வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

புதியதலைமுறை’ என் கண்டனத்தை மறுத்து விளக்கம் தந்திருக்கிறார்கள்..மதிமாறன்

மரியாதைக்குரிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்,
நேற்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ”விளிம்பின் விடுதலை” என்ற நிகழ்ச்சியில் தங்கள் பேட்டி திருத்தி வெளியிடப்பட்டதாக தாங்கள் முகநூலில் எழுதியுள்ள பதிவு குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளவன் என்கிற அடிப்படையில் இந்த பதிவை எழுதுகிறேன்
தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள முதல் விடயம் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள் என்பது ஆனால் நிகழ்ச்சியின் தலைப்பே “விளிம்பின் விடுதலை” என்பது தான்.
70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதே நிகழ்ச்சியின் மையப் பொருள். அப்படி இருக்க பிரதமர் மோடி போன்ற ஒருவர் 70 ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களை சுடாதீர்கள் என்னை சுடுங்கள் என்றும் சொல்லும் இழி நிலையில் இந்த நாடும் சமூகமும் தலித் மக்களை வைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே பிரதமரின் அந்த உரையை முதலில் வைத்தோம்.

பிரதமரின் பேச்சு குறித்த எதிர்வினை பேட்டிகளின் தொகுப்பு அல்ல இந்த நிகழ்ச்சி. தங்களது முகநூல் பதிவிற்கு முந்தைய பதிவில் கூட தாங்களே தலித் மக்கள் விடுதலை அன்றும் இன்றும் என்று தான் குறிப்பிட்டிக்கிறீர்கள். ஆக நிகழ்ச்சியின் மையப் பொருள் மோடியின் உரையல்ல விளிம்பு நிலை மக்களின் நிலை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மேலும் 18 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் நிகழ்வில் களப்பணியாளர்கள் 15 பேரின் பேட்டிகளை பயன்படுத்தியுள்ளோம். அதில் சாதி இந்துக்களின் கண்ணோட்டம் மாறினால் மட்டுமே தலித் மக்களின் விடுதலை சாத்தியமாகும் என்று தாங்கள் மிக ஆணித்தரமாக பேசிய பகுதி அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எடிட் செய்தால் அந்த இடத்தில் WIPE எனப்படும் காட்சி மாற்றியை வைக்க வேண்டும் அப்படி உங்கள் பேட்டியில் ஒரு இடத்திலும் நீங்கள் காட்சி மாற்றியை பார்க்க முடியாது.
விளிம்பின் விடுதலை என்கிற நிகழ்ச்சி தலைப்பிற்கான வரைகலையை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அதில் மலக்குழியில் இருந்து ஒரு ராக்கெட் புறப்பட்டு செல்லும் இது தான் நிகழ்ச்சியின் இலக்கு.
மேலும் இனி என்னை நிகழ்ச்சிக்கு கூப்பிட மாட்டார்கள் என்றும் தாங்கள் பதிவிட்டு உள்ளீர்கள். விமர்சனங்களை முன் வைப்போருடன் என்றைக்கும் விவாதித்து அவர்களோடு இணைந்து பயணப்படவே இந்த 6 ஆண்டுகளில் புதிய தலைமுறை விரும்பியிருக்கிறது இனியும் விரும்பும், நீங்கள் சொன்னது போல் உங்களைப் போன்றோரை இழப்பது எங்களுக்கே இழப்பாகும்.
எங்களின் இந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளித்தால் தாங்கள் இதனை மீள்பதிவாக தங்கள் முகநூலில் வெளியிடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
– தியாகச் செம்மல்
உள்ளீட்டுப் பிரிவு ஆசிரியர் / நிகழ்ச்சி
*
//மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள்// என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஏனென்றால் என்னிடம் அப்படிக் கேட்கவில்லை.
தலித் மக்களின் வாழ்க்கையை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு 3 நிலைகளில் அணுகியிருந்தேன். நிகழ்காலத்தில் மோடி ஆட்சியின் தலித் விரோதம் குறித்தும் பேசியிருந்தேன்.
பரவாயில்லை. இருக்கட்டும்.
இந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருக்கிற பொறுப்பிறக்காகவும் அன்பிற்காகவும் மீண்டும் வார்த்தைக்கு வார்த்தை லாவணி பாட விரும்பவில்லை.
ஆக, ஒரு பங்களிப்பாளரின் அதிருப்பதியை அலட்சிப்படுத்தாமல் பொறுப்புடன் பதில் சொன்னமுறை சிறப்பு. ஊடகத்துறையில் இப்படி ஒரு அணுகுமுறை புதுசு. தோழர் தியாகச் செம்மலுக்கு நன்றி.
அதற்காக இதில் சொல்லப்பட்ட விளக்கத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. முழுவதுமாக மதிக்கிறேன்.
-வே. மதிமாறன்.

கருத்துகள் இல்லை: