திங்கள், 1 அக்டோபர், 2012

5ம் தேதி மனிதச் சங்கிலி,கருப்பு சட்டை திமுக தீர்மானம்!

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடியது. என்னவோ, ஏதோ என்று டெல்லி முதல் சென்னை வரை அத்தன பேரும் பரபரப்போடும், படபடப்போடும் காத்திருக்க, ஒரு சாதாரண மனிதச் சங்கிலிப் போராட்டத்தை அறிவித்து கூட்டத்தை முடித்துள்ளது திமுக.
மருந்துக்குக் கூட ஒரு பரபரப்பான முடிவையும் இந்தக் கூட்டம் வெளியிடவில்லை.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். வரலாறு காணாத ஊழல் புகார்கள், மோசடிப் புகார்கள், தொடர்ந்து ஏற்றப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி என மத்திய அரசு மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துத்தான் சமீபத்தில் மமதா பானர்ஜி கோபித்துக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறினார். இதனால் திமுகவுக்கு தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கியத்துவம் கூடியுள்ளது.
எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நடத்திய பாரத் பந்த் போராட்டத்தில் திமுகவும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. இதையடுத்து நாராயணசாமியை சென்னைக்கு அனுப்பி வைத்த பிரதமர் மன்மோகன் சிங், திமுகவுக்கு காலியாகவுள்ள 2 மத்திய கேபினட் அமைச்சர்களுக்கான பெயர்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் இதை கருணாநிதி நிராகரித்து விட்டார். இதனால் காங்கிரஸ் தரப்பு மேலும் அதிர்ச்சி அடைந்துளளது.
மமதாவைப் போல திமுகவும் வெளியேறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அப்படியெல்லாம் நட்டாற்றில் விட மாட்டோம் என்பதைப் போல கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும் திமுகவுக்குள் காங்கிரஸை விட்டு விலகிப் போக வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்றைய செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.
சரி, ஏதோ வரலாறு காணாத முடிவை எடுக்கப் போகிறார்கள் போல என்று நினைத்து டெல்லி வட்டாரத்தில் ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
வந்தார் அழகிரி -குஷ்புவும் பங்கேற்றார்
சமீப காலமாக நடந்த திமுக முக்கியக் கூட்டங்களையெல்லாம் புறக்கணித்து வந்த மு.க.அழகிரி இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக அவர் நேற்றே சென்னைக்கு வந்து விட்டார்.
அவர் தவிர மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும், மூத்த தலைவர்களும், செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். முக்கியமாக நடிகை குஷ்பு, பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி - இவரும் ஒரு செயற்குழு உறுப்பினராம் - உள்ளிட்டோரும் வந்து பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறதோ என்ற பரபரப்பில் திமுகவினரும் இருந்தனர். ஆனால் உப்புச் சப்பில்லாமல் ஒரு தீர்மானத்தைப் போட்டு கூட்டத்தை முடித்து விட்டது திமுக.
கூட்டத்தில் திமுகவினர் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனராம். பிறகு மின்வெட்டு குறித்தும் பேசினார்களாம். மத்திய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாம்.
அத்தனையும் பேசி முடித்த பின்னர் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு கருணாநிதியே தலைமை தாங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: