செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார் ... இன்னுமா கூத்து ?


ம.ந.கூ., தலைவர்களுடன் சந்திப்பு விஜயகாந்த் திடீர் ஒப்புதல் நீண்ட அலைக்கழிப்பிற்கு பின், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்கு, விஜயகாந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், ம.ந.கூ., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. தே.மு.தி.க.,விற்கு, 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற
முடியவில்லை.உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், 'டிபாசிட்' இழந்தார். இதனால், 'ம.ந.கூ., கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர்.
அதே நேரம், கூட்டணி முறிவு குறித்து எந்த அறிவிப்பையும் விஜயகாந்த் இன்று வரை வெளியிடவில்லை. இருந்த போதும், தன்னை சந்திக்க நேரம் கேட்ட, ம.ந.கூ., தலைவர்களைசந்திக்க, விஜயகாந்த் நேரம் அளிக்காமல் இருந்தார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கும் சூழ்நிலையில், ம.ந.கூ., தலைவர்களை சந்திக்க, விஜயகாந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.'வரும் 25ம் தேதி, என் பிறந்த நாள் வருகிறது; அதன் பின், தலைவர்களை சந்திக்கிறேன்' என, விஜயகாந்த், ம.ந.கூ., தலைவர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.இதனால், ம.ந.கூ., தலைவர்கள் சந்தோஷம் அடைந்து உள்ளனர்.


லட்டு வாங்க ஆளில்லை!

சென்னைகோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, கட்சியின் மாநில நிர்வாகிகள் துவங்கி, அடிமட்ட நிர்வாகிகள் வரை, அங்கு வருவர். நேற்றும் வழக்கம் போல், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு லட்டு வழங்கினார். ஆனால், இந்த விழாவில், மொத்தமாக, 50 பேர் கூட இல்லை. மகளிர் அணியினர், ஐந்து பேர் மட்டுமே பங்கேற்றனர்.
தட்டு நிறைய லட்டுகள் இருந்தும், அதை வாங்கி சுவைக்க ஆள் வராததால், விஜயகாந்த், 'அப்செட்' ஆனார். - -நமது நிருபர் --

கருத்துகள் இல்லை: