ.,வுடன் சேரலாம் என 20 % பேரும், அதிமுகவுடன் சேரலாம் என 11 % பேரும், காங்கிரசுடன் சேரலாம் என 2 % பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே போன்று ஆளும் கட்சியான அ.தி.மு.க வரும் தேர்தலில் 26 சதவீத ஓட்டுகளுடன் 68 தொகுதிகள் வரை பிடிக்கும் என்றும் எதிர்கட்சியான தி.மு.க. கூட்டணி 34 சதவீத ஓட்டுக்களுடன் 130-க்கும் மேலான தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் முதல்வர்? யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு ஸ்டாலின் முதல்வராக 50% பேரும், ரஜினி முதல்வராக 17% பேரும், ஓ.பி.எஸ் முதல்வராக11% பேரும், இ.பி.எஸ் முதல்வராக, 5% பேரும், கமல் முதல்வராக 4%பேரும், தினகரன் முதல்வராக 3% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: