வியாழன், 18 ஜனவரி, 2018

விஜய் சேதுபதி போல இன்ஸ்பெக்ட்டரை ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் பார்க்கலாம்

வாசுகி பாஸ்கர்: விஜய் சேதுபதி ரசிகைகள் உடைத்துப்பேச தயக்கப்பட்டு கொண்டிருக்கும் பல விஷயங்களை பொதுவெளியில் எந்த தயக்கமுமின்றி பேசவதற்கான ஒரு சூழலுக்கு நாம் அனைவருமே கிட்டத்தட்ட காத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கான கால சூழல் ஏற்படுகிற போது வெடிக்க தயாராயிருக்கும் சீழ் கட்டியின் மேற்புறத்தை நுனி முள்ளால் லேசாக கீறினாலே மொத்தமாய் பெருக்கெடுத்து வெளியேறுவதை போல, நம் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கான உந்துதல் பெரும்பாலும் வெளிப்புறத்தில் இருந்து இயக்கப்படுபவை தான்.
Unreserved கம்பார்ட்மெண்டில் பயணிக்கும் போது சக பயணிகள் ஒருவருக்கொருவர் எந்த கவலையுமின்றி, வேர்க்கடலையில் இருந்து சமோசா வரை வாங்கித்தின்ன எந்த யோசனையும் செய்ய மாட்டார்கள், திங்க வேண்டுமென்றால் வாங்கி விடுவார்கள். AC கம்பார்ட்மெண்டில் போண்டா, பஜ்ஜி வரும், ஒருவரை ஒருவர் மறைமுகமாக பார்த்துக்கொள்வார்கள், சில குழந்தைகள் துள்ளிக்குதித்து பெற்றோரை வாங்கித்தரச்சொல்லி அடம் பிடிக்கும், சில பெற்றோர்கள் அக்குழந்தைகளை அடக்க முயற்சிப்பார்கள். ஓரிருவர் வாங்கினால் படிப்படியாக எல்லோரும் வாங்க ஆரம்பிப்பார்கள். அதிலும் சமூகத்தின் கிளாசி, elite நவீன தோரணையில் இருப்பவர்
ஆரம்பித்தால் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எளிய பகுதியின், எளிய மனிதரின், எளிய கலாச்சாரத்தில் நமக்கு பிடித்தமானவை ஏராளம், அதையெல்லாம் வெளிப்படுத்தி ஆசையை தீர்த்துக்கொள்ள நம்மை இந்த சமூகம் தடுத்து நிறுத்திக்கொண்டே இருக்கிறது. ரோட்டுல பறை மேளத்தோடு சாவு போகும் போது, இறங்கி ரெண்டு குத்து குத்தணும்ன்னு உங்களுக்கு தோணினதே இல்லையா?
ரோட்டுக்கடை பலகாரத்தில் இருந்து, ரயில் சமோசா வரை இந்த உளவியல் இருக்கும் போது, பெண்கள் தமக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்வதில் இல்லாமலா போகும்? சாஸ்திரமும் சம்பிரதாயங்களும் எழுதப்பட்டு அது பெரும்பான்மையாய் பெண்ணின் மீது சுமத்தப்பட்டிருப்பதை பார்க்கும் போது, ஆண்களின் அந்த எச்சரிக்கை உணர்வு நமக்கு சொல்வது ஒன்று தான். பெண் தன்னை விட்டு மீறி போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும், அவள் மீறியதால் மேலும் அந்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருப்பதையே அது உணர்த்துகிறது.
வேத சட்டங்களில் ஒரு ஆண் பார்ப்பன திருமண விதிகளை மீறுவதை காட்டிலும் ஒரு பெண்ணுக்கான விதிமுறைகள் கடுமையாய் இருப்பது நமக்கு இதை தான் உணர்த்துகிறது. பார்ப்பனர் அல்லாத படிநிலை சாதிகளிலுள்ள ஆண்கள் மீது பெண்கள் காதல் கொள்வது இயல்பானதாக நடந்துக்கொண்டே இருந்ததால் தான் பெண்ணுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.
தொண்ணுறுகள், இரண்டாயிரம் வரை கூட பெண்கள் யாரை ரசிக்க வேண்டுமென்று போலியாக இங்கே சித்தரிக்கப்பட்டது. கல்லூரிகளில் கருப்பான காதலனை தன் சக தோழிகளிடம் இருந்து மறைத்த பெண்கள் உண்டு, பின்னாளில் அவர்கள் திருமணம் செய்து இருக்கலாம். வெள்ளை நிற ஆண்களை பெருமையாக தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதிலேயே அலாதி சந்தோசத்தை அடைந்த பெண்கள் இருந்தார்கள், பின்னாளில் அது திருமணத்தில் முடியாமல் கூட போயிருக்கலாம்.
இந்த சமூக மனத்தடை சமீபத்தில் தான் சுக்கு நூறாக உடைப்பட்டது. தன் விருப்பத்தை சொன்னால், அதற்காக வரும் எதிர்வினையை பற்றி மயிரளவு கூட பொருட்படுத்தாத சுயமரியாதை மனநிலை உருவாகியிருக்கிற காலத்தில் தான், தனக்கு பிடித்தவர்களை வெளிப்படையாய் சுட்டிக்காட்டும் போக்கு உருவானது. Black , dusky போன்ற நிறங்களை உடையவர்களை போலியாய் கொண்டாடும் நபர்களும் உண்டு, ஆனாலும் இந்த மாற்றம் இந்த ஒரு விவகாரம் மட்டுமின்றி எல்லா துறை, தளத்திலும் உருவாகியிருக்கிறது என்பது உண்மை.
கரி பிடித்த பழைய மீன் குழம்பு சட்டியை அதன் தன்மை மாறாமல் அப்படியே தத்ரூபமாய் படம் பிடித்து காட்டும் புகைப்படங்கள் ஏதோவொரு சிலிர்ப்பை கொடுப்பதும், அதில் அழகியல் இருப்பதையும் ரசிக்க ஆரம்பித்து விட்ட நமக்கு, நேர்த்தியாக கட்டப்பட்ட modular kitchen ல் சிலாகிக்க ஏதுமில்லாத ஒரு இடமாகி போனது. முகம் முழுக்க வெள்ளை நிற சாயமடித்து உரக்க பேசினால் தான் மேடையில் அந்த நடிப்பு எடுபடும் என்கிற சிவாஜியின் நாடக காலம் மாறி, நவீன கேமராக்கள் முகத்தின் அருகே மீசை மயிரின் அசைவை கூட த்தரூபமாய் படம் பிடித்து காட்டும் காலத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி நம் ஊரெங்கும் சுற்றித்திரியும் பையன்களில் நிறம்மாறாத ஒருவர்.
கொஞ்ச நாள் முன்னே விஜய் சேதுபதி ஒரே போல நடிக்கிறார், variations இல்லை என்று விமர்சனம் படித்தேன். விஜய் சேதுபதி போலீஸூக்கென்று இருக்கும் உடல்மொழியை கற்கவில்லை, டாக்டருக்கென்றே இருக்கும் உடல் மொழியை பிரதிபலிக்கவில்லை, மாறாக விஜய் சேதுபதி போல இருக்கும் போலீஸ்காரர்களை, விஜய் சேதுபதி போல இருக்கும் டாக்ட்டர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இட ஒதுக்கீட்டின் பலனை நாம் பரவலாக அனுபவிக்க ஆரம்பிக்கும் முன் டாக்டர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், ஆசாரியர்கள் எல்லாருமே ஒரு ரகமாய் இருந்தனர். இந்த கல்வி, பணி பரவலாக எல்லோருக்கும் சாத்தியப்பட்ட பிறகு தான், டாக்டர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற அடையாளம் மாறி, எல்லோரும் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்தார்கள். அப்படி சினிமாவை ஆக்கிரமித்து வந்தவர் தான் விஜய் சேதுபதி. அவரின் சினிமாவிலும் நம் பார்க்கும் யதார்த்தவாதிகளை அப்படியே பிரதிபலிக்கிறார். நான் பார்த்தவரையில் சிங்கம் சூர்யா போன்ற இன்ஸ்பெக்ட்டரை பார்த்ததே இல்லை, ஆனால் விஜய் சேதுபதி போல இன்ஸ்பெக்ட்டரை ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் பார்க்கலாம்.
கருப்பு ராஜ்கிரணும், கருப்பு விஜியகாந்தும் தங்களை வெள்ளையாய் காட்ட சாயத்துக்கு அதிகமாய் செலவு செய்த காலம் போய், இருப்பதை அப்படியே படம் பிடிக்கும் காலத்திற்கு வந்து நிற்கிறோம். சினிமா புனைவு காரணமாய் சில சினிமாத்தனம் இருந்தாலும், விஜய் சேதுபதி யாதார்த்தை முன் வைத்து இயல்பாய் இருக்கிறார்.
ஒருவர் "எனக்கு பிடித்திருக்கிறது" என்று சொல்லிவிட்டாலே, "அப்படியென்ன பிடித்திருக்கிறது?" என்கிற கேள்வியே அநாகரீகத்தின் உச்சம் தான். அப்படியிருக்கும் போது விஜய் சேதுபதி அதீதமாய் கொண்டாடப்படுகிறார் என்கிற சில வயிற்றெச்சல்களை பார்க்கவும் முடிகிறது. பெண்கள் யாரை ரசிக்க வேண்டுமென வைக்கப்படும் விதிகள் கொஞ்சம் நவீனமாகி இருப்பது சில இடங்களில் தென்படுகிறது.
விஜய் சேதுபதியை "பிடிக்கும்", "பிடிக்காது", "ஓகே" என்று மூன்று கேட்டகரியில் எதில் வேண்டுமானால் நீங்கள் வைக்கலாம், தனிநபர் விருப்பம். ஆனால் விஜய் சேதுபதிகளின் காதலிகள் தங்கள் விருப்பத்தை எந்த புற அழுத்தத்தின் உந்துதலுக்கும் உட்படாமல் அதை பகிரங்கமாய் சொல்லும் காலத்தை எட்டியிருக்கிறார்கள் என்பது நிஜம்.

கருத்துகள் இல்லை: