வெள்ளி, 16 ஜூன், 2017

பிரித்திகா முதல் மோனிகா வரை! - சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றுக்கு வந்தது இப்படித்தான்

விகடன் :சூப்பர் சிங்கருக்கு இது பத்தாவது சீஸன். இறுதிச்சுற்றுக்கு ஐந்து தங்கங்கள் தகுதிபெற்றிருக்கின்றன. அதில் மூன்று சிறுமிகள், இரண்டு சிறுவர்கள். மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மாலை வேளையில் செல்லக்குரலோன்களைச் சந்தித்தேன். கௌரி, பிரித்திகா, தனுஷ், மோனிகா, பவின் என இந்த ஐவர் கூட்டணிதான் இறுதிச்சுற்றில் அசத்தப்போகிறது. இந்தச் சிறிய வயதில் எப்படி வந்தது இசைஞானம்? விஜய் டிவி-யில் சூப்பர் சிங்கருக்குத் தேர்வானது எப்படி... எனப் பல கேள்விகளுக்கும் ஆர்வமாக விடை சொல்ல ஆரம்பித்தனர் செல்ல குட்டீஸ்.
தனுஷ்
தனுஷ்:
பிரித்திகா ``ஒன்பதாவது படிக்கிறேன். செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கேன். அப்பா பெயர் சேகர். கார் கம்பெனியில் பேக்கேஜிங் வேலை பார்க்கிறார். அம்மா செல்வி வீட்டுவேலை செய்றாங்க. எனக்கு இப்படியொரு திறமை இருப்பதே தெரியாது.  சின்ன வயசுலிருந்தே ஏதாவது பாடிட்டே இருப்பேன். ஒரு போட்டியில் கலந்துக்கிட்டு நல்லா பாடினப்பதான் என் வாழ்க்கையே மாற ஆரம்பிச்சிச்சு. அங்கே இருந்த காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  `உனக்கு நல்லா பாட வருது. சூப்பர் சிங்கர்ல போய்ப் பாடு'னு  சொன்னாங்க. `அதுக்கு எப்படிப் போறதுன்னு தெரியாது'னு சொன்னேன். அப்புறம் அவங்களே எனக்காக வீட்ல வந்து பேசினாங்க.

அப்பா- அம்மா ரெண்டு பேரும் `அதெல்லாம் எப்படி சாத்தியம்?'னு கேட்டாங்க. அந்த காலேஜ் அண்ணாக்கள் எல்லாரும் சேர்ந்துதான் என்னை ஆடிஷனுக்கு அனுப்பிவைச்சாங்க. நான்  நல்லா பெர்ஃபாம் பண்ணி செலெக்ட் ஆனதுல என்னைவிட அவங்களுக்குத்தான் ரொம்ப சந்தோஷம்.
நான் புரொஃபஷனலா எங்கேயும் போய் மியூசிக் கத்துக்கல. நான் ஆடிஷன்ல செலெக்ட் ஆன விஷயம் தெரிஞ்சதும் அப்பா என்னைக் கட்டியணைச்சு முத்தம் தந்தார். எனக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்கும். அவர் என்மேல ரொம்பப் பாசம் வெச்சிருக்கார். அவருக்கு எவ்வளவு நேரம் வொர்க் இருந்தாலும் தினமும் என்கூட அரை மணி நேரமாவது பேசுவார். `பிடிச்சதைச் செய்யணும்'னு ஊக்கப்படுத்துவார். அவருக்கு சம்பளம் கம்மின்னாலும், நான் என்ன கேட்டாலும் எப்படியாவது வாங்கித் தருவார். ஐ லவ் மை டாடி'' என ஃபீலிங்குடன் பேசிய தனுஷை, சற்றே  தேற்றினோம்.
தனுஷுக்கு, கண் பார்வை இல்லை. பாடல் வரிகளைப் படிக்காமல், எழுதாமல் கேள்விஞானத்தால் அருமையாகப் பாடுகிறார்.  அப்படிப் பாடும்போது ஏற்படும் டெக்னிக்கல் தவறுகளை சூப்பர் சிங்கர் நடுவர்கள் திருத்தவே, தற்போது அசத்தலாகப் பாடுகிறார். தனுஷுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. ``அவர் முன்னாடி பாடணும்னு ஆசை. அது சூப்பர் சிங்கர் மூலமா நிறைவேறிடுச்சு'' எனச் சொல்லும்போது தனுஷ் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.
பிரித்திகா:
இந்த சீஸனின் சென்சேஷன் பிரித்திகா. கிராமத்து வாசனையுடன் இவர் பாடிய பாடல்களுக்குச் சொக்கித்தான்போயினர் பார்வையாளர்கள். `செந்தூரா...' பாடலை இவர் பாடிய வீடியோவை இன்னமும் ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் நெட்டிசன்கள். பிரித்திகாவிடம் பேசினேன்.  கிராமம் டு சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்று மேடைப் பயணத்தை புன்சிரிப்புடன் விவரிக்கிறார்.
"திருவாரூர்ல இருக்கும் தியானபுரம் கிராமத்திலிருந்து இங்கே வந்திருக்கேன். அப்பா ரமேஷ் டிங்கரிங் வேலை பார்க்கிறார். அம்மா பொன்மலர்   வீட்டுல இருப்பாங்க. சில சமயம் வீட்டுலயே தைக்கவும் செய்வாங்க. எங்க ஊர்ல ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். எங்க ஊர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?" என பிரித்திகா கண்களை விரித்தபோது முகம் நிறைய புன்னகை.
``எனக்கு எப்பவுமே பாட்டு பிடிக்கும். ரொம்பச் சின்ன வயசுலேயே எனக்குப் பிடிச்ச பாட்டு 'ஜன கன மன'தான். ஸ்கூல்ல அந்தப் பாட்டைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகிடுச்சு. சும்மா இருக்கும்போதும் அந்தப் பாட்டைப் பாடிட்டே இருப்பேன். அப்புறம் என்னோட டீச்சர்ஸ்தான் என்னை ஊக்கப்படுத்தினாங்க. `உன் குரல் நல்லா இருக்கு பிரித்திகா, சங்கீதம் கத்துக்கோ'னு சொன்னாங்க. ஆனா, வீட்ல அவ்ளோ வசதியில்லை. நான் மூணாவது படிச்சுட்டு இருக்கப்ப சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆடிஷன் நடந்துச்சு 'போய் கலந்துக்கிட்டு வாம்மா'னு டீச்சர்ஸ் அனுப்பிவெச்சாங்க. நான் பெருசா பெர்ஃபாம் பண்ணலை.
நான் நல்லா பாடுறேன்னு தெரிஞ்சதும், அப்பா என்னை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.  `உனக்கு பாட்டு நல்லா வருதும்மா'னு  எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பார். ஏழாவது படிக்கிறப்ப  மீண்டும் சூப்பர் சிங்கர் ஆசை வந்துச்சு. அப்பாகிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். மதுரையில் நடந்த ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப்போனார். `பயமா இருக்குப்பா'னு சொன்னேன். நீ ஒண்ணும் கவலைப்படாத கண்ணு. சும்மா பாடிட்டு வா,  எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு'னு சொல்லிக்கிட்டே இருந்தார். `மன்னார்குடி கலகலக்க...' பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். விஜய் டிவி-யில் வந்ததும் குடும்பமே சந்தோஷமாகிடுச்சு.
சூப்பர் சிங்கர்ல நெக்ஸ்ட் லெவல் போகணும்கிறதுக்காக சில விஷயங்களைக் கத்துக்க க்ளாஸ் போனேன். வார இறுதியில் 30 கி.மி பஸ்ல போய் நாகப்பட்டினத்துல இருந்த ஒரு இசை வகுப்பில் கத்துக்கிட்டேன். என்னோட குரலுக்கு எந்தெந்தப் பாடல்கள்  நல்லாருக்கும்னு சாய்சரண் அண்ணாதான் செலெக்ட் பண்ணார். ஆனந்த் சார்தான் பாடும்போது எந்தெந்த இடங்கள்ல வாய் எவ்வளவு திறக்கணும் மூடணும்னு டெக்னிக்கலா பல விஷயங்கள் சொல்லித்தந்தார்.
சென்னைக்கு ஒவ்வொரு தடவையும்  வர்றதுக்கு வீட்ல கஷ்டம். என்னோட டீச்சர்ஸ்தான் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் தந்துட்டே இருப்பாங்க. `பணம் பத்தியெலாம் கவலைப்படாத'னு சொல்லி பணத்தைத் திணிச்சு அனுப்புறது என்னோட ஊராட்சி ஒன்றியப் பள்ளி டீச்சர்ஸ்தான். எங்களுக்கு முன்னாடி எல்லாம்  சொந்தம்னு பெருசா இல்லை. டிவி-யில் பாடினதுக்குப் பிறகு நிறைய சொந்தக்காரங்க கிடைச்சிருக்காங்க. தமிழ்நாட்டு மக்கள் என்னை எங்கே பார்த்தாலும் என்கூட நின்னு செல்ஃபி எடுத்துக்குறாங்க. அப்போதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கு கிடைச்ச வரவேற்பு எல்லாம் நம்பவே முடியலை. கிராமத்துல இருந்து வந்த என்னை நடுவர்களும் மக்களும் ஏத்துக்கிட்டாங்க, உற்சாகப்படுத்துறாங்க. `இதெல்லாம் கனவா?'னு அப்பப்போ சந்தேகம் வரும். இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்ற விஷயம் தெரிஞ்சதும்  கண் கலங்கினார் அப்பா. என்னோட கிராமம், அப்பா, அம்மா, டீச்சர்ஸ்னு இவங்களுக்காக நிறைய சாதிக்கணும்னு தோணுது. சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில் என்னால் முடிந்த அளவுக்கு பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தருவேன்" எனச் சொல்லிவிட்டு மீண்டும் பிராக்டீஸ் செய்ய ரெடியாகிறார்  பிரித்திகா. இவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு என்றால் கொள்ளை இஷ்டமாம்.
கௌரி
மோனிகா : -
"நான் சென்னை வில்லிவாக்கம் பொண்ணு. அப்பா ராமமூர்த்தி ஐ.சி.எஃப்-ல  வொர்க் பண்றார். அம்மா கவி பிரியா ஹவுஸ் வொய்ஃப். அம்மாவுக்குப் பாடகியாகணும்னு ஆசை. அது நிறைவேறலை. என்னைப் பாடகியாக்கிட்டாங்க. இப்போ சூப்பர் சிங்கர் மேடையில இருக்கேன்" - தடதடவென ஆரம்பிக்கிறார் மோனிகா.
``இந்த மேடை எப்படிச் சாத்தியமாச்சு?''
``எனக்கு இயல்பாவே  சின்ன வயசுல நல்லா பாட்டு வந்ததா அப்பா சொல்வார். அஞ்சு வயசுலயே  கர்னாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சேன். ஏற்கெனவே 2014-ம் ஆண்டு சூப்பர் சிங்கர்ல நான் கலந்துக்கிட்டேன். அதுல பாதி வரைக்கு வந்தேன். அந்த சீஸன்ல தோத்துப்போனதுக்குப் பிறகு, எனக்கு ரொம்பவே உற்சாகம் வந்துடுச்சு. அடுத்த சீஸன்ல நிச்சயம் ஜெயிக்கணும்னு நிறைய பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு அப்பாவும் அம்மாவும் உறுதுணையாக இருந்தாங்க. இந்த முறை பாடல்கள் தேர்வு எல்லாத்துலயும் கவனமா இருந்தேன். `இந்த சீஸன்ல செலெக்ட் ஆனதும் நிச்சயம் ஃபைனல் போகணும் மோனிகா'னு அம்மா சொன்னாங்க. இப்போ ஃபைனல் வரைக்கு வந்துட்டேன். `என் பெரிய ஆசை நிறைவேடுச்சு'னு அம்மா சொன்னாங்க. 'நீ சாதிச்சுட்ட பாப்பானு' அப்பா கொஞ்சினார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு இளையராஜா சார்னா ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பார்க்கணும்னு ஆசை.  எனக்கு ஜூஸ்ன்னா இஷ்டம். ஃபைனல் முடிஞ்ச உடனே எனக்கு ஜூஸ் வாங்கித்தரணும்னு அப்பாகிட்ட கண்டிஷன் போட்டிருக்கேன்'' என மழலை மாறாமல் சொல்கிறார் மோனிகா.
பவின்
பவின் :- 
கேரளாவைச் சேந்த  பவின், எக்கச்சக்க தமிழக  ரசிகர்களைக் குறுகிய காலத்தில் சம்பாதித்திருக்கிறார். தமிழில் பேச  சற்றே தடுமாறுகிறார். ஆனால், பாடும் போது உச்சரிப்பில் 'அட!' போடவைக்கிறார். அவரிடம் பேசினேன்.
``பாலக்காடு பகுதியிலிருந்து வந்திருக்கேன். 13 வயசாகுது. ஒன்பதாவது படிக்கப்போறேன். அப்பா வருண்குமார், எங்க ஊர்ல கோயிலில் கோலம் போட்டு பாட்டு பாடுவார். அம்மா ஷோபனா, வீட்ல இருப்பாங்க. கேரள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். சின்னவயசுல இருந்தே அப்பாகூடவே அதிக நேரம் இருப்பேன். அப்பா பாடுறதைக் கேட்டு எனக்கும் பாடணும்னு ஆசை வந்திருச்சு. க்ளாசிக்கல் மட்டும் கத்துக்கிட்டேன்.  அப்பா எனக்கு இன்ஸ்பிரேஷன். அக்கா  எனக்கு மென்ட்டார். எனக்கு சூப்பர் சிங்கர் அறிமுகப்படுத்தினது அவங்கதான். என்னோட பாடல் தேர்வுகளும் அவங்கதான் பார்த்துக்கிறாங்க.
இப்போ தமிழ் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். எழுதவும் பழகியிருக்கேன். ஒரு பாடலை ரெண்டு தடவைக் கேட்டாலே எனக்குப் பெரும்பாலான வரிகள் மனப்பாடம் ஆகிடும். இங்கே ஆனந்த் சார்தான் என்னோட தவறுகளைத் திருத்தினார். எனக்கு டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும்னு கனவு இல்லை. நான் பாடகர் ஆகணும்னுதான் ஆசை. இப்போ குடும்பத்துல பொருளாதார ரீதியா நிறைய பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் சரி செய்யணும்'' எனப் பொறுப்போடு பேசுகிறார்  பவின்.
மோனிகா
கௌரி :
ஐந்து பேரில் கொஞ்சம் சீனியர் இவர்தான். ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புக்குச் செல்கிறார். கேரளத்துக் குயில்  கௌரி தைரியமான சுட்டிப் பெண். "திருவனந்தபுரத்திலிருந்து சூப்பர் சிங்கருக்கு வந்திருக்கேன். அப்பா துளசிதரன், அம்மா ப்ரியா . ரெண்டு பேருமே டெய்லர் வேலை பார்க்கிறாங்க. நாலு வயசுயுல இருந்தே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். கிட்டத்தட்ட 10 வருஷ உழைப்புக்கு இப்போ சூப்பர் சிங்கர் மேடை கிடைச்சிருக்கு.
நான் ஏற்கெனவே மலையாள சேனலான சூர்யா டிவி-யில் சூர்யா சிங்கர்னு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கே இறுதிச்சுற்று வரை வந்தேன். விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல டிரை பண்ணிப் பார்க்கலாம்னு தோணுச்சு. 'டூபாடு'ன்னு ஒரு இணையதளம் மூலமா என் குரலைப் பதிவுசெய்து அனுப்பினேன். டாப் 15-ல செலெக்ட் ஆனேன். இதுதான் நான் சூப்பர்  சிங்கருக்குள் நுழைந்த கதை'' எனச் சிரிக்கிறார்.
"எனக்கு உறவினர்கள், பள்ளியில் பெரிய ஆதரவு எல்லாம் கிடையாது. தமிழ்நாட்டில்தான் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க. எங்கே போனாலும் என்னை  விஷ் பண்றாங்க. இவ்ளோ பெரிய வெளிச்சம் பாயும்னு எதிர்பார்க்கவே இல்லை. ஃபைனலில் செலெக்ட் ஆன  பிறகு, அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார். `உன்னால் முடிஞ்ச அளவுக்கு நல்லா பாடுமா'ன்னு வாழ்த்தினார். நாங்க இன்னும் வாடகை வீட்டுலதான் இருக்கோம். எல்லாம் மாறணும்னு கனவு. அது நிறைவேறும்னு நம்பிக்கை இருக்கு"  மலையாள வாசமே இல்லாமல், அழகாகத் தமிழ் பேசுகிறார் கௌரி. 
வெவ்வேறு போட்டியாளர்கள். பெரும்பாலும் எளிய குடும்பத்தில் பெரிய இசைப் பின்னணி எதுவும் இல்லாமல் வந்திருக்கிறார்கள். பலருக்கும் பல ஆசைகள்; பல கனவுகள். எல்லாம் மெய்ப்படட்டும்.

கருத்துகள் இல்லை: