Manjai Vasantha :
வைரமுத்து கருத்தை வலுவாக்கும்
வைரமுத்து கருத்தை வலுவாக்கும்
வரிகளின் தொகுப்புதான் திருப்பாவை?
கருத்துரிமைக்கு எதிரான
காலித்தனம் கண்டிக்கத்தக்கது!
- மஞ்சை வசந்தன்
கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை. ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்ந்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்’’ என்ற ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார்.
இதுதான் வைரமுத்து சொல்லியது. அதுவும் அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் சுபா’ மாலிக் வெளியிட்ட Indian Movement sum Aspects of desserts protest and reforms என்ற நூலில், அந்த அயல்நாட்டு ஆய்வாளரின் கருத்தையே அவர் சொல்லியுள்ளார்?
அப்படியாயின் உண்மையில் யாரிடம் மோத வேண்டும்? அந்த ஆய்வாளரை விட்டுவிட்ட வைரமுத்தவிடம் வம்புக்கு வருவது அற்பத்தனம் அல்லவா?
ஆண்டாள் என்று ஒரு பெண்ணே கிடையாது. அவள் ஓர் கற்பனைப் பாத்திரம். பெரியாழ்வாரின் புனைவே ஆண்டாள்! என்று இராஜாஜி கூறினாரே!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுப்பிய இக்கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள் வைரமுத்துவிடம் வக்கிர பாய்ச்சல் பாய்வது ஏன்?
இராஜாஜிக்கு ஒரு நீதி வைரமுத்துவுக்க வேறு நீதியா? இதுதானே உங்கள் மனுதர்ம நீதி!
நீங்கள் மனுதர்மத்தைக் கையில் எடுத்தால், நாங்கள் அதற்கு எதிராக ஏந்த வேண்டியதை ஏந்துவோம் எச்சரிக்கை!
வைரமுத்து மோடியை பாராட்டியபோது இனித்தது; கம்பனை பாராட்டியபோது இனித்தது ஆண்டாளைப் பாராட்டிய போதும் இனித்தது. அடியில் இரண்டுவரி உண்மையைச் சொன்னதும் கொதிக்கிறதா?
வைரமுத்து சொன்னது சரியென்பதற்கு திருப்பாவையே ஆதாரம்:-
ஆண்டாள் திருப்பாவை பாடல்களை முழுக்கப் பார்த்தால் அவள் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட பெண் என்பதுதானே வெளிப்படுகிறது!
தான் கடவுளுக்கு உரிமையான பெண் என்ற உரிமையிலும், கடவுளை சேரத் தனக்கு எல்லா உரிமையும் உண்டு என்ற அடிப்படையில்தானே ஆண்டாள் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளாள்.
கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட பெண்ணில்லாத ஒருவள் கடவுளிடம் அவ்வளவு உரிமை எடுத்தக்கொள்ள முடியாதே!
இதோ அதற்கான பாடல்களைப் பாருங்கள்!
கண்ணன் தன் மனைவி நப்பின்னை மேல் நீங்காத காதல் கொண்டவன். அதை ஆண்டாளே சொல்கிறாள்.
“குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்...”
(திருப்பாவை, பாடல்-19)
அதாவது, பள்ளியறையில் குத்துவிளக்கு எரிகிறதாம். அழகிய கட்டிலில் விரிக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது ஏறிய கண்ணன், அழகிய கூந்தலையுடைய தன் மனைவி நப்பின்னை மேல் பாய்கிறான்; பாய்ந்து பலவாறு சுகங்கண்டவன் அவளது கொங்கைகளை (முலைகளை) தன் அகன்ற மார்பின் மீது வைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றானாம். ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுதும் படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுதும் அவனைப் பிரிந்திருக்கப் பொறுக்க மாட்டாயா? என்று கேட்கிறாள்.
ஆக நப்பின்¬னைபல் பிரிக்க முடியாத ஈடுபாடு கொண்டவன் கண்ணன் என்பதும்; அவனை விட்டுப் பிரியாத இயல்புடையவள் நப்பின்னை என்பதையும் ஆண்டாளே கூறுகிறாள்.
அப்படியிருக்கும்போது, அந்தக் கண்ணனைத் தான் அடைய வேண்டும் என்று ஆண்டாள் நினைக்கிறாள் என்றால் அந்த உரிமை எங்கிருந்து, எப்படி அவளுக்கு வந்தது?
கண்ணனைச் சந்தித்து அருள் பெற வேண்டுமென்றால், ‘கண்ணனை எழுப்பு’ என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து, உன் முலைமீது தலையை வைத்துப் படுத்திருக்கிறானே அவனை எழுப்பு என்றா கூறுவது? இதுதான் உங்கள் இந்துப் பண்பாடா?
வீட்டுக்கு வெளியிலே நிற்கிற ஆண்டாளுக்கு, முலை மீது மார்பு வைத்துக் கண்ணன் படுத்திருக்கும் காட்சி எப்படித் தெரிந்தது? சன்னல் திறந்தாளா? அல்லது அவர்கள் திறந்து போட்டுக் கொண்டே... அது வேறு ஆராய்ச்சி.
அது மட்டுமல்ல,
“நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற வரிகளுக்கு விளக்கம் கூறுகின்ற விளக்கவுரையாளர்கள், “நப்பின்னை முலைமேல் மார்பை வைத்துக்கிடந்தவனே” என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது “நப்பின்னையின் முலைகளைத் தன் மார்பின் மீது எடுத்து வைத்துக் கொண்டு கிடந்தவனே” என்றும் பொருள் கொள்ளலாம் என்று நம் வசதிக்கு விட்டுவிடுகிறார்கள்!
எப்படி பக்திச் சுவை? சொட்டுகிறது! இல்லை இல்லை சுரக்கிறது பாருங்கள்!
கண்ணன் பள்ளியறையைப் (படுக்கையறையை) பார்க்கும் உரிமை பெற்ற ஆண்டாள் கடவுளுக்குப் பொட்டுக் கட்டியவளாகத் தானே இருக்க முடியும்? அவள் சராசரி குடும்பப் பெண்ணாக, கடவுளின் பக்தையாக எப்படியிருக்க முடியும்? அது மட்டுமா?
கண்ணனை எண்ணியெண்ணி, ஆண்டாள் ஏக்கப் பெருமூச்சு விட்டுப் பகலிரவு எல்லாம் அவன் நினைவாகவே இருக்கிறாள். அதனால் கனாக் காணும்போதுகூடக் கண்ணன் தன்னை மணம் புரிந்துகொள்வது போலவே கனவு காணுகிறாள்.
ஆண்டாள் கனவில் “வாரணம் வந்ததாம், பூரண பொற்குடங்கள் வந்தனவாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிடப்பட்ட பந்தலாம்; இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்தார்களாம்; நாச்சியார் (ஆண்டாள்) மந்திரக் கோடிப்பட்டு உடுத்தி வந்தாராம்; மாயவன் (கண்ணன்) மணமாலை சூட்டினானாம்!
நான்கு திசையிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள் பல்லாண்டு பாடினார்களாம்.
கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தைக் கலசத்தோடு ஏந்தியபடிச் சதிரிள மங்கையர் வந்து எதிர் கொண்டார்களாம்; மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம்.
முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்.
செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்!
அவன் எப்படி? அதாவது கண்ணன் எப்படிப்பட்டவன்?
“ஏ, வெண் சங்கே; சொல்!
அவன் (கண்ணன்) வாய் இதழில் கற்பூரம் மணக்கமோ? கமலப் பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய் தான் தித்திக்குமோ?
ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச்சங்கே! பாஞ்ச சன்னியமே!
அவன் இதழ்ச் சுவை எனக்குச் சொல்லமாட்டாயா!
ஏ மேகங்களே!
வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்! எனக்குப் பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா!
ஒரு பெண் கொடியை வதை செய்தால், இவ்வையகத்தார் மதிப்பாரா?”
இப்படியெல்லாம் கண்ணனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதுபோல ஆண்டாள் கனவு காண்கிறாள்; துடிக்கிறாள்.
அடுத்தவள் கணவனை அடைய நினைப்பதே தப்பு. ஆனால், ஆண்டாள் கல்யாணமே செய்து கொள்ளத் துடிக்கிறாள். கல்யாணமே செய்து கொண்டுவிட்டதாக மகிழ்கிறாள். அது மட்டுமா?
கண்ணனுடைய உறுப்புச் சுவைகளை எண்ணியெண்ணி ஏங்குகிறாள். கண்ணனுடைய உதடுகளின் சுவை எப்படியிருக்கும் என்ற வலம்புரிச் சங்கைக் கேட்கிறாள். காரணம் சங்கை வாயில் வைத்து ஊதுகிறவன் கண்ணன் ஆயிற்றே. அதனால் அவன் இதழ்ச் சுவை அதற்குத் தெரிந்திருக்கும் என்பதால்!
அடுத்தவன் கணவனை அனுபவிக்க இப்படியெல்லாம் ஒரு சராசரி குடும்பப் பெண், ஒரு பக்தை அலைவாளா? இப்படியெல்லாம் ஏங்குவாளா? ஆனால், ஆண்டாள், அலைந்தாள்தான் என்றால் வைரமுத்து சொல்வது சரிதானே!
கடவுளுக்கு உரியவளாக ஆக்கப்பட்டதால்தான் ஆண்டாளுக்கு இந்த உரிமையும் உணர்வும் இருந்தது என்பது இதிலிருந்து உறுதியாகிறதே!
அயல்நாட்டு ஆய்வாளரின் கருத்தை எடுத்துக் கூறியதற்கே இப்படி எகிறிக் குதிக்கிறார்கள்! மனம் புண்ணாகி விட்டது என்கிறீர்கள்!
மற்ற கடவுள்களை இழிவாய்ப் பேசிய கண்ணன் குற்றவாளி அல்லவா?
உங்கள் பகவத் கீதை கிருஷ்ணனைத் தவிர மற்ற கடவுளை வணங்குகிறவர்கள் அறிவற்றவர்கள் என்கிறதே அது சிவன் முதலிய கடவுளை வணங்குகிறவர்களைப் புண்படுத்தாதா?
பகவத்கீதை ஏழாவது அத்தியாயத்தில் கிருஷ்ணன் சொல்கிறார்: “ஜனங்கள் தமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை இழந்து, தம்முடைய ஸ்வபாவத்திற்கு கட்டுப்பட்டு அந்த அந்தத் தேவதைகளுக்காக ஏற்பட்ட விரதங்களுடன் இதர தேவதைகளை (சிவன், காளி, விநாயகர், முருகன் போன்றவை) சரணடைகிறார்கள். அவர்கள் சிரத்தையுடன் அத்தேவதைகளுக்குப் பூஜை செய்தாலும், நானே அமைத்துத்தந்த பலனையே அந்தத் தேவதைகள் மூலம் அவர்கள் பெறுகிறார்கள்.
ஆனால், அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்தப் பலன் அழியக் கூடியது.”
(பகவத்கீதை அத்தியாயம்-7, சுலோகம் 20, 22, 23)
“அர்ஜுனா! பிரம்மலோகம் வரையிலுள்ள எல்லா லோகங்களும் அழிவுள்ளவை. குந்தி மகனே! என்னை அடைந்து விட்டாலோ, மறுபிறவி கிடையாது” என்று அத்தியாயம் 8, சுலோகம் 16-இல் கிருஷ்ணன் கூறுகிறார்.
“பிரம்மலோகம் வரையில் உள்ள லோகங்களெல்லாம் அழிவுள்ளவையாக்ஷகையால் அவைகளுக்குச் செல்பவர்கள் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும். ஆனால், வைகுந்தம் அடைபவர்கள் மறுபிறவி எடுத்துத் துன்பப்பட மாட்டார்கள்” என்று இந்த சுலோகத்திற்கு விளக்கம் அளிக்க வந்த ராமானுஜர் கூறுகிறார்.
இது இந்து மதத்தில் உள்ள சைவர்களை மற்றக் கடவுளை வணங்குகிறவர்களை புண்படுத்தாதா? இழிவுபடுத்தாதா? ஆத்திரப்படுத்தாதா?
திருப்பாவை ஓர் ஆபாசக் களஞ்சியம்:
அது மட்டுமல்ல. திருப்பாவை எப்படி பக்தி நூலாகும்? அது எப்படி புனிதப் பாசுரமாகும்!
திருப்பாவையில் தொட்ட இடமெல்லாம் ஆபாசமும் காமவெறியுமே காட்சி தருகிறது. ஆண்டாள் தன் காமத்தினவை உரசித் தீர்க்க உதிர்த்த வார்த்தைகளின் தொகுப்பே திருப்பாவை.
பாவை நோன்பிற்குப் பெண்கள் வீடு வீடாகச் சென்று பெண்களை எழுப்புகிறார்கள். பின்பு, நோன்பு ‘பறை’ பெறுவதற்காகக் கண்ணனை எழுப்புகிறார்கள். இவ்வளவுதான். அவ்வாறு எழுப்பும்போதுதான் இவ்வளவு ஆபாசங்களும்.
தோழியின் வீட்டிற்குமுன் ஆண்டாள் வருகிறாள். தோழி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை ஆண்டாள் எழுப்புகிறாள். எப்படித் தெரியுமா?
அவள் பெயர் சொல்லி அழைத்தாளா? இல்லை. நீண்ட கூந்தலை உடையவளே என்று அழைத்தாளா? இல்லை, சிற்றிடை உடையவளே! என்று அழைத்தாளா? இல்லை.
“புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்” என்று அழைத்தாள். அதாவது,
புற்றில் வாழ்கின்ற பாம்பின் படத்தைப் போன்ற வடிவம் உடைய அல்குல் (பெண் உறுப்பு) உடைய பெண்ணே! எழுந்து வா.... என்று அழைத்தாள்.
மறைவாய் இருக்கிற ஒரு உறுப்பை, வாயால் சொல்லாததை மரபாய்க் கொண்டுள்ள ஒரு உறுப்பைச் சொல்லி, அந்த உறுப்பின் வடிவம் (ஷிலீணீஜீமீ), பரப்பு, அழகு எப்படியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணஞ் சொல்லி அப்படிப்பட்ட அல்குல் (பெண்ணுறுப்பு) உடையவளே எழுந்துவா என்றால் அதுதான் பக்திச் சுவையா? இதுதான் பண்பாடா? இதுதான் தெய்வீகப் பாடலா?
நல்லவிதமாய்ப் பெண்ணைக் கூப்பிட்டால்; ஆணைக் கூப்பிட்டிருந்தால்நேந்தரம் பழம், பச்சை, மொந்தன் வாழைப்பழம் எல்லாம் உதாரணமாய் வந்திருக்கும்!
இந்தப் பாடலில் மட்டுமல்ல, எல்லாப் பாடலிலுமே காமவெறி எடுத்த ஒரு பெண், வார்த்தைகளால் வெறியைத் தேய்த்துத் தீர்க்கின்ற உள நிலையே திருப்பாவையில் பரவலாகக் காணப்படுகிறது.
ஒரு கன்னிப்பெண், தனக்கு நல்ல கணவன் வேண்டும் என்றால், தனக்கு விருப்பமானவனை நினைத்து ஆசைப்பட வேண்டும்; நோன்பில் நம்பிக்கையிருந்தால், அவன் கிடைக்க நோன்பு மேற்கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, அடுத்தவளின் கணவன் தனக்கு வேண்டும் என்று நினைத்தால் அது எப்படிப் பண்பாடாகும்? எப்படி நியாயமாகும்? ஆனால், ஆண்டாள் இப்படிச் செய்கிறாள் என்றால், அவள் கடவுளிடம் ஒப்படைக்கப்பட்ட உரிமையில்தான் என்பது எளிதில் விளங்குமே!
திருப்பாவை 30 பாடல்களும் ஆண்டாளால் பாடப்பட்டவையா?
திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. இதில 30-ஆவது பாடல் ஆண்டாளால் இயற்றப்பட்டது அல்ல. இவ்வாறு சொல்லும்போது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும். ஆனால், உண்மை அதுதான்.
“வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை யணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்”
இதுதான் திருப்பாவையின் 30-ஆவது பாடல்.
திருப்பாற் கடலைக் கடைந்த கண்ணனை, இடையர்குலப் பெண்கள் சென்ற வணங்கிப் பாவை நோன்பிற்குரிய பறையை பெற்ற வரலாற்றை விளக்கிப், பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் பாடிய முப்பதும் அடியவர்கள் கூட்டமாகக் கூடி அனுபவிப்பவை. அந்த முப்பது பாடல்களையும் நாள்தோறும் தவறாமல் பாடினால் திருமாலின் அருளைப் பெற்றுப் பேரின்பம் அடைவர் என்பதே இப்பாடலின் பொருள்.
இடையர்குலப் பெண்கள், கண்ணனிடம் ‘பறை’ பெற்ற வரலாற்றைக் கூறும் 30 பாடல்களையும் பாடினால் கண்ணனிடம் அருள் கிடைக்கும் என்று இப்பாடலில் சொல்லப்பட்டிருப்பதால், இப்பாடலுக்கு முன் முப்பது பாடல்கள் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன் 29 பாடல்கள்தான் உள்ளன.
மேலும், கண்ணனிடம் ‘பறை’ பெற்ற வரலாற்றை விளக்கம் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்கள் என்று வந்துள்ளதால், பறை பெற்ற வரலாற்றைக் கூற 30 பாடல்கள் இருக்க வேண்டும். ஆனால், பறை பெற்ற வரலாற்றைக் கூற 29 பாடல்களே உள்ளன.
அதுமட்டுமன்றிப் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் பாடிய 30 பாடல்களையும் தப்பாமல் பாடினால் திருமால் அருள் கிடைக்கும் என்று, வேறு ஒருவர் கூறுவதுபோல இப்பாடலில் கூறப்படுவதிலிருந்து, இப்பாடலை ஆண்டாள் பாடவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், வேறு யாரோ ஒருவர் இப்பாடலை எழுதி இறுதியாகச் சேர்த்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
சைவர்களும், வைணவர்களும் போட்டியிட்டுத் தங்கள் சமயத்தைத் தீவிரமாகப் பரப்பிய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது திருப்பாவையும் திருவெம்பாவையும். திருவெம்பாவை சைவப் பிரச்சாரத்திற்குச் சிவனைப் போற்றி மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் எழுதப்பட்டது. (ஆனால், திருப்பாவையில் உள்ளது போன்ற ஆபாசமோ, காமவெறி கொண்ட கவிதைகளோ இல்லை.)
சைவத்திற்கு எதிர்தரப்பான வைணவத்திற்குப் பிரச்சார நூலாகத் திருப்பாவையை வைணவர்கள் பயன்படுத்தினர். அதற்காக இந்த 30-ஆவது பாடலை எழுதிச் சேர்ந்தனர். திருப்பாவையைப் பாடினால் கண்ணனைப் பாடினால் பயன் கிடைக்கும் என்று பக்தர்களைத் தூண்டுகின்ற வகையில் அந்த 30-ஆவது பாடலை அமைத்தனர். எனவே, 30-ஆவது பாடல் பிற்சேர்க்கையாகும்.
மார்கழி மாதம் 29 நாள். (பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் 30 நாள்கள் வரும்) 29 நாட்களுக்கும் 29 பாடல்களைக் கணக்கிட்டு ஆண்டாள் பாடியிருக்கிறார்.
எனவே கண்ணனிடம் பறை கேட்கும் 29-ஆவது பாடலோடு ஆண்டாள் பாடிய திருப்பாவை முடிகிறது.
எனவே, 30-ஆவது பாடல் ‘பறை’ பெற்ற வரலாற்றைக் கூறுவது அல்ல; ஆண்டாளின் பாடல்களைப் பாடினால் என்ன பயன் என்பதைக் கூறிப் பிறர் சேர்த்த பாடல் எனப்து தெளிவாகிறது.
தில்லுமுல்லு செய்து இறுதியாக 30-ஆவது பாடலைச் சேர்த்தவர்கள், இதற்குமுன் 29 பாடல்கள்தானே உள்ளன. இதையும் சேர்த்துதானே 30 பாடல் என்று சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள். புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும் என்ற திறமைகூட இல்லாதவர்கள்.
வைணவத்தைப் பரப்ப வேண்டும் என்ற முனைப்பில் திருட்டுத்தனம், தில்லுமுல்லுச் செய்தவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர் என்பதுதானே இதிலிருந்து தெரியவருகிறது?
4000 திவ்யப் பிரபந்தத்தில் 4000 பாடல்கள் உண்டா?
4000 திவ்யப் பிரபந்தம் என்ற கணக்கே மோசடியாயிற்றே! திவ்யப் பிரபந்தத்தில் 4000 பாடல்கள் இல்லையே! இப்படித் தோண்டினால் வண்டிவண்டியாய் வரும் எச்சரிக்கை! அறிவு நாணயம் இருந்தால் ஆதாரத்தோடு மறுத்துப் பாருங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக