செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

புதிய தலைமுறை பாஜக தலைமுறையாகிவிட்டது? ஜால்ரா .. மதிமாறன் பேச்சை திரித்த...


தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தன்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்கு எழுத்தாளர் வே. மதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார் “புதிய தலைமுறையில் திங்கள்கிழமை 8.30 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பான ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை மையமாக வைத்து, அதற்கு வலு சேர்ப்பது போல் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முற்போக்காளர்களையே மோடியின் ஆதராவாளர்களைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு சாட்சி நான் பேசும் போது ‘2000 ஆண்டுகளில் இந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில்தான் மிக மோசமான தலித் வன்முறை நிகழ்கிறது’ என்று சொன்னதில் பா.ஜ.க என்று சொன்னதை நீக்கிவிட்டிருக்கிறார்கள்.

‘இந்து மன்னர்கள் மட்டும் இருந்தபோது கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், வெள்ளைக்காரர்கள் வருகைக்குப் பிறகே அடையாளம் காணப்பட்டார்கள். மகாராஷ்டிரத்தில் இந்து பேர்ஷ்வா ஆட்சியின் மிகக் கொடூரமான தலித் விரோதத்தைச் சுட்டிக் காட்டி,
அதற்குப் பழி தீர்க்கதான் மகர் ஜாதி தலித் மக்கள் வெள்ளையர் ராணுவத்தில் பங்கெடுத்தனர்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘மகர் ரெஜிமெண்ட்’ என்ற ஒன்று இருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன்.
‘மாட்டுக்கறி உன்பதை இழிவாக பார்த்து அவமானப்படுத்திய இந்துக்கள் மத்தியில், அதே மாட்டுக்கறி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தலித் மக்களுக்கும் உறவை ஏற்படுத்தியது.
மாட்டுக்கறி சமைக்கத் தெரிந்தவர்கள் தலித் மக்கள் மட்டும்தான் என்பதால் அவர்களுக்கு உயரிய சமையல் கலைஞர்கள் வேலை கிடைத்தது.’ என்றும்
‘டாக்டர் அம்பேத்கரின் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்ற பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டும் தான் பேசப்படுகிறது. தலித் இயக்கங்களும் அப்படிதான் பேசுகின்றன.
ஆனால் பண்பாட்டு ரீதியாகத் தலித் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற செத்த மாட்டை அப்புறப்படுத்துவது, பிணம் எரி்ப்பது போன்ற இழிவான வேலைகளிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதுதான் அவர்கள் மீதான வன்முறையைத் தடுக்கமுடியும். தலித் விடுதலையும் சாத்தியப்படும்.
அதற்கு அம்பேத்கரின் அரசியலான தீவிர இந்து மத எதிர்ப்பும், ஜாதி எதிர்ப்பும் செய்ய வேண்டும். இந்து மத எதிர்ப்பின் மூலமாகதான் டாக்டர் அம்பேத்கர் இடஓதுக்கீடு போன்ற பொருளாதார உரிமைகளையே பெற்றுத் தந்தார்’ என்று இந்து, ஜாதி எதிர்ப்புக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருந்தேன்.
‘இந்து’ என்கிற வார்த்தையே வராமல் பா.ஜ.க. பாணியில் தொகுத்திருக்கிறார்கள்.
‘கையல் மலம் அள்ளும் கொடுமையை வைத்துக் கொண்டு சுதந்திரதின வாழ்த்துகள் சொல்வது, அந்த மக்களை அவமானப்படுத்துவது. மலம் அள்ளும் கொடுமை இந்தியாவின் பிரதான பிரச்சினையாக மாற வேண்டுமென்றால், அது முதலில் ஒட்டுமொத்த தலித் இயக்கங்களின் பிரச்சினையாக மாற வேண்டும்.
ஆனால், அதற்கு எல்லாத் தலித் இயக்கங்களும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. துப்புரவு பணியில் ஈடுபடுகிற சமூக மக்களுக்கான இயங்கங்கள் மட்டும்தான் தொடர் போராட்டங்களை நடத்துகின்றன.
பாஜக அரசுக்கு எதிரான குஜராத் தலித் மக்கள் எழுச்சி தலித் இயக்கங்கங்கள் உட்பட்ட முற்போக்காளர்க்கும் வழி காட்டுகிறது’ என்றேன்.
இந்து மதம், பாஜக, மோடி, குஜராத் என்ற சொற்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறது. அதனால் என்னுடைய பேச்சு மிகச் சுருக்கமாக ஒளிபரப்பனாது.
நீண்ட நேரம் பேசிய விசிக தலைவர் திரு. திருமாவளவன், பேராசிரியர் சுப.வீ அவர்கள். திரு. புனிதபாண்டியன், இன்னொருத்தர் பேச்சில்கூட மோடி, பாஜக, இந்து மதம் குறித்த எந்தக் கண்டனங்களும் இடம் பெறவில்லை.
இப்படியும் சொன்னேன். ‘காந்தி, நேருவைப் போல் பொதுதலைவராக டாக்டர் அம்பேத்கர் என்று புரிந்து கொள்ளப்படுகிறாரோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ –
இதையும் ஒளிபரப்பவில்லை புதியதலைமுறை.
மோடியின் கருத்தை முன் வைத்து அதற்கு வலு சேர்ப்பதுபோல், என் கருத்தை பயன்படுத்தி என்னை அவமானப்படுத்திய புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு என்னுடைய கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.
‘என்ன.. இனிமேல் என்னை அவர்கள் கூப்பிடமாட்டார்கள்?’
கூப்புடாட்டி போறாங்க.. எனக்கா இழப்பு?”.
எழுத்தாளர் வே. மதிமாறன் குறிப்பிடும் நிகழ்ச்சியை கீழே இணைக்கப்பட்டுள்ளது…   minnambalam.com 

கருத்துகள் இல்லை: