வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் புறநகர் பேருந்து நிலையம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை வண்டலூருக்குப் பதிலாக நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உரிமை மாற்றும் பணி நடைபெற்று வருவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தின் தென் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னை வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 30-4-2013-ல் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்த ஜி.எஸ்.டி. மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டியுள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்குப் பதிலாக நந்திவரம் - கூடுவாஞ்சேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உரிமை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் பேருந்து நிலையம்
கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து முனையத்தின் நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் சுமார் 8 ஏக்கரில் துணை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 24 மாதங்களில் இப்பணிகள் நிறைவுபெறும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.   tamilthehindu.com

கருத்துகள் இல்லை: