செவ்வாய், 13 ஜூன், 2017

துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் – SBI அறிக்கை !

பணமதிப்பழிப்பு  நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது; இனி வரும் காலங்களிலும் அதன் பாதிப்பு தொடரும்; இது வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாக் காசு அறிவிப்புக்குப் பின் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கில் (CASA) செலுத்தப்படும் பணத்தின் அளவு 4.10 சதவீதத்தில் இருந்து 39.30 சதவீதமாக அதிகரித்ததாகவும், இது மொத்த வைப்புத் தொகை சமன்பாட்டை குறைத்ததால் நீண்ட கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

இந்தப் போக்கின் விளைவாக மற்ற வணிக வங்கிகளோடு கடும் போட்டியில் ஈடுபட நேர்ந்துள்ளதாகவும், அதன் விளைவாக வங்கியின் மொத்த லாபம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை. ஏப்ரல் 1, 2017-ல் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியின் இணைப்பிற்குபிறகு பாரத ஸ்டேட் வங்கி உலகின் 50 பெரியவங்களில் இடம் பிடித்திருக்கிறது. 2016-ம் ஆண்டில் அதன் இடம் ஆகும். அதன் இறுதி நிலை அறிக்கையின் படி 33 இலட்சம் கோடி ரூபாயும், 24,017 கிளைகளும், 59,263 ஏடிஎம் எந்திரங்களும், 42 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். இருப்பினும் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வங்கியின் வர்த்தகத்தை பெரிதும் குறைத்து விட்டது.
மேற்படி வங்கி அறிக்கை நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டதல்ல. மாறாக பாரத ஸ்டேட் வங்கி சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை தனியார் நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Institutional Investors) விற்க முடிவு செய்துள்ளது. பங்குகளை வாங்கப் போகும் முதலீட்டாளர்களுக்கு வங்கியின் உண்மையான நிலைமையையும் பொருளாதாரத்தின் யோக்கியதையும் சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் தான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மக்களின் மேல் சொல்லொணாத் துயரங்களை கட்டவிழ்த்து விட்டதென்பதை விளங்கிக் கொள்ள வங்கிகளின் ஆய்வறிக்கைகள் தேவையில்லை – மக்கள் இன்றும் சந்தித்து வரும் சிரமங்களை நேரிடையாகவே பார்க்கலாம். ஆனால், இன்றைய தேதி வரை அரசின் தரப்பில் இருந்து உண்மை நிலையை விளக்கி எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில், குறைந்தபட்சம் திரும்ப அழைக்கப்பட்ட பணத்தின் மதிப்பு என்னவென்பதைக் கூட இது வரை மோடி அரசு வெளியிடவில்லை. மாறாக, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக, கருப்புப் பணத்தை ஒழித்து விட்டோமென்றும், கள்ளப் பணத்தை ஒழித்து விட்டோமென்றும், நாட்டின் பொருளாதாரம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது என்றும் நாளொரு பொய்யும் பொழுதொரு பொரணியுமாய் அள்ளித் தெளித்து வருகின்றது மோடி அரசு.
மோடியால் வாக்களிக்கப்பட்ட மூன்று கோடி வேலை வாய்ப்புகள் வெறும் வாயில் சுட்ட வடையாகிப் போன நிலையில் நாடெங்கும் சகல துறைகளிலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. இன்றும் கூட சில பல பாஜக ஆதரவு ஊடகங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை துணிச்சலான ஒன்று, ஊழல் – லஞ்சத்தை குறைத்து விட்டது, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரித்திருக்கிறது, சட்டப்பூர்வமான வர்த்தகத்தை விரித்து வருகிறது என்று கூசாமல் பொய்யுரைக்கிறாரகள். அவர்கள் யாரும் இந்த வங்கி அறிக்கையை கண்டுகொள்ளப் போவதில்லை.
இந்நிலையில் துக்ளக்தனமான செல்லாக் காசு அறிவிப்பினால் நாட்டை மீளமுடியாத பொருளாதாரப் புதைகுழி ஒன்றினுள் மோடி தள்ளி விட்டுள்ளார் என்பது ஆளும் வர்க்கத்தின் வாய்களில் இருந்தே வெளியாகத் துவங்கியுள்ளது.
செய்தி ஆதாரம் : வினவு

கருத்துகள் இல்லை: