புதன், 14 ஜூன், 2017

சட்டசபையில் கூச்சல்-அமளி: மு.க.ஸ்டாலின் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்

எம்.எல்.ஏ. சரவணன் வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கூவத்தூரில் கோடிக்கணக்கில் பணம்-தங்கம் வழங்கப்பட்டதாக பரபரப்பு வீடியோ வெளியானது. ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த சரவணன் எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த வீடியோவில் பேட்டி அளித்திருந்தனர். இந்த பிரச்சனை இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள எந்த பொருள் குறித்தும் சபையில் விவாதிக்க முடியாது, சபை விதி அதற்கு அனுமதிக்கவில்லை என்றார்.


உடனே தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பேச அனுமதி கேட்டு கோ‌ஷம் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரையும் சபாநாயகர் உட்காரச் சொன்னார். என்றாலும் தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பியவாறே இருந்தனர்.

பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வருகின்றன. தொலைக்காட்சிகளிலும் செய்தி போடுகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட உறுப்பினரே அதை மறுத்துவிட்டார். கோர்ட்டில் இருக்கும் பிரச்சனை குறித்து இங்கு பேச அனுமதிக்க முடியாது என்றார்.

இதை ஏற்காமல் தி.மு.க.வினர் மீண்டும் கோ‌ஷமிட்டவாறு இருந்தனர். மு.க.ஸ்டாலினும், துரை முருகனும் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது துரை முருகன் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார்.

உடனே துரைமுருகன் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டு இருக்கிறது என்று பேச தொடங்கியதும் சபாநாயகர் குறுக்கிட்டு நீதிமன்றத்தில் இருக்கும் பொருள் பற்றி பேச அனுமதி இல்லை, வேறு பொருள் பற்றி பேசுங்கள் என்றார்.


அப்போது தி.மு.க. வினர் பல்வேறு வாசகங்கள் எழுதிய காகிதங்களை காட்டினார்கள். அதில் ‘‘எம்.எல்.ஏ. பார் சேல்’’ (எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு) என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலின்:- இந்த வழக்கு தற்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை. 16-ந்தேதிதான் எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. எனவே பேச அனுமதிக்க வேண்டும்.

சபாநாயகர்:- சட்டமன்ற விதி 92-ன்படி கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும் பொருள்பற்றி கூட இங்கு பேச அனுமதி இல்லை.

இதனால் மீண்டும் சபாநாயகருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைவரும் எழுந்து நின்று கோ‌ஷமிட்டவாறு இருந்தனர். தமிழக அரசுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினர்.

அதன் பிறகு துரைமுருகனுக்கு பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார். உடனே துரைமுருகன் எழுந்து நான் ஒரு ஆலோசனை வழங்குகிறேன் என்று கூறி அரசு பற்றியும் சபாநாயகர் பற்றியும் சில வார்த்தைகளை கூறினார். அவற்றை சபாநாயகர் சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

பின்னர் சபாநாயகர் பேசுகையில், எனக்கு ஆலோசனை வழங்குவதாக குறிப்பிட்டு ராஜினாமா செய்யச் சொல்கிறார் என்றார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஒரு மூத்த உறுப்பினர் இப்படி பேசுவது முறையல்ல. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

(அப்போது தி.மு.க.வினர் மீண்டும் கோ‌ஷம் எழுப்பினார்கள். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் எதிர் கோ‌ஷம் போட்டனர்.)


அமைச்சர் தங்கமணி:- 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அ.தி.மு.க. உறுப்பினர் ஒரு வழக்கு தொடர்பாக பிரச்சனை எழுப்பிய போது, வழக்குபற்றி சபையில் பேசக் கூடாது என்று கூறியவர் முன்பு அமைச்சராக இருந்த இப்போதைய எதிர்க்கட்சி தலைவர்தான். அதை முன் உதாரணமாக வைத்து வேறு பிரச்சனை பற்றி பேசுங்கள் என்றார்.

அமைச்சர் செங்கோட்டையனும் இதே உதாரணத்தை தெரிவித்தார்.

சபாநாயகர்:- பத்திரிகை, தொலைக்காட்சியில் வருவது பற்றி இங்கு விவாதிக்க முடியாது. ஆதாரத்தை கொடுத்துவிட்டு விவாதிக்க வேண்டும்.

(உடனே தி.மு.க.வினர் காப்பாற்று... காப்பாற்று ஜனநாயகத்தை காப்பாற்று... தமிழக அரசே ராஜினாமா செய் என்று பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அதனால் சபையில் நீண்ட நேரம் கூச்சல் குழப்பம் நீடித்தது.) கடும் அமளிக்கு இடையே ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நடந்த பணப் பேரம் பற்றி விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் 11.06 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரை கண்டித்து கோ‌ஷமிட்டனர். ஆனால் பண பேரம் பற்றி விவாதிக்க சபாநாயகர் உறுதியாக மறுத்துவிட்டார்.

இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அமளியும் நீடித்தது. சுமார் 45 நிமிடங்களுக்கு சட்டசபையை நடத்த முடியாத அளவுக்கு கடும் கூச்சல்-குழப்பம் நிலவியது.


சபாநாயகர் பல தடவை வேண்டுகோள் விடுத்தும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து அமளி செய்தபடி இருந்தனர்.

இதையடுத்து சபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் முடிவு செய்தார்.

வழக்கமாக எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு வெளியேற்றும் போது ஒரே உத்தரவில் சபாநாயகர் அதை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் இன்று சபாநாயகர் அப்படி ஒரே வரியில் உத்தரவிடவில்லை. சபைக்குள் டிவிசன் வாரியாக உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரது பெயரையும் வாசித்து, அவர்களை வெளியேற்றும்படி சபைகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட மூத்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரது பெயரையும் சபாநாயகர் சொல்லி வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்படி மு.க.ஸ்டாலின் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற சபை காவலர்கள் அதிக அளவில் சபைக்குள் சென்றனர். அவர்கள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக தூக்கி வந்து வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் சபை காவலர்களுக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு விடுமோ என்ற சூழ்நிலை உருவானது. ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் அத்தகைய மோதலில் ஈடுபடவில்லை.

மிகவும் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் அவர்கள் சபையில் இருந்து தாமாகவே வெளியேறினார்கள். சபை காவலர்கள் தொடும் முன்பே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியில் வந்து விட்டனர். அவர்கள் சிறுமுரண்டு கூட பிடிக்கவில்லை.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளியேறும் போது, சபாநாயகர் இருக்கை அருகில் சென்று விடக் கூடும் என்று சபை காவலர்கள் பயந்தனர். எனவே சபாநாயகர் தனபால் இருக்கையை சுற்றி சூழ்ந்து பாதுகாப்பாக நின்றனர்.

ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் சபாநாயகர் இருக்கை அருகில் செல்லவில்லை. அமைதியாக வெளியேறினார்கள்.


சட்டசபை வளாகத்தை விட்டு வெளியில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் ஒன்று திரண்டனர். பிறகு அவர்கள் சட்டசபைக்கு எதிரே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசையும், சபாநாயகரையும் கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷமிட்டனர். சுமார் 10 நிமிடம் நீடித்தது. இதனால் ராஜாஜி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

உயர் போலீஸ் அதிகாரிகள் மறியல் நடந்த இடத்துக்கு வந்து மு.க.ஸ்டாலினுடன் பேச்சு நடத்தினார்கள். சாலை மறியலை கைவிடும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சாலை மறியலை கைவிட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.


அதன்படி மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டு ராயபுரம் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: