சில்லறை வர்த்தகம்.. 'வால்மார்ட்' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது பார்தி நிறுவனம்!
டெல்லி: இந்தியாவில் சங்கிலித் தொடர் கடைகளை திறப்பது தொடர்பாக அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துடன் பார்தி எண்டர்பிரைசஸ் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.சில்லரை வர்த்தகத்தில் 51 விழுக்காடு அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி கொடுத்தது. இதை சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வால்மார்ட் கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்துடன் ஏற்கெனவே கூட்டு சேர்ந்திருக்கும் பார்தி நிறுவனம் இப்பொழுது சில்லரை வர்த்தக முதலீடு பற்றி பேசி வருகிறது.வால்மார்ட்டும் பார்தி நிறுவனமும் 50-50 என்ற விகித முதலீட்டு அடிப்படையில் சங்கிலித் தொடர் கடைகளை இந்தியாவில் திறக்கலாம் என்பது பார்தி நிறுவனம் முன்வைத்திருக்கும் யோசனை.
இது தொடர்பாக பார்தி நிறுவன துணைத் தலைவரான ராஜன் பார்தி மிட்டல் கூறுகையில், பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டோம். இருவரும் சமபங்கு பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து பேசிவருகிறோம் மிகவும் நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகாலமாக வால்மார்ட் நிறுவனத்துடன் நல்ல உறவை பேணி வந்திருக்கிறோம். இப்போதும் நம்பிக்கை இருக்கிறது என்று கூரியுள்ளார்.
"300 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்கிறது வால்மார்ட். சில்லரை வர்த்தக சந்தையில் 11 விழுக்காடு அந்நிறுவனத்திற்குரியது. 2 மில்லியன் வேலை வாய்ப்புகளை அவர் உருவாக்கியிருக்கின்றனர்" என்றும் வால்மார்ட் மீது நம்பிக்கை மழை பொழிகிறார் மிட்டல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக