வெள்ளி, 19 ஜனவரி, 2018

ஆம் ஆத்மி 20 எம் எல் ஏக்கள் மீதான தகுதி நீக்கம் ! தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

மாலைமலர் :இரட்டை பதவி தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குங்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். எனவே, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தன. இதில் தொடர்புடைய ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.< இதற்கிடையே, இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக, 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து இன்று கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தடைவிதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளீர்களா? என்றும், இதுதொடர்பாக 10 நிமிடத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள், அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசை தொடர்ந்து நடத்துவதற்கான உரிமையை இழந்துவிட்டார். எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: