புதன், 14 ஜூன், 2017

ஸ்டாலின் : அதிமுகவினரே ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்

tamilthehindu :ஆட்சியை கவிழ்க்க துளியளவு கூட நாங்கள் முயற்சிக்கவில்லை. அதிமுகவினரே ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார். < திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருணாநிதி வைர விழா மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றபோது பேசியதாவது: ''நேற்றைய தினம் 'டைம்ஸ் நவ்' என்ற ஆங்கில தொலைக்காட்சியில் பரபரப்பாக செய்தி வெளியானது. அந்த செய்தி பற்றி அந்த தொலைக்காட்சியில் இருந்து என்னுடைய கருத்தை கேட்டபோது, 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். விதிமுறைகளை சுட்டிக்காட்டி உரிமையோடு கேட்டோம். முடிந்த வரையில் போராடினோம். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் காவல்துறையினரை பயன்படுத்தி எங்களை எல்லாம் அடித்து, துன்புறுத்தி, வெளியில் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்கள்.
அதன் பிறகு ஆளுநரை சந்தித்தோம், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். அப்போது நாங்கள் தெரிவித்தவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது' என்று தெரிவித்தேன்.
இந்த நிலையில் நான் குறிப்பிட விரும்புவது, ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்றைக்கு ஆட்சியை – அதிகாரத்தை எல்லாம் தக்கவைத்துக் கொள்வதற்காக, போட்டிப் போட்டுக் கொண்டு பல கோடி ரூபாய்களை பேரமாகப் பேசி, ஜனநாயகத்தினை படுகுழியில் தள்ளிய கொடுமை அரங்கேறியிருப்பதை, நேற்றைய தினம் வெளியான அந்த செய்தியின் மூலமாக நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.
எனவே, இரு அணிகளாக, மூன்றாகப் பிரிந்திருந்தாலும், கொள்ளையடிப்பதில் கூட்டுச்சதி செய்து பல அக்கிரமங்களை இவர்கள் செய்திருப்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. என்மீது கூட சிலருக்கு கோபம் உள்ளது. நமது தோழர்களுக்கே கொஞ்சம் ஆத்திரம் இருக்கிறது. 'இந்த ஆட்சியை இப்படியே விட்டு வைத்திருக்கிறீர்களே, இதற்கொரு முடிவு கட்டக்கூடாதா?', என்று எங்கு சென்றாலும் கேட்கிறார்கள். எனக்கு அருகில் இருப்பவர்களே இந்த ஆதங்கத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதுண்டு. நான் கருணாநிதியின் மகன். அவர் வகுத்த பாதையை தான் பின்பற்றுவேன்.
நேற்றைய தினம் நான் தூத்துக்குடிக்கு சென்ற நேரத்தில், பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பீர்களா என்று கேட்டபோது, நான் ஒரே வரியில், 'ஆட்சியை கவிழ்க்க துளியளவு கூட நாங்கள் முயற்சிக்கவில்லை. காரணம், அவர்களே ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்' என்று பதிலளித்தேன். அது நேற்றிலிருந்து தொடங்கி இருக்கிறது. நாளையா? நாளை மறுநாளா? அல்லது இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பே நடக்குமா? என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி சொல்ல வேறொன்றுமில்லை.
ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களைப் பற்றி சிந்திக்கின்ற இயக்கம் திமுக என்பதற்கு அடையாளமாக, அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை, விவசாயிகளின் பாசன நீர் பிரச்சினை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நீர் நிலைகளை தூர் வாரும் பணியினை நாம் தொடர்ந்து செய்கிறோம்.
இதுதான், தலைவர் கருணாநிதி நமக்கு வழங்கியிருக்கும், 'நமக்கு நாமே' திட்டம். இன்றைக்கு நாம் மக்கள் பிரச்சினைகளில் 'நமக்கு நாமே' ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் கூட்டுச் சதி செய்து, 'நமக்கு நாமே' என்று சொல்லி கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட தலைவர் கருணாநிதியின் வைர விழாவையும், பிறந்த நாளையும் கொண்டாடும் இந்த நேரத்தில், நாமெல்லாம் உறுதியேற்போம், சபதமேற்போம்'' என்று ஸ்டாலின் பேசினார்

கருத்துகள் இல்லை: