புதன், 14 ஜூன், 2017

குடியரசு தலைவர் தேர்தல் .. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது! எதிர்கட்சிகளை சந்திக்கும் பாஜக குழு!

குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி ஆளும் பாஜகவின் குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தேசிய அரசியல் அரங்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மூன்று நபர் கொண்ட குழுவை அமைத்தார் பாஜக தலைவர் அமித் ஷா.
மத்திய அமைச்சர்கள் ராஜ் நாத் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் மூலமாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒரு தளத்தில் கொண்டுவரலாம் என்று முடிவு செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதமே இதுகுறித்து 17 கட்சித் தலைவர்களை அழைத்து தன் இல்லத்தில் விருந்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் குலாம் நபி ஆசாத் தலைமையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து சக கட்சியினருடன் பேசிட குழு அமைத்தது.
பாஜக அமைத்த குழுவின் உறுப்பினர்களான வெங்கையா நாயுடு, ராஜ் நாத் சிங் ஆகியோர் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருடன் பேசியிருக்கிறார்கள். காங்கிரசும் ஒருபக்கம் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் ஜூன் 24 ஆம், தேதி அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். அதற்குள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்துவிட வேண்டும் என்று எண்ணுகிறாராம் பிரதமர். மேலும், ‘குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் தேவையா என்றும் பிரதமர் யோசிக்கிறார்' என்கிறனர் பாஜக மூத்த தலைவர்கள்.
இதன் அடிப்படையில்தான் சரத் யாதவ், சரத் பவார், மாயாவதி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சந்திர சேகர ராவ், ஓய.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியவர்களுடன் பாஜக குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
‘இந்த நிலையில்தான் ஏகமனதான குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்போம். தேர்தல் தேவையா?’ என்ற பிரதமர் மோடியின் முன்னெடுப்பு குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை பாஜகவின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் குழு வரும் வெள்ளிக் கிழமையன்று சந்திக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால்... அது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக அமைந்துவிடும் என்று கருதுகிறார் மோடி. அதைத் தடுக்கத்தான் இப்போது பாஜக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் ஏகமனதான குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டால் மோடியின் இமேஜ் தேசிய அரங்கில் மேலும் உயரும். ஆனால், தேர்தல் நடத்தி அதன் மூலம் அரசின் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றாலும் மோடியின் இமேஜ் கூடும்.
எனவே எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் கூடி பிரதமரின் மூவ் குறித்து இப்போது விவாதித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: