செவ்வாய், 13 ஜூன், 2017

கவிஞர் மகுடேசுவரன்: இங்கே எழுதப்படும் இந்தி எழுத்துகள் அச்சமூட்டுகின்றன!

எமக்கு ஓர் இந்திக்காரனைக் கண்டால்
அச்சமில்லை.
அவன்
வாழத்துடிக்கும் ஒருவன்.
தன் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுவதற்கு
உழைப்பைத் தர வந்துள்ளான்.
வியர்வைக்குத் தங்கக்காசு
கொடுக்கும் நிலமாயிற்றே...
பிழைத்துக்கொள்ளட்டும். எமக்கு வடபுலத்தார் கூட்டத்தைக் கண்டு அச்சமில்லை. அவர்கள்
இடம்பெயர்ந்து வந்தவர்கள்.
கூட்டு உழைப்பாளிகள்.
நினைவெல்லாம்
பிறப்பூரில் நிறுத்தியவர்கள்.
இங்கேயே தங்கிவிடும்
எண்ணமில்லாதவர்கள்.
என்றேனும் ஒருநாள்
கிளம்பிச் செல்வார்கள். எமக்கு
வட இந்தியன் செய்யும் தொழிலால்
அச்சமில்லை.
கைத்திறமும் பாடுகளும்
அவனுடையவை என்றால்
பயன்கள் எமக்கு.
தொழில் செய்யும் மனத்தில்
வேறெந்தத் தீங்கும் தோன்றாது.
எமக்கு


இந்திக் குடும்பங்களைக் கண்டு
அச்சமில்லை.
அவர்கள்
பிழைப்பைத் தேடி வந்தவர்கள்.
பிள்ளைகளைக் காக்கும்
நோக்குள்ளவர்கள்.
குடும்பத்தோடு இடம்பெயர்ந்தவனும்
இடிமழைக்கு
அஞ்சி நடுங்கும் குருவியும் ஒன்று.
தாமுண்டு
தம் வேலையுண்டு என்றிருப்பார்கள்.
எமக்கு
வடநாட்டு வண்டிகளைக் கண்டு
அச்சமில்லை.
சாலையை விட்டு விலகாமல்
தடம்பிடித்தபடி செல்பவை அவை.
வழியோரத்தில் நிறுத்தி
அடுப்பு மூட்டி
ஆக்கித் தின்றுவிட்டு
நிழலில் தூங்கியெழுந்து
முகங்கழுவிச் செல்கின்றார்கள்.
எமக்கு
அவர்கள் பேசிக்கொள்ளும்
இந்திமொழி குறித்தும் அச்சமில்லை.
அவை காற்றில் உதிர்ந்து
கரையும் சொற்கள்.
அவர்களுக்குள்
கலந்துரையாடுகிறார்கள்.
கேளாச் செவியுடைய எமக்கு
அச்சொற்கள் தேவையுமில்லை.
ஆனால், எமக்கு
இங்கே எழுதப்படும் இந்தி எழுத்துகள்
அச்சமூட்டுகின்றன.
அவை நாத்தொங்க அமர்ந்திருக்கும்
ஓநாய்க்கூட்டம்போல் தென்படுகின்றன.
அவ்வெழுத்துக் கொக்கிகள்
எம் எழுத்துகளை நெருக்குகின்றன.
அவற்றைச் சிறிதாக்கியுள்ளன.
எமக்குத் தெரியாத ஒன்றை
எமக்குத் தெரியாத ஒருவர்க்குத்
தெரிவிக்கின்றன.
எம்மை வைத்துக்கொண்டு
மறைவாய்ப் பேசுகின்றன.
முதுகைத் தடவித்தரும் ஆட்சியாளனின்
அன்பைப் பெற்றுள்ளன.
என்ன செய்துவிடமுடியும் உன்னால்
என்று எள்ளுகின்றன.
அதனால்தான் அஞ்சுகிறோம்.
**
- கவிஞர் மகுடேசுவரன்

கருத்துகள் இல்லை: