விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் பத்மபிரியன் (14) கடந்த செப்டம்பர் 24 அன்று காலை தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கம்மல் திருட்டு பற்றி விசாரிக்க அங்கே வந்த திருத்தங்கல் காவல் துறையினர் அந்த சிறுவர்களிடம் அவர்கள் யார் என்ன விபரம் என்று கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் என்ன சாதி என்பதை விசாரித்துள்ளார்கள். சிறுவன் பத்மபிரியன் குறவர் சாதி எனத் தெரிய வரவே மற்றவர்களை அனுப்பி விட்ட காவல் துறையினர் அவனை மாத்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் திருடியதை ஒத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். சிறுவன் மறுக்கவே கடுமையாகத் தாக்கி உள்ளனர். மண் நிரப்பப்ப‍ட்ட பைப்புகள், கிரிக்கெட் ஸ்டெம்புகள், தென்னை மட்டை இவற்றால் நாள் முழுக்க அடித்து அவனை ஒத்துக்கொள்ள வைக்க முயன்றனர். ஸ்டேஷனுக்கு வந்து போகும் போலீசு வெறியர்கள் அச்சிறுவனை மாறி மாறி கன்னத்தில் அறைந்துள்ளனர். வலது கண்ணில் பார்வை போகும் வரை அவர்களது தாக்குதல் நிறுத்தப்படவே இல்லை.
“எனக்கு ஒன்றும் தெரியாது” என அப்பிஞ்சு மறுத்த போது, “நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம்  திருடியிருப்பாய்” என்று சொல்லிச் சொல்லியே தாக்கி உள்ளனர். மேலும் அவன் மறுக்கவே மின்சாரத்தால் சூடு வைக்கப் போவதாக மிரட்டியும் உள்ளனர். மாலை காவல்துறையினர் வீட்டில் அவனை விட்டபோது உடல் முழுதும் காயமாக இருந்ததாம். ஆனால் அந்த காயத்தை விட அவனை வார்த்தைகளால் அவமானப்படுத்தியதைத்தான் பெரிய காயமாகப் பார்க்கிறார் சிறுவனின் தந்தை கணேசன்.
திருத்தங்கல் நகராட்சியில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றும் கணேசன் இதுபற்றி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனுச் செய்துள்ளார். திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் (குற்றம்)செல்லையா மற்றும் எழுத்தர் சுப்புராம் என்ற இரு ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறார். முதலில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மபிரியன் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
முன்னர் சேலம் மாவட்டத்தில் ஆசிரியரது பிரம்படியால் கண் பார்வை போன தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தனம், இப்போது போலீசால் பார்வை பறிபோன பத்மபிரியன், ஹரியாணாவில் ஜாட் சாதியின் காமவெறிக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண், படிக்கப் போன ஒரே காரணத்துக்காக ஊர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்ட கயர்லாஞ்சியின் போக்மாங்டே குடும்பத்தினர், மேலவளவு, திண்ணியம், பரமக்குடி எனத் தொடர்கிறது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலின் பட்டியல். நீதிமன்றங்களின் ஆதிக்கசாதி மனப்பான்மைக்கு வெண்மணி உள்ளிட்ட பல தீர்ப்புகளை ஆதாரங்களாகக் காட்ட முடியும். கவுரவக் கொலையை உச்சநீதி மன்றமே ஆதரிக்கிறது.
குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது வெள்ளையர்கள் நம்மை ஆண்டபோது வகுத்த சட்டம். தமிழகத்தின் கள்ளர் சாதி, குறவர் சாதி, வட இந்தியாவின் குஜ்ஜார்கள், சந்தால் பழங்குடியினர் என இந்தியா முழுதும் இப்படி பட்டியலிடப்பட்ட சாதிகளின் ஆண்களை குலத் தொழில் திருடுதல் என்பதாக காவல்நிலையத்தில் இராத் தங்க வைத்தது காலனிய ஆட்சியின் போலீசு. இன்று காலனிய ஆட்சி போய்விட்டாலும் அந்த மக்களை அப்படி நடத்துவது பெரிதும் மாறிவிட்டாலும், நரிக்குறவர் போன்ற எளிய மக்களை இன்னமும் அத்தகைய அடிமைத்தனத்துடன்தான் நடத்துகிறார்கள்.
இன்றைக்கு திருடுதல் என்பது கார்ப்பரேட் ஊழலாக தலையெடுத்து நிற்கிறது. நிலக்கரி திருடனும், ஸ்பெக்ட்ரம் திருடனும் ஜாலியாக வெளியே உலா வருகிறார்கள். தப்பே செய்யாதவன் போல பகுமானமாக பேசுகிறார்கள். ஆனால் பிக்பாக்கெட் கூட அடிக்கத் தெரியாத பத்மபிரியன் குற்றவாளியாகி தண்டிக்கவும் பட்டு விட்டான்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகளை விழுங்கிய துரை தயாநிதியும், பிஆர்பி-யும் சொகுசாக இருக்க, சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட பத்மபிரியன் குறவர் சாதி என்ற காரணத்துக்காக பார்வையை இழந்திருக்கிறான். கண்மாயை காணாமல் அடித்தவனுக்கு கோழிக்கறி விருந்து, கம்மலை பார்க்காதவனுக்கு கூட கண்ணை பறித்தல். வர்க்க சமூகத்தின் நீதி பிறகு எப்படி இருக்கும்.