செவ்வாய், 13 ஜூன், 2017

ஐ ஐ டி போராட்டத்தில் கை முறித்த போலீஸ் ... காவல் ஆணையருக்கு நீதிமன்றம் ஆணை !

ஐஐடி போராட்டத்தில் பெண்ணின் கை முறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!";ஐஐடி முற்றுகைப் போராட்டத்தில் பெண்ணின் கையை முறித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, உள்துறைச் செயலாளர், மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மேற்படிப்பு மாணவர் சூரஜ் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஐ.ஐ.டியில் செயல்படும் ஏ.பி.வி.பி அமைப்பினர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்தும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கடந்த 31ம் தேதி ஐ.ஐ.டி வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கடுமையாக தாக்கினர்.


அதில் மாணவி இளவரசியின் கையை காவலர் ஒருவர் முறித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜசேகர் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர், 2 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாலிமர்

கருத்துகள் இல்லை: