வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வருகின்ற 22 ஆம் தேதி கலைஞர் தலைமையில் கண்டன கூட்டம்... ஜனநாயகம் படும் பாடு

சட்டப்பேரவையில் இன்று (17-08-2016) அனைத்து திமுக உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்பட திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு, அவையில் இருந்து வெளியேற்றப் பட்டனர். இதனையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்கு அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காதவாறு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சபாநாயகரின் உருவப்பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


இதுகுறித்து விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான  மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’சபாநாயகருடைய சர்வாதிகார தீர்ப்பைப் பற்றி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாங்கள் விவாதித்தோம். அப்படி விவாதித்த நேரத்தில் நாங்கள் உணர்ந்துகொண்டது, இந்த சட்டமன்ற கூட்டத்தொடரைப் பொறுத்த வரையில் ஒருமுறை கூட எங்களை அவர்கள் வெளியேற்றவில்லை. அதுமட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினரைக் கூட பெயர் சொல்லி இதுவரை அவர்கள் வெளியேற்றவில்லை. ஆனால் திடீரென்று ஏற்கனவே முடிவு செய்த அடிப்படையில், ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுகிறோம் எனச் சொல்லிவிட்டு உடனடியாக ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒரு அறிவிப்பு அதாவது ’ஒருவார காலம் சஸ்பெண்ட்’ செய்யக்கூடிய ஒரு தீர்மானத்தை அவை முன்னவரைக் கொண்டு முன்மொழிய வைத்து அதை அவர்கள் இன்றைக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தலைவர் கலைஞரிடத்தில் இந்த செய்திகளை எல்லாம் சொல்லி இருக்கிறோம்.

;தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் இதைக் கண்டிக்ககூடிய வகையில் ’சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்கிற தலைப்பில் கூட்டங்களை ,பிரச்சாரங்களை நடத்திட வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதனுடைய முதல் நிகழ்ச்சியாக துவக்க நிகழ்ச்சியாக வருகின்ற 22 ஆம் தேதி அதாவது ஜெயலலிதா அவர்கள் எங்களையெல்லாம் சட்டமன்றத்தில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து காவல்துறை மானியத்தை தாக்கல் செய்கிற 22 ஆம் தேதி தலைவர் கலைஞர் உட்பட எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய வகையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் வட சென்னை பகுதியில் நடைபெற இருக்கின்றது’’என்று தெரிவித்தார்.   nakkeeran.in

கருத்துகள் இல்லை: