திங்கள், 15 ஜனவரி, 2018

ஹரியனாவில் தலித் பெண் கூட்டு வன்புணர்வு கொலை ,,,


மின்னம்பலம் :ஹரியானாவில் 15 வயதுள்ள மற்றொரு நிர்பயா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் கால்வாய் அருகே அரை நிர்வாணத்தில் ஒரு பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தலித் சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டுப் பொருளை செலுத்திக் கொடுமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிஜிஐஎம்எஸ் ரோதக் தடவியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.கே. தத்தார்வால் கூறுகையில், அந்த பெண்ணின் முகம்,தலை, மார்பு பகுதி மற்றும் கைகள் உள்பட 19 காயங்கள் உள்ளன. அவரது நுரையீரல் கிழிந்துள்ளது. இதற்குக் காரணம் யாராவது அவரது மார்பு மீது உட்கார்ந்திருக்க வேண்டும்.
அந்த பெண் மிகவும் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, அந்த பெண்ணுக்கு உள்காயங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. போலீசாரிடம் குற்ற அறிக்கை மற்றும் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் காட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என கூறினார்.
இதுகுறித்து குருஷேத்ரா போலீஸ் எஸ்.பி. அபிஷேக் கார்க் கூறுகையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், அந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருடன் காணாமல் போயுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இளைஞனுக்கும் பாலியல் வன்முறையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் படுகின்றனர். பெண்ணின் தந்தை ஜின்சா கிராமத்தில் டெய்லராக இருக்கிறார். சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மற்றும் டிஎஸ்பி அடங்கிய குழு குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும், ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டுமென்றும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஹரியானா அமைச்சர் கே.கே.பெதி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்த பின்னர்தான், பெண்ணின் உடலை வாங்கி தகனம் செய்தனர்.

கருத்துகள் இல்லை: