வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

மாடுகளை ஏற்றிய வாடகை வாகன ஓட்டுனர் கொலை! RSS பசுநேசன்களால் பாஜக ஓட்டுனர் கொலை


பசுக்களைச் சந்தைக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்கிறவர்களையும், இறந்த மாட்டின் தோலை உரிக்கிறவர்களையும் பசு பாதுகாப்பு இயக்கத்தினர் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள், கட்டி வைத்து தாக்குகின்றனர். இது நாடு முழுக்க கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியதோடு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் உருவாக்கியது. இது பற்றி மவுனமாக இருந்த மோடி, சில நாட்களுக்கு முன்னர் “தாக்குவதாக இருந்தால் என்னைத் தாக்குங்கள். தலித்துக்களை தாக்காதீர்கள்” என்றார்.
இன்னொரு பக்கம் குஜராத் மாநிலத்தின் உனாவில் தலித்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசியல் வடிவம் எடுத்து, குஜராத் பாஜக-வை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் மாடுகளை ஏற்றி சந்தைக்கு விற்கச் சென்ற பாஜக நிர்வாகியை இந்து அமைப்பினர் கம்பியால் தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த கேஜிகே கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் பூஜாரி வாடகை வேன் ஓட்டுநராக இருக்கிறார். 29 வயதே ஆன பிரவீன் பூஜாரி பாஜக-வில் அந்தப் பகுதி செயலாளராக இருக்கிறார். கடந்த புதன்கிழமை இரவு அக்ஷய் தேவடிகா என்பவருடன் இணைந்து மூன்று மாடுகளைச் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றியபோது ‘ஜாகர்ன வேதிகே’ என்ற அமைப்பின் தலைவர் காந்த் தலைமையில் 25 பேர் வந்து மாடுகளை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரை கம்பியால் தாக்க, பிரவீன் பூஜாரி மற்றும் அக்ஷய் தேவடிகா ஆகியோர் படுகாயமடைந்தனர். நீண்ட நேரம் கழித்து வந்த காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்க்க, பிரவீன் பூஜாரி இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தார்கள். படுகாயமடைந்த அக்ஷய் தேவடிகா படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்தக் கொலை தொடர்பாக 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் பசு பாதுகாப்பியக்கம் என்னும் பெயரில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியா முழுக்க தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்து கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளாக கூறிக் கொள்ளும் இந்துத்துவ அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் இந்த தாக்குதலை நடத்தி வந்த நிலையில், இந்த அமைப்புகள் செல்வாக்குச் செலுத்தும் ஆளும்கட்சியைச் சார்ந்தவரின் உயிரே இப்போது பலியாகி உள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.  மின்னம்பல.கம

கருத்துகள் இல்லை: