சனி, 20 ஜனவரி, 2018

ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு

nakkeeran :கடுமையான பேருந்துக் கட்டண உயர்வு - ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தடியடி -அமைச்சர்களின் ஆணவப் பேச்சு போன்றவற்றை கண்டித்தும்;பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும் வகையில் இரவோடு இரவாக 3600 கோடி ரூபாய் அளவுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் அதிமுக அரசு மக்களின் அன்றாட வாழ்வுடன் விபரீத விளையாட்டை நடத்தியிருக்கிறது.


ஆங்காங்கு இதை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் போன்றோர் மக்களின் போராட்டத்திற்கும், எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கும் ஆணவத்துடன் பதிலளித்திருக்கும் போக்கும் இந்த அரசை வழிநடத்திச் செல்லும் அமைச்சரவைக்கும், அதற்கு தலைமையேற்றிருக்கும் முதலமைச்சருக்கும் இதயத்தில் ஈரமில்லை என்ற கொடூர மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது.

ஆகவே கடுமையான பேருந்துக் கட்டண உயர்வு, ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தடியடி, அமைச்சர்களின் ஆணவப் பேச்சு போன்றவற்றை கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27.1.2018 சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

கழக நிர்வாகிகளும், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி,  தொண்டர் அணி, நெசவாளர் அணி,  ஆதிதிராவிடர் நலக்குழு, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாக பங்கேற்று, மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.<;">ஒத்த கருத்துடைய தோழமை கட்சிகள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.’’

கருத்துகள் இல்லை: