செவ்வாய், 13 ஜூன், 2017

அதிமுக எம்.எல்.ஏ- ஒப்புதல் வாக்குமூலம் .. பணம் வாங்கியது உண்மைதான்! பணத்துக்காக நாம் பணத்தால் நாம் !


மின்னம்பலம் : கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குச் சசிகலா அணி சார்பில் கோடிக்கணக்கில் பணம்
வழங்கப்பட்டது’ என்று மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ பதிப்பை நேற்று ஜூன் 12ஆம் தேதி ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி வெளியிட்டது கண்டு தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
டைம்ஸ் நவ் டி.வி-யும் மூன் டி.வி-யும் இணைந்து நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் இது அம்பலமாகியுள்ளது. அதில் சரவணன் பேசியதை ரகசியமாக டேப் செய்து வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று இரவு திடீரென இறந்ததையடுத்த சில மணி நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதையடுத்து, 31.12.2016 அதிமுக-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர், 5.2.2017 அன்று சசிகலா அதிமுக சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கடுத்தச் சில நாள்களில் சசிகலா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரவிருந்த நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் டெல்லிக்குச் சென்றுவிட்டார். ஆளுநர் சென்னை திரும்பியதும், சசிகலா முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 8.2.2017 அன்று இரவு ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம், தான் கட்டாயத்தின் பெயரிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.
அதையடுத்து, அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர், தனக்கு ஆதரவான 121 எம்.எல்.ஏ-க்களைக் கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா அணியினர் பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைத்தனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் ரூ.2 கோடி ரொக்க பணமும், 4 கிலோ தங்கமும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதில் எதிர்ப்புத் தெரிவித்த 12 எம்.எல்.ஏ-க்களுக்குக் கூடுதலாகவும் பணம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கடந்த 13-2-2017 அன்று மாறுவேடத்தில் தப்பிவந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வலுக்கட்டாயமாக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எம்.எல்.ஏ-க்களிடம் தம்மை ஆதரிக்குமாறு சசிகலா கெஞ்சி வருகிறார்’ என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் சேர்ந்தார்.
அதன்பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் 14.2.2017 அன்று சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், 20.2.2017 அன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்குப் பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணியினர் பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது குறித்து பேசியதாக, ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இருந்து தப்பித்துவந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரவணன் பேசும் வீடியோ நேற்று ஜூன் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் பேசும் சரவணன் எம்.எல்.ஏ., ‘கூவத்தூர் முகாமில் எந்தத் தவறும் நடக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. அடிக்கவில்லை. மது இருந்துச்சு. கருணாஸ் குடித்தார். சசிகலா அணியில் இணைவதற்காக, சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏ-க்களை விமான நிலையத்திலேயே மறித்து பேருந்தில் ஏற்றும்போது ரூ.2 கோடி பேரம் பேசப்பட்டது’ என்றும், ‘பின்னர் எம்.எல்.ஏ. விடுதியில் ரூ.4 கோடி பேரம் பேசப்பட்டது’ என்றும், ‘கூவத்தூர் சொகுசு விடுதியில் வைத்து 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினர். அதில், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. தனியரசு, நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணமாக தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார்.
மேலும், எம்.எல்.ஏ-க்கள் இணைவதற்காக ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் சரவணன் எம்.எல்.ஏ. கூறிய வீடியோ பதிப்பை ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி நேற்று வெளியிட்டுள்ளது. அதேபோல், ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ-க்கள் எப்படி ஏலம் விடப்பட்டனர் என்பது குறித்தும் கனகராஜ் எம்.எல்.ஏ. கூறிய தகவலையும், நேற்று ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: